Home நாடு மித்ரா சார்பில் இந்திய சமுதாயத்திற்கான புதிய திட்டங்கள் – ரமணன் அறிவித்தார்

மித்ரா சார்பில் இந்திய சமுதாயத்திற்கான புதிய திட்டங்கள் – ரமணன் அறிவித்தார்

558
0
SHARE
Ad
டத்தோ ஆர்.ரமணன்

புத்ரா ஜெயா : மித்ரா என்னும் இந்தியர் உருமாற்றத் திட்டத்தின் கீழ் பி-40 அடித்தட்டு மக்களுக்கான 39.44 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டங்களை மித்ராவின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவர் டத்தோ ஆர்.ரமணன் அறிவித்துள்ளார்.

கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்புக்கான பயிற்சி, சமூக நலம் போன்ற அம்சங்களில் இந்த புதிய திட்டங்கள் கவனம் செலுத்தும்.

பொதுப் பல்கலைக் கழகங்களில் பயிலும் பி-40 இந்திய மாணவர்களுக்கு, 2-ஆம், 3-ஆம் அல்லது இறுதியாண்டுகளில் தலா 2,000 ரிங்கிட் ஒரு முறை வழங்கப்படும் என ரமணன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பொதுப் பல்கலைக் கழகங்களில் தற்போது கல்வி பயின்று கொண்டிருக்கும் சுமார் 10 ஆயிரம் பி-40 இந்திய மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள். 20 மில்லியன் ரிங்கிட் செலவிலான இந்தத் திட்டம் பேங்க் சிம்பானான் நேஷனல் வங்கியுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.

பாலர் பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி

தமிழ்ப் பள்ளிகளில் இயங்கும் பாலர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் பொருட்டு கல்விக் கட்டணம், 12 மாதங்களுக்கான காலை உணவு ஆகியவற்றுக்கான ஒவ்வொரு மாணவருக்கும் தலா 200 ரிங்கிட் வழங்கப்படும்.

10.8 மில்லியன் ரிங்கிட் இந்தத் திட்டத்திற்காக செலவிடப்படும். பி-40 பிரிவினரில் 4,500 பாலர் பள்ளி மாணவர்கள் இதனால் பயனடைவர். இதற்கான பணம் பாலர் பள்ளிகளை நடத்துபவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் மே 28 வரை ஏற்றுக் கொள்ளப்படும். முதலில் விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சிறுநீரக சுத்திகரிப்புக்கு நிதி உதவி

பி-40 குழுவினரில் சிறுநீரக சுத்திகரிப்புக்குச் செல்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தலா 200 ரிங்கிட் வழங்கப்படும்.

சிறுநீரகம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 900 நோயாளிகள் மாதத்திற்கு 4 முறை என ஒரு வருடத்திற்கு இந்த நிதி உதவியைப் பெறுவர்.

இந்தத் திட்டத்திற்காக 8.64 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறுநீரக சுத்திகரிப்பு மையங்களுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மே 8 முதல் ஆகஸ்ட் 30 வரை இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

30 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒதுக்கீடுகளுக்காக இதுவரை 1,200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் ரமணன் தெரிவித்தார்.

இந்த விண்ணப்பங்களுக்கான இறுதி நாள் மே 28 ஆகும்.

மே 4-ஆம் தேதி வரை இயங்கலை வழியாக (ஒன்லைன்) 1,227 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும், 443 மில்லியன் ரிங்கிட் கோரிக்கைகளை இந்த விண்ணப்பங்கள் கொண்டுள்ளதாகவும் ரமணன் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விண்ணப்பங்களை ஆழமாகப் பரிசீலிக்கவிருப்பதாகவும், பி-40 குழுவினருக்கு உதவும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ரமணன் மேலும் தெரிவித்தார்.

இந்திய சமூகத்திற்காக 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை மித்ரா பெறும் என பிரதமரும் நிதியமைச்சருமான அன்வார் இப்ராகிம் அறிவித்திருந்தார்.