சென்னை : நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) பிரபல குணசித்திர நடிகர் மாரிமுத்து மரணமடைந்தார் என்ற செய்தி சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதே வேளையில் சமூக ஊடகங்களில் இன்னொரு விதமான விவாதங்கள் எழுந்தன.
ஜாதகர்களைக் குறை கூறியதால்தான் அவருக்கு மரணம் நிகழ்ந்தது என்ற அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இதுவும் மூடத்தனம்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
அண்மையில் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் “ஜாதகம், கடவுள் என எதையும் நம்புவதில்லை” எனக் கூறியிருந்தார் அவர்.
அந்த விவாதத்தில் ஒரு ஜாதகர் “உங்களுக்கு நெஞ்சு பகுதியில் பிரச்சனை இருக்கிறது. சோதித்துப் பாருங்கள்” என்று கூறினார். அதற்கு மாரிமுத்து அதெல்லாம் ஒன்றுமில்லை – நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என வாதிட்டார்.
ஆனால் அந்த சம்பவம் நடந்த சில வாரங்களுக்குள் 56 வயதே ஆன அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது, ஜாதக ஆர்வலர்களிடையே சமூக ஊடங்களில் பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாக்கி வரும் எதிர்நீச்சல் தொடர் சமீபத்தில் 500 பாகங்களை (எபிசோட்களை) கடந்ததற்காக அந்தத் தொடரின் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.இந்த தொடரில் மாரிமுத்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
மாரிமுத்து நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தது அவரின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையம் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
மாரிமுத்து நடிகர் மட்டும்மில்லாமல் இயக்குனரும் கூட . புலிவால், கண்ணும் கண்ணும் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தமிழ் மீது தீராக்காதல் கொண்டவர்.சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் நடிகர் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாரிமுத்துவின் மரணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.