ஷா ஆலாம் : ஏற்கனவே அதிகார விதிமீறல், கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் 6 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் மொகிதின் யாசின் மீது இன்று ஷா ஆலாம் நீதிமன்றத்தில் 5 மில்லியன் ரிங்கிட் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஜானாவிபாவா என்னும் பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கான சிறப்புத் திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டு இதுவாகும்.
ஷா ஆலாம் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்ற நீதிபதி ரோசிலா சாலே முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
கள்ளப் பணப் பரிமாற்றம் மேலும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பணம் பெறுவதைக் குற்றமாக்கும் அம்லா என்னும் 2001-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் 76 வயதான அவர் குற்றம் சாட்டப்படுள்ளார். புகாரி இக்குயிட்டி நிறுவனத்திடம் இருந்து பெர்சாத்து கட்சிக்கான வங்கிக் கணக்கில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி 5 மில்லியன் நிதி பெற்றது தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பாகோ நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான மொகிதின் யாசினுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் சம்பந்தப்பட்ட தொகையான 5 மில்லியன் வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
ஏற்கனவே 6 குற்றச்சாட்டுகள்
மொகிதின் யாசின் மீது 6 ஊழல் குற்றச்சாட்டுகள் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 10) கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
அவருக்கு அப்போது 2 மில்லியன் ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது. அனைத்துலகக் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
232.5 மில்லியன் ரிங்கிட் அதிகார விதிமீறல், 195 மில்லியன் ரிங்கிட் கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பில் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
மொகிதின் யாசின் ஊழல் வழக்கை எதிர்நோக்கும் 2ஆவது பிரதமர் ஆவார்.
232.5 மில்லியன் ரிங்கிட் தொகை தொடர்புடைய நான்கு அதிகார விதிமீறல் குற்றச்சாட்டுகளும் 195 மில்லியன் ரிங்கிட் கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பிலான மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன.
இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் அவருக்கு 2 மில்லியன் ரிங்கிட் ஜாமீன் தொகையை நிர்ணயித்த நீதிபதி அஸுரா அல்வி அனைத்துலகக் கடப்பிதழை அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
முன்னாள் பிரதமர் மொகிதின் யாசின் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவரின் அரசியல் செல்வாக்கு சரியுமா? எதிர்வரும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆதரவு கூடுமா? குறையுமா? என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன.