Home நாடு “இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவது இனியும் தொடரக் கூடாது” – மூத்த பத்திரிகையாளர் வோங் சூன் வாய் கூறுகிறார்

“இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவது இனியும் தொடரக் கூடாது” – மூத்த பத்திரிகையாளர் வோங் சூன் வாய் கூறுகிறார்

621
0
SHARE
Ad
வோங் சூன் வாய்

ஸ்டார் நாளிதழின் தலைமை நிர்வாக ஆசிரியர் டத்தோ வோங் சூன் வாய் (Wong Chun Wai) 35 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர். இந்திய சமுதாயம் இனியும் புறக்கணிக்கப்படுவது தொடரக் கூடாது என ஸ்டார் நாளிதழில் எழுதிய கட்டுரையில் வாதிடுகிறார். அவரின் கட்டுரையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

* 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள், இந்திய வாக்குகளைப் பொறுத்தவரை,  ஆளும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு அவர்களை உறக்கத்திலிருந்து கலைக்கும் வண்ணம் – அதிர்ச்சி தரும் வகையில் அமைந்தன.

*இந்திய வாக்குகள் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் ஆற்றல் வாய்ந்தவை எனத் தெரிந்திருந்தும் ஒற்றுமை அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை.

#TamilSchoolmychoice

*நெகிரி செம்பிலானில் 21 விழுக்காடு – பினாங்கில் 19 விழுக்காடு – சிலாங்கூரில் 12 விழுக்காடு என்னும் அளவுக்கு இந்திய வாக்குகள் வீழ்ச்சி கண்டன.

*பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு இந்திய வாக்குகள் பினாங்கில் 29 விழுக்காடு அதிகரித்தன. நெகிரி செம்பிலானில் 19 விழுக்காடு சிலாங்கூரில் 14 விழுக்காடு என இந்திய வாக்குகள் அதிகரித்தன. இதுவும் ஆச்சரியம் அளிக்கும் விஷயம்.

*அதேசமயம் பிகேஆர் கட்சி கணிசமான இந்திய உறுப்பினர்களையும் கொண்டிருக்கிறது.

*ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பக்காத்தானுக்கான இந்தியர் வாக்குகள் 15 விழுக்காடு குறைந்துள்ளன.

*ஆகஸ்ட் 12-ஆம் தேதியன்று இந்தியர்களின் வாக்களிப்பு விழுக்காடும் இதுவரை இல்லாத அளவுக்கு படுவீழ்ச்சியடைந்திருக்கிறது.

*இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கம் போதுமான அளவுக்கு எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தி நிலவுவதாக முன்னாள் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ சுட்டிக் காட்டியிருக்கிறார்.

*இந்தியர்களின் ஆத்திரம் இப்போது அதிகமாகக் கூடியிருக்கிறது. பக்காத்தான் ஆதரவு தரப்புகள் என்னதான் விளக்கங்கள் கொடுத்தாலும் இந்தியர்கள் திருப்தியடையவில்லை.

இந்திய இளைஞரை மதம் மாற்றும் சடங்கில் அன்வார்

*இந்த சூழ்நிலையில் அன்வார் இப்ராகிம் ஓர் இந்திய இளைஞரை மதம் மாற்றும் சடங்கை பள்ளி வாசலில் நடத்தும் காணொலியும், சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்குடன் இணைந்து அமர்ந்திருக்கும் 2020 ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படமும் உலா வரத் தொடங்கியிருக்கின்றன.

இராமசாமியை ஒதுக்கியதாலும் அதிருப்தி

*இந்த மோசமான தருணத்தில் ஜசெக தலைவர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமிக்கு மீண்டும் வாய்ப்பளிக்காத முடிவையும் ஜசெக எடுத்தது.

*பிகேஆர் கட்சியும் இன்னொரு தவற்றைச் செய்தது. பிகேஆர் கட்சியின் நஜ்வான் ஹாலிமி என்பவர் பிஎஸ்எம் என்ற மற்றொரு கட்சிக்காரரான சிவரஞ்சனி மாணிக்கம் என்ற மேரு சட்டமன்ற வேட்பாளரைத் தரக் குறைவாக விமர்சித்தது குறித்து கட்சி கண்டு கொள்ளவில்லை.

*கோட்டா முறையிலான கல்வி வாய்ப்புகள் குறித்து கேள்வி கேட்ட இந்திய மாணவி ஒருவரை நோக்கி பிரதமர் கையாண்ட விதமும் இந்தியர்களிடையே அதிருப்திகளை ஏற்படுத்தியிருக்கிறது.

*வாக்களிக்க முன்வராத இந்தியர் ஒருவர் எல்லாத் தலைவர்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள் – எனவே வாக்களிப்பது வீண் விரயம் – என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். கடந்த முறை இதே வாக்காளர் ஜசெகவுக்கு வாக்களித்தவர்.

வாக்களிக்காமல் ஜெயிலர் படம் பார்த்த இந்திய நண்பர்

*இன்னொரு இந்திய வாக்காள நண்பர் வாக்களிக்காமல் ரஜனியின் ஜெயிலர் படம் பார்த்தார். கேட்டதற்கு இந்த அரசியல்வாதிகள் எங்கள் இந்தியர்களை கண்டு கொள்ளாமல் புறக்கணித்துவிட்டனர். என்ன நடந்தாலும் நாங்கள் மாறமாட்டோம் என நினைத்து விட்டார்கள். கற்பனையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ரஜினி மேல் என படம் பார்க்க வந்து விட்டேன் என்றார் அந்த நண்பர்.

அரசியல் ஆய்வாளர் பிரிகேட் வெல்ஷ் கணிப்புகள்

*சிலாங்கூரில் 66% தொகுதிகள் 10% க்கும் கூடுதலான இந்திய வாக்குகளைக் கொண்டிருக்கின்றன. நெகிரி செம்பிலானில் 56 விழுக்காடு, பினாங்கில் 55 விழுக்காடு, கெடாவில் 22 விழுக்காடு தொகுதிகள் 10 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்திய வாக்குகளைக் கொண்டவை – என்கிறார் அரசியல் ஆய்வாளர் பிரிகெட் வெல்ஷ்.

*இந்திய வாக்காளர்கள் சிலாங்கூரில் 15 விழுக்காடும், நெகிரி செம்பிலானில் 14 விழுக்காடும், பினாங்கில் 11 விழுக்காடும், கெடாவில் 7 விழுக்காடும் இருக்கின்றனர் என்றும் வெல்ஷ் கூறுகிறார். இவர்களில் ஒரு சிறிய விழுக்காட்டினரின் ஆதரவை பாஸ்-பெரிக்காத்தான் கூட்டணியினர் பெற்றிருக்கின்றனர்.

*கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் பினாங்கில் 8 விழுக்காட்டு இந்திய வாக்குகளையும் கெடாவில் 6 விழுக்காட்டு இந்திய வாக்குகளையும் பெற்றன.

இந்திய வாக்குகளைக் கவர அஸ்மின் அலி எடுத்த முயற்சிகள்

கோன்கோர்ட் கிளப் என்னும் சந்திப்புக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களுடன் உரையாடிய பெர்சாத்து தலைவர் அஸ்மின் அலி இந்திய வாக்குகளைக் கவர எவ்வாறு பாடுபட்டேன் என்பது குறித்து விவரித்தார்.

*பதவிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய வாக்குகளைக் கவர ஒற்றுமை அரசாங்கம் கூடுதலாக எதையாவது செய்தாக வேண்டும்.

ரமணனுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குங்கள்

*பிரதமர் துறையின் கீழ் இருக்கும் மித்ராவுக்குத் தலைமை தாங்கும் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமணன் ராமகிருஷ்ணனுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கி மேலும் பயனான திட்டங்களை இந்திய சமுதாயத்திற்கு வழங்க வாய்ப்புகள் தரலாம்.

*அரசாங்கம் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மித்ரா போன்ற ஒரு பிரிவு மட்டும் இந்திய சமுதாயத்திற்கு போதாது. இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல. பூர்வ குடி மக்களுக்கும் பொருந்தும்.

*இந்தியர்களைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பு, கல்வி, வீட்டு வசதி என பல துறைகளிலும் அவர்கள் ஏமாற்றமும் அவநம்பிக்கையும் அடைந்துள்ளார்கள். நீண்ட காலமாக இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

*இந்திய வாக்காளர்களின் ஆதரவு என்பது பக்காத்தான் ஹாரப்பானுக்கு நிலையானதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. வித்தியாசம் என்னவென்றால் இப்போது பக்காத்தான் அரசாங்கம் அமைத்து ஆட்சி செய்கிறது.

*எனவே, இந்தியர்களுக்கு பக்காத்தான் ஏதாவது பிரதிபலன் செய்தாக வேண்டும்.

*அமைச்சர்களாகவோ, ஆட்சிக் குழு உறுப்பினர்களாகவோ, அமைச்சுகளில் உயர் பொறுப்புகளுக்கோ இந்தியர்களை நியமிப்பதற்கு மத்திய அரசாங்கம் தயங்க வேண்டியதில்லை. காரணம் அவர்களும் மலேசியர்கள்தான்! நீண்ட காலமாக நமது அழகான பல இன மலேசிய சமுதாயத்தில் அவர்கள் இணை பிரிய முடியாத அளவுக்கு ஆழமாக பதிந்து விட்டனர்.