Home Photo News அன்வார் அமைச்சரவையில் இந்தியர்களுக்கு வாய்ப்பு? ஏற்படப் போவது  ஏமாற்றமா? மகிழ்ச்சியா?

அன்வார் அமைச்சரவையில் இந்தியர்களுக்கு வாய்ப்பு? ஏற்படப் போவது  ஏமாற்றமா? மகிழ்ச்சியா?

592
0
SHARE
Ad

(பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது அன்வார் இப்ராகிம் அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவை. அன்வார் அமைச்சரவையில் இந்தியர்களுக்கு வாய்ப்பு? ஏற்படப் போவது  ஏமாற்றமா? மகிழ்ச்சியா? விவாதிக்கிறார் இரா.முத்தரசன்)

பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நியமிக்கப்பட சில நாட்கள் தாமதம் ஏற்பட்ட வேளையில் சூரியனை நோக்கி வேண்டுதல் நடத்தியவர்கள் சிலபேர்.  ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தியவர்கள் சில பேர். அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களிலும் வலம் வந்தன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அன்வாருக்கும் இடையில் டுவிட்டர் தளத்தில் வாழ்த்துப் பரிமாற்றங்கள் நடைபெற்ற வேளையில் தமிழ் நாட்டிலும் அன்வார் பிரதமரான செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் பிரதானப்படுத்தப்பட்டன.

#TamilSchoolmychoice

தந்தி தொலைக்காட்சி அலைவரிசையின் செய்தியாளர் ஹரிஹரன் அன்வாருடன் முன்பு ஒருமுறை நடத்திய நேர்காணலின் சில பகுதிகள் மறு ஒளிபரப்பாயின.

வாக்களிப்பு விழுக்காடுகளின் புள்ளிவிவரங்கள்படி இந்தியர்கள்-சீனர்களின் பெரும்பான்மை வாக்குகள் – 90 விழுக்காட்டுக்கும் மேல் – பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கு கிடைத்திருக்கின்றன- அன்வார் பிரதமராவார் என்ற நம்பிக்கையால்!

இந்தியர்களைப் பொறுத்தவரை அன்வார் அனைத்து சமூகங்களுக்கும் சரிசமமான – நியாயமான – திட்டங்களைச் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கைக் கீற்றுகள் பரவத் தொடங்கியிருக்கின்றன.

ஆனால், அவரின் எண்ணங்களை, விருப்பங்களைச் செயல்படுத்தக்கூடிய வலுவான அமைச்சரவை அமைய வேண்டும். அதில் இடம் பெறப் போகும் அமைச்சர்கள் யார்? அவர்கள் எந்த அமைச்சுப் பொறுப்புகளில் அமரப் போகிறார்கள்? தேசிய முன்னணி சார்பில் இடம் பெறப் போகும் அமைச்சர்களில் மஇகாவுக்கும் இடம் வழங்கப்படுமா? என்ற விவாதங்களும், கோரிக்கைகளும் இந்திய சமுதாயத்தில் எழத் தொடங்கியிருக்கின்றன.

2018 – 4 அமைச்சர்கள் என்ற கண்கட்டு வித்தை மீண்டும் வேண்டாம்

கடந்த காலத்தில், கலந்துரையாடல் ஒன்றில் அன்வார் இப்ராகிமிடம் கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது. அப்போது தேசிய முன்னணி அரசாங்கத்தில் ஒரே ஒரு இந்திய அமைச்சர் பதவி வகித்த நேரம்.

“நீங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியர்களுக்கு இரண்டு அமைச்சர்கள் வழங்குவீர்களா?” என்பதுதான் அந்தக் கேள்வி.

அன்வார் பின்வருமாறு பொருள்படும்படி பதிலளித்தார்:

“உங்கள் இந்திய சமுதாயப் பிரச்சனை என்ன? கூடுதல் எண்ணிக்கையிலான அமைச்சர்களா? அல்லது நிலவும் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வா? நான் ஆட்சிக்கு வந்தால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முற்படுவேனே தவிர, கூடுதல் எண்ணிக்கையிலான அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதன் மூலம் இந்திய சமூகத்தின் பிரச்சனைகளைத் தீர்த்துவிட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அமைச்சராக வருபவர் எல்லா சமூகங்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க வேண்டுமே தவிர, ஒரு சமூகத்தின் பிரச்சனைக்கு மட்டும் தீர்வு காண்பவராக அமைச்சர் செயல்படக்கூடாது”

அன்வார் சொன்னது 2018 பொதுத் தேர்தல் முடிந்ததும் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பிரதிபலித்தது. துன் மகாதீர் அமைச்சரவையில் 4 இந்திய அமைச்சர்கள் இடம் பெற்றனர். இந்திய சமூகம் குதூகலித்தது. துள்ளிக் குதித்தது. தங்களின் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு பிறந்து விட்டதாகப் பெரிதும் நம்பியது.

ஆனால், 4 அமைச்சர்கள் இருந்தும், இந்தியர்களுக்கான மெட்ரிகுலேஷன் இடங்களுக்கான எண்ணிக்கை குறைந்தது. நஜிப் காலத்தில் பிரதமர் துறை அமைச்சின் கீழ் வலுவுடன் இருந்த செடிக், மித்ரா எனப் பெயர் மாற்றம் கண்டு ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் நகர்த்தப்பட்டது. இதனால் மித்ரா மீதான பிரதமர் கவனம் இல்லாமல் போனது. அதன் செயல்பாடுகளும் திட்டங்களும் குறைகூறல்களுக்கு இலக்கானது.

தேசிய முன்னணி வழங்கிய சலுகைகள், நிதி ஒதுக்கீடுகளை விட கூடுதலாக எதுவுமே பக்காத்தான் அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை.

அதைவிட முக்கியமாக, மஇகாவின் சார்பில் இருந்த ஒரே ஓர் அமைச்சர் ஆண்டாண்டு காலமாக செய்ய முடிந்ததை, 4 இந்திய அமைச்சர்கள் இருந்தும் பக்காத்தான் அரசாங்கத்தால் இந்திய சமூகத்திற்கு செய்ய இயலவில்லை.

பக்காத்தான் அரசாங்கம் கவிழ்ந்த பின்னர், மீண்டும் மஇகா வழியாக- ஒரே அமைச்சர் – என்ற நடைமுறை தொடர்ந்தது. இந்திய சமூகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் பொறுப்பு – மனிதவள அமைச்சர் என்ற முறையில் டத்தோஸ்ரீ சரவணன் தோள்களின் மீது அந்தச் சுமை சுமத்தப்பட்டது.

எந்த அமைச்சு என்பது முக்கியம்!

எத்தனை அமைச்சர்கள் இந்தியர்களுக்கு என்பதைவிட, எந்தெந்த அமைச்சுக்கு அவர்களை நியமிக்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாக இந்திய சமூக அமைப்புகள் விடுத்து வரும் கோரிக்கையாகும்.

உதாரணமாக, இந்தியர்களின் பெரும்பிரச்சனையான கல்விப் பிரச்சனையைக் கையாள, இந்தியர் ஒருவர் அந்த அமைச்சில் துணையமைச்சராக நியமிக்கப்பட வேண்டுமென்பது இந்திய சமூகத்தின் வலியுறுத்தலாகும்.

டத்தோ ப.கமலநாதன் கல்வி துணையமைச்சராகப் பணியாற்றிய போது அவரின் செயல்பாடுகளில் சில சர்ச்சைகள் இருந்தாலும், பல தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சனைகளை அவரால் தீர்த்து வைக்க முடிந்தது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். மெட்ரிகுலேஷனுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தன. 200-ஆம் ஆண்டு தமிழ்க் கல்வி நிறைவுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தமிழ்க் கல்வி தொடர்பில் தமிழக அரசாங்கத்துடன் சில தொடர்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

எனவே, இந்த முறையும் கல்வி அமைச்சில் இந்தியர் ஒருவரை துணை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அன்வார் இப்ராகிம் கவனிப்பார் என நம்புவோம்.

இந்தியர்களின் பிரச்சனைகளை அதிகம் கையாளும் அமைச்சுகளில் இந்திய அமைச்சர்களை நியமிப்பது இந்திய சமூகத்தின் தீர்வுக்கான ஒரு வழிமுறையாகும்.

இந்திய சமூகத்தின் பங்கெடுப்பு அதிகம் இல்லாத ஓர் அமைச்சில் இந்தியரை நியமிப்பதால் இந்திய சமூகத்திற்கு எந்தவித இலாபமும் இல்லை.

என்னதான் ஓர் அமைச்சர் அனைத்து சமூகங்களுக்கும் உரியவர் எனக்கூறப்பட்டாலும், ஆண்டாண்டுகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கும் இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கையாளும் சில அமைச்சுகளில் இந்தியர்களை அமைச்சர்களாகவோ, துணையமைச்சர்களாகவோ நியமிப்பது சிறந்த முடிவாக இருக்கும். கல்வி அமைச்சு, சமூக நல அமைச்சு ஆகியவற்றை அதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

அன்வார் இப்ராகிமின் புதிய அமைச்சரவை, இந்திய சமூகத்தின் நீண்டகால கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வண்ணம் மகிழ்ச்சியை ஏற்படுத்துமா?

அல்லது மீண்டும் இந்திய சமூகத்திற்கு ஏமாற்றம்தான் ஏற்படுமா?

– இரா.முத்தரசன்