லாஸ் ஏஞ்சல்ஸ் : 2022-ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த படங்களுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) அறிவிக்கப்பட்டன.
ஆங்கிலப் படமான Everything Everywhere All at Once என்ற படத்தில் நடித்த மலேசிய சீன நடிகை மிச்சல் இயோ சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். சிறந்த நடிகை பிரிவுக்காக பரிந்துரைக்கப்படும் முதல் ஆசிய நடிகையும் மிச்சல் இயோ ஆவார்.
இதற்கு முன்னர் பல ஆசியப் படங்கள் பல பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு வெற்றியும் பெற்றிருந்தாலும் சிறந்த நடிகைக்கான விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் முதல் ஆசிய நடிகை மிச்சல் இயோ ஆவார்.
Everything Everywhere All at Once என்ற ஆங்கிலப் படம் பல்வேறு பிரிவுகளில் 11 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை ஆஸ்ட்ரோ-கோ அலைவரிசையில் இலவசமாகப் பார்த்து மகிழலாம்.
ஆர்ஆர்ஆர் படப் பாடல் ஆஸ்கார் விருதைப் பெற்றுத் தருமா?
இதே ஆஸ்கார் விருதுகளுக்கானப் பரிந்துரைப் பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறந்த அசல் (ஒரிஜினல்) பாடலுக்கான பிரிவில் நாட்டு நாட்டு பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் அனைத்துலக விருதளிப்பு விழாவில் சிறந்த பாடலுக்கான விருதைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் ஏ.ஆர். ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றார். ‘ஸ்லம் டோக் மில்லியனேர்’ என்ற படத்திற்காக சிறந்த இசையமைப்பு, சிறந்த பாடல் (ஜெய் ஹோ) ஆகிய பிரிவுகளில் அவர் ஆஸ்கார் விருதுகளை வென்றார்.