Home நாடு 2022-ஆம் ஆண்டின் 10 ஊடகப் பிரபலங்கள் # 1 – மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா

2022-ஆம் ஆண்டின் 10 ஊடகப் பிரபலங்கள் # 1 – மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா

470
0
SHARE
Ad

(2022-ஆம் ஆண்டில் மலேசியாவில்  ஊடகங்களை ஆக்கிரமித்த 10 மலேசியப் பிரபலங்கள் யார்? எந்தக் காரணங்களால் அவர்களுக்கு அந்தப் பிரபல்யம் கிடைத்தது? விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

பல இன்பகரமான-துன்பகரமான – நினைவுகளுடன் நம்மைக் கடந்து சென்றிருக்கிறது 2022-ஆம் ஆண்டு. இந்த ஆண்டில் ஊடகங்களில் அதிக அளவில் இடம் பெற்ற – விமர்சிக்கப்பட்ட – விவாதிக்கப்பட்ட – 10 மலேசியப் பிரபலங்கள் யார்? ஏன் அவர்களுக்கு இத்தகைய பிரபல்யம் கிடைத்தது? பார்ப்போம்!

மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா

மலேசிய வரலாற்றில் மாமன்னர் ஆன பின், அடுத்தடுத்து மூன்று பிரதமர்களை நியமித்த சாதனையை நிகழ்த்தியவர் நடப்பு மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தபா பில்லா ஷா. தனது ஐந்தாண்டுகால ஆட்சி முடிவதற்குள்ளாக இதுவரை நான்கு பிரதமர்களை அவர் பார்த்து விட்டார்.

#TamilSchoolmychoice

2019-இல் அவர் மாமன்னரானபோது பிரதமராக இருந்தவர் துன் மகாதீர். அவர் விலகிய பின்னர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமரானார். ஒரு கட்டத்தில் முஹிடினும் பதவி விலக இஸ்மாயில் சப்ரி 15ஆவது பொதுத்தேர்தல் வரை பிரதமராக நீடித்தார்.

அந்தத் தேர்தலில் தேசிய முன்னணி அடைந்த மோசமான தோல்வியைத்  தொடர்ந்து நாட்டின் 10-ஆவது பிரதமராக யார் நியமிக்கப்படப்போகிறார் என்ற பரபரப்பினால் அனைத்து ஊடகப் பார்வைகளும் மாமன்னரை நோக்கியே நிலைகுத்தி நின்றன.

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையிலும் அரண்மனையைவிட்டு வெளியே வந்து குழுமியிருக்கும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது, அவர்களுடன் அமைதியாக அளவளாவுவது, அவர்களுக்கு உணவு வழங்குவது போன்ற காரணங்களுக்காகவும் ஊடகங்களில் அதிகளவில் இடம்பெற்றார் மாமன்னர்.

பகாங் மாநிலத்திலும், தான் செல்கின்ற மற்ற இடங்களிலும்,  அடிக்கடி காரை நிறுத்தி சாதாரண உணவகங்களுக்கு மனைவியுடன் சென்று மாமன்னர் உணவருந்தி மகிழ்வது – ஊடகங்களைக் கவர்ந்த அவரின் இன்னொரு சிறப்பு குணாதிசயம்.

இதன் காரணமாக, தன் நடவடிக்கைகளால் ஊடகங்களில் அதிகம் இடம் பெற்றவர்களில் முதலாமவர் நமது மாமன்னர்!