Home Photo News மக்கள் தொண்டன் வி. டேவிட் – மலேசியத் தொழிலாளர்களுக்கும் – இந்திய சமுதாயத்திற்கும் போராடியவர்

மக்கள் தொண்டன் வி. டேவிட் – மலேசியத் தொழிலாளர்களுக்கும் – இந்திய சமுதாயத்திற்கும் போராடியவர்

297
0
SHARE
Ad

 

டாக்டர் வி.டேவிட்

கடந்த 10 ஜூலை 2005இல் தனது 73-வது வயதில் காலமானார் டாக்டர் வி. டேவிட். மலேசியத் தொழிலாளர்களுக்காகவும்  அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய பிரபலத் தொழிற்சங்கவாதி. இந்திய சமூகத்திற்காகவும் தமிழ்மொழிக்காகவும் போராடியதிலும் முன்னணி வகித்தார் டேவிட். அவரின் சிறப்புகளை விவரிக்கும் நினைவுநாள் கட்டுரை.

ம.இ.கா.வின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் அமரர் டான்ஸ்ரீ டத்தோ சி. சுப்ரமணியம் (சுப்ரா) 1970ஆம் ஆண்டுகளில்  மலாயா பல்கலைக்கழகத்தில்  தனது எம்.ஏ. முதுகலைப் பட்டத்திற்காக  ஆய்வு நூல் ஒன்றை எழுதினார்.

#TamilSchoolmychoice

‘1945 முதல் 1955 வரை மலாயா இந்தியர்களின் அரசியல்’ (Politics of the Indians in Malaya 1945-1955) என்பதுதான் அந்த ஆய்வு நூலின் தலைப்பு. அந்த ஆய்வு நூலுக்காக பல இந்திய அரசியல் தலைவர்களை பேட்டி கண்டார். அவ்வாறு அவர் சந்தித்த தலைவர்களில் ஒருவர் தொழிற்சங்கவாதியான வி. டேவிட். அந்த நூலிலேலே சுப்ரா அதனைக் குறிப்பிட்டிருந்தார்.

அப்போது சுப்ரா ம.இ.கா. தலைமையகத்தில் நிர்வாகச் செயலாளராகவும்  பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தார். காலம் சுழன்றது.

1974ஆம் ஆண்டு கோலாலம்பூர் டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் ம.இகா– தேசிய முன்னணி – சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுப்ரா. தொடர்ந்து நாடாளுமன்றச் செயலாளராகவும் பின்னர் துணை அமைச்சராகவும்  நியமிக்கப்பட்டார்.

1978 பொதுத் தேர்தலில் இரண்டாவது தவணைக்கு  டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிட்டார் சுப்ரா.

இங்குதான் விதி விளையாடியது. எந்த டேவிட்டை, இந்திய சமூகத்தின் அரசியல் தலைவர்களில் ஒருவராக தனது ஆய்வு நூலுக்காகப் பேட்டி கண்டாரோ – அதே டேவிட் இப்போது அவரை எதிர்த்து ஜனநாயக செயல்கட்சி சார்பில் போட்டியிட்டார்.

அந்தப் பொதுத் தேர்தலில்  மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது டாமன்சாரா தொகுதி தேர்தல் முடிவுகள். டேவிட் 3,222 வாக்குகள்   பெரும்பான்மையில் வெற்றிவாகை சூடினார்.

இந்தப் போட்டி காரணமாக, அரசியலில்  பரம வைரிகளாகக் கருதப்பட்ட சுப்ரா– டேவிட் இருவரும்  இந்திய சமுதாயத்திற்காக இணையவும் அருகருகே அமர்ந்து ஆலோசனை நடத்தவும் இன்னொரு சூழல் ஏற்பட்டது. 1984ஆம் ஆண்டில் உலகத் தமிழர் மாமன்றம் என்ற அமைப்பின் தலைவரானார் டேவிட். 1987ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நடத்த முடிவானது.

6-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர்களான டான்ஶ்ரீ சி.சுப்பிரமணியம், டாக்டர் வி.டேவிட்

உலகத் தமிழர் மாமன்றம் அந்த மாநாட்டினை ஏற்பாடு செய்யும் உரிமை பெற்றிருந்தது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக துன் சாமிவேலுவும் இரண்டு துணைத் தலைவர்களாக சுப்ரா– டேவிட் இருவரும் தங்களின் அரசியல் பகைமைகளை மறந்து தமிழ் மொழிக்காகவும்  தமிழ் சமூகத்திற்காகவும் இணைந்து செயலாற்றிய மாநாடு அது.

வி. டேவிட் தன் இறுதிகாலத்தில்  உடல் நலம் குன்றியிருந்தபோது அரசியல் கண்ணியத்தோடும் இந்திய சமுதாயத்தின் உரிமைகளுக்காகப் போராடிய முக்கியத் தலைவர்களில் டேவிட்டும் ஒருவர் என்பதை மதிக்கும் வகையிலும், சுப்ரா டேவிட்டை நேரில் சென்று கண்டு உடல் நலம் விசாரித்தார்.

தொழிலாளர்களுக்காகப் போராடி உருவானத் தலைவர்

வி. டேவிட் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தின் தலைமைச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றினார். அந்தத் தொழிற்சங்கத்தின் தலைமையகம் பெட்டாலிங் ஜெயாவில் அமைந்திருந்தது.

ஜசெக தலைவர் கர்ப்பால் சிங்குடன் டேவிட்

அந்த அலுவலகத்தில்  சாதாரண ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டு பொதுமக்களை சந்திப்பார் டேவிட். முன் வழுக்கை, பரந்த நெற்றி, கன்னங்களில் இறங்கும் நீண்ட அடர்த்தியான கிருதா, தடிமனான பிரேம் போட்ட கண்ணாடி, கையில் அகலமான தோல்பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம், பெரும்பாலான நேரங்களில் புஷ்ஜேக்கட் போன்ற உடை என அவருக்கே உரித்தான தோற்றத்தோடு, கம்பீரமாக, மிடுக்காக அமர்ந்து அவர் மக்கள் பணிகளையும் தொழிற்சங்கப் பணிகளையும் கவனிப்பார்.

பார்க்க வருபவர்களிடம் அரசாங்கத்தைப் பற்றியும் சில அரசாங்கத் தலைவர்கள் பற்றியும் தயவு தாட்சண்யம் இன்றி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுவார். யாருக்கும் அஞ்சாமல் பேசுவார். அதேபோல பிரச்சாரக் கூட்டங்களிலும் அவரது உரைகள் இடி முழக்கம் போல் ஒலிக்கும்.

அவரது அரசியல் பயணம் பல கட்சிகளைச் சார்ந்திருந்தது. ஆனால், அந்தக் கட்சிகள் அனைத்துமே ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகள் என்பதுதான் டேவிட்டைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டிய அம்சம்.

தேசியத் தோட்டத் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் பி.பி.நாரயணனுடன் – டேவிட்-அருகில் போக்குவரத்துத் தொழிற்சங்கத் தலைவர் ஜைனால் ரம்பாக்

எந்த சூழ்நிலையிலும் அவர் அரசாங்கத்துடன் சமரசப் போக்கைக் கொண்டிருக்கவில்லை. தனது அரசியல் வாழ்க்கை எதிர்க்கட்சிகளுடன் தான்– தொழிற்சங்கத்துடன் தான் – என்பதில்  அவர் தெளிவாக இருந்தார். அந்தத் தெளிவுதான் இந்திய சமூகத்தில் அவர் மீதான மதிப்பையும் மரியாதையையும் உயர்த்திக் காட்டியது.

அவர் அரசாங்கத்துடன் நெருங்கி வந்து, மஇகா தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டது, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு மட்டுமே! அதனையும் தமிழ் மொழிக்காக செய்தாரே தவிர, சுய லாபத்திற்காகவோ, சொந்த அரசியல் நலன்களுக்காக அவர் செய்யவில்லை.

1987 உலகத் தமிழராய்ச்சி மாநாட்டின் இரண்டு துணைத் தலைவர்களில் ஒருவரான டேவிட் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாத சோக நிலைமையும் நேர்ந்தது. பிரதமர் மகாதீர் மேற்கொண்ட ஓபராசி லாலாங் கைது நடவடிக்கையில் டேவிட்டும் கைது செய்யப்பட்டு மாநாடு நடைபெற்ற வேளையில் தைப்பிங் கமுந்திங் தடுப்புக் காவல் முகாமில் சிறைபட்டிருந்தார். மாநாட்டுச் செயலாளர் டத்தோ டாக்டர் டி.மாரிமுத்து மாநாட்டில் உரையாற்றியபோது “இந்த மாநாட்டின் வெற்றிக்காகப் பாடுபட்டவர்களில் சிலர் இன்று நம்மிடையே கலந்து கொள்ள இயலாத சூழல் இருக்கிறது” எனக் கூறினார். அவர் டேவிட்டைத்தான் குறிப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட பங்கேற்பாளர்கள் அந்தத் தருணத்தில் பலத்த கரவொலி எழுப்பினர் என்பதை அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் நினைவு கூர்ந்தனர்.

தொழிலாளர் விடுமுறைக்காகப் போராடியவர்

மே 1ஆம் தேதி மலேசியாவில் தொழிலாளர் தினமாக– பொது விடுமுறையாகக் கொண்டாடப்படுகிறது. அதனைப் பெற்றுத் தர போராடிய தொழிற்சங்கத் தலைவர்களில் டேவிட் முக்கியமானவர். டேவிட் வெளிநாடுகளிலும் மிகவும் மதிக்கப்பட்ட மலேசியத் தொழிற்சங்கவாதியாக உயர்ந்தார். எனினும், அவரது தொடக்கம் ஏழ்மையும் எளிமையும் நிறைந்தது.

26 ஆகஸ்டு 1932ஆம் ஆண்டில் கோலாலம்பூர், கிள்ளான் சாலை மூன்றாவது மைலிலுள்ள  ஒரு குடிசைப் பகுதியில் டேவிட் பிறந்தார். அவரது தந்தையார் எஸ்.வேதமுத்து அந்த சமயத்தில் சிறிய அளவிலான மாட்டுப் பண்ணையை வருமானத்திற்காக வைத்திருந்தார்.

தன் இளம் வயதில்  மாடுகளை பாதுகாக்கும் பையனாகவும் அந்த வட்டாரத்தில் பசும்பால் விநியோகிப்பவராகவும் டேவிட் வளர்ந்தார். எனினும், கல்வியிலும் கவனம் செலுத்தி, சீனியர் கேம்பிரிஜ் வரை படித்து முடித்தார். அவரின் பெற்றோருக்கு அவர் ஒரே பிள்ளை.

தந்தையாரை இழந்த பின் தாயாரின் அரவணைப்பில் அவர் வளர்ந்தார். தந்தை இல்லாத காரணத்தினால் தாயாருடன் அவர் நெருக்கம் பாராட்டினார்.  தாயார் மறைந்த பின்னரும்  அவர் மீதான பாசமும் மரியாதையும் டேவிட்டுக்குக் கொஞ்சமும் குறையவில்லை.

ஒவ்வோர் ஆண்டும்  தனது தாயாரின்  பிறந்த நாள், இறந்த நாள் போன்ற நாட்களை நினைவுகூரும் வண்ணம் தாயாரின் கல்லறைக்குச் சென்று வணங்குவார் டேவிட். அது மட்டுமல்லாமல் எப்போது தேர்தலுக்கு நின்றாலும் தொழிற்சங்கத்தில் எந்தப் பதவிக்குப் போட்டியிட்டாலும் ஏதாவது முக்கிய பணி ஒன்றைத் தொடக்குவதாக இருந்தாலும் முதலில் தாயாரின் கல்லறைக்குச் சென்று அவரின் நல்லாசியைப் பெறும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் டேவிட்.

இளம் வயதிலேயே தொழிற்சங்கங்களில் தீவிர ஈடுபாடு காட்டினார். 1954ஆம் ஆண்டில் அமெரிக்காவில்  கென்டாக்கி மாநிலத்திலுள்ள  லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தில்  அவர் பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம், தொழிற்சங்கத் தொடர்புகள் குறித்த கல்வியைப் பெற்றார்.

அனைத்துலக தொழிற்சங்கங்கள் நடத்திய பயிற்சிகளிலும் கலந்துகொண்டார். தொழிற்சங்கங்களில் தீவிர ஈடுபாடு காட்டிய அதேவேளையில் பல்கலைக்கழகப் பட்டப் படிப்பையும் அவர் தொடர்ந்தார்.

1980ஆம் ஆண்டில் புதுடில்லி பல்கலைக்கழகத்தில் வர்த்தகத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். சில ஆண்டுகள் கழித்து  அனைத்துலக தொடர்புகள் குறித்த அவரின் ஆய்வுக் கட்டுரை முனைவர் பட்டத்திற்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள பசிபிக் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கப்பட்டது.

இளம் வயதிலேயே புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக  அவர் போராடத் தொடங்கினார்.

1953ஆம் ஆண்டு சிலாங்கூரிலுள்ள தொழிற்சாலை பணியாளர்களுக்காக  அவர் தொழிற்சங்கம் ஒன்றை நிறுவினார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே அவர்களில் அங்கீகாரத்தோடு தொடங்கப்பட்ட தொழிற்சங்கம் இதுவாகும்.

பிற்காலத்தில்  தேசிய அளவிலான தொழிற்சாலை பணியாளர்கள் தொழிற்சங்கமாக இது உருவாகியது. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான  தொழிற்சங்கத்தையும் அவர் தோற்றுவித்தார். அதன் நிர்வாகச் செயலாளராக பணியாற்றினார்.

லோரிகளில் ஏறிக் கொண்டு நாடு முழுவதும் சென்று போக்குவரத்துத் துறைகளில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான பணியாளர்களை அவர் தொழிற்சங்க உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டார். பின்னர் அந்தத் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட காலம் சேவையாற்றினார்.

அரசியல் ஈடுபாடு

தொழிற்சங்கங்களில் ஈடுபட்டுக் கொண்டே அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டினார் டேவிட். தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக  1959 பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். சுதந்திரத்திற்குப் பின் நாட்டில் நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தல் இதுவாகும்.

பங்சார் நாடாளுமன்றத்திலும் சிலாங்கூர் சட்டமன்றத்திலும் போட்டியிட்டு  டேவிட் வெற்றி பெற்றபோது, அவருக்கு வயது 27 தான்.  அப்போது அவரே மிக இளமையான நாடாளுமன்ற உறுப்பினர்.

1960ஆம் ஆண்டுகளில் தொழிலாளர் கட்சியின் பதிவு ரத்தானது. அதைத் தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் முக்கியத் தலைவர்கள் இணைந்து கெராக்கான் கட்சியைத் தோற்றுவித்தனர்.

1969 பொதுத்தேர்தலில் பினாங்கிலுள்ள டத்தோ கிராமாட் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு கெராக்கான் கட்சி சார்பாக வெற்றி பெற்றார் டேவிட்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் கெராக்கான் கட்சியில் ஏற்பட்ட தலைமைத்துவப் போராட்டத்தால் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி பெக்காமாஸ் என்ற கட்சி தோற்றுவிக்கப்பட்டபோது டேவிட் அதில் இணைந்தார்.

பெக்காமாஸ் கட்சிக்கு காலப்போக்கில் மக்கள் ஆதரவு அவ்வளவாக கிட்டவில்லை. பின்னர், ஜசெகவில் இணைந்தார் டேவிட். இறுதிவரை அந்தக் கட்சியிலேயே இருந்து வந்தார்.

1978ஆம் ஆண்டில் டாமன்சாரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 1982 பொதுத் தேர்தலில் அதே தொகுதியில் அப்போதைய மசீச தலைவர் டான் கூன் சுவானிடம் 14,522 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

பின்னர் 1986, 1990 பொதுத்தேர்தல்களில் பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்டு ஜசெக சார்பில் வெற்றி பெற்றார்.1995 பொதுத்தேர்தலில் உடல்நலக் குறைவு காரணமாக அவர் போட்டியிடவில்லை. 1992 வரை மலேசியத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கான (எம்டியுசி – MTUC – Malaysian Trade Union Congress) தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய டேவிட், அனைத்துலக தொழிற்சங்கங்களிலும்  பல பதவிகளை வகித்தவர்.

டேவிட்டின் போராட்டப் பயணம் பதவிகளால் மட்டும் அலங்கரிக்கப்பட்டதல்ல.  மூன்று முறை அவர் சிறை சென்றிருக்கிறார்.

அவசரகாலச் சட்டம், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் 1964, 1969, 1987 ஆண்டுகளில்  சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.

1987 அக்டோபரில் ஓபராசி லாலா நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டபோது, கமுண்டிங் தடுப்பு முகாமில் 222 நாட்கள் அவர் சிறைவாசம் அனுபவித்தார். அதன் காரணமாக, அவர் வெகுவாகப் பாடுபட்டு பங்களித்த 6-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும் அவரால் பங்கு பெற இயலவில்லை.

தன் வாழ்வின் இறுதி கட்டத்தில் சுமார் 3 ஆண்டுகாலம் அவர் உடல் நலம் குன்றியிருந்தார். அந்த காலகட்டத்தில் அவரின் துணைவியார் கிரேஸ் சிவபாக்கியம் அவரை அன்புடன் கவனித்துக்கொண்டார். அவரின் ஒரே மகன் நோர்மன் டேவிட் ஒரு மருத்துவராவார்.

மலேசிய இந்தியர்களுக்காகவும் இந்திய  சமூகத்திற்காகவும் தமிழ்மொழிக்காகவும் தொழிலாளர் உரிமைக்காகவும் தன் வாழ்நாளின் இறுதிவரையில் சமரசம் செய்து கொள்ளாமல் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடிய வி. டேவிட் மலேசிய இந்தியர்களின் வரலாற்றுப் பக்கங்களில் என்றும் நினைவுகூரப்படுவார்.

-இரா.முத்தரசன்