Home நாடு பக்காத்தான் – தேசிய முன்னணி – இணைந்த கூட்டணி அரசாங்கமா?

பக்காத்தான் – தேசிய முன்னணி – இணைந்த கூட்டணி அரசாங்கமா?

671
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 112 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கிருப்பதாகவும் அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கான வலுவைக் கொண்டிருப்பதாகவும் பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார்.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குள்ளாக யார் பிரதமராவதற்கும் அடுத்த ஆட்சி அமைப்பதற்கும் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருக்கிறார்கள் என்ற விவரம் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டுமென மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அடுத்த ஆட்சி அமைப்பதற்குத் தயார் என டான்ஸ்ரீ மொகிதின் யாசினும் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்திற்கு அருகில் அமைந்துள்ள செரி பசிபிக் தங்கும் விடுதிக்கு அம்னோ-பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று காலை முதல் வருகை தரத் தொடங்கியிருக்கிறார்கள்.

“அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் எண்ணிக்கையும் இருக்கிறது! நாட்டை வழிநடத்த எனக்கொரு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” – என அன்வார் இப்ராகிம் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) காலை சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி, டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இல்லத்திற்கு வருகை தந்தது முதலே சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணி மொகிதின் யாசின் பிரதமராக ஆதரவு தெரிவிக்கும் என்ற ஆரூடங்கள் எழுந்தன.

அதற்கேற்ப, பின்னர் பத்திரிகை அறிக்கை ஒன்றை விடுத்த அபாங் ஜொஹாரி ஜிபிஎஸ் கூட்டணி, பெரிக்காத்தான், தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல், ஜிஆர்எஸ் இணைந்த கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்கும் என அறிவித்தார்.

ஆனால், அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடியோ தேசிய முன்னணி ஜிபிஎஸ் கூட்டணியுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என மறுத்தார்.

இதற்கிடையில் சாஹிட் பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல்கள் அம்னோவில் இருந்தும், தேசிய முன்னணி உறுப்பியக் கட்சித் தலைவர்களிடம் இருந்தும் எழுந்திருக்கின்றன.

இன்று பக்காத்தான் தலைவர்களுக்கும் தேசிய முன்னணி கூட்டணித் தலைவர்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் அதைத் தொடர்ந்து இரு கூட்டணிகளும் இணைந்து அடுத்த ஆட்சியை அமைக்குமா என்ற பரபரப்பும் எழுந்துள்ளது.