Home நாடு சைட் சாதிக் இனி நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில்…

சைட் சாதிக் இனி நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில்…

406
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அண்மையில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினரும் மூடா கட்சியின் தலைவருமான சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கு ஆதரவு தருவதில்லை என அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் தலைமையில் இயங்கும் மூடா கட்சி பக்காத்தான் கூட்டணிக்கான ஆதரவை மீட்டுக் கொண்டதாக கூறி இருக்கிறது. நாளை செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 12 முதல் நாடாளுமன்றத்தில் சைட் சாதிக் எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தப்படுவார் என நாடாளுமன்ற அவைத் தலைவர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் தெரிவித்திருக்கிறார்.

இதன் தொடர்பில் மூடா கட்சியிடம் இருந்து கடிதம் ஒன்றை பெற்றிருப்பதாகவும் தங்களின் இருக்கையை எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ஜோஹாரி அப்துல் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

15-வது பொதுத் தேர்தலில் மூவார் நாடாளுமன்றத்தில் போட்டியிட்ட சைட் சாதிக் பக்காத்தான் ஹாரப்பான் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் பக்காத்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என அறிவித்திருப்பது ஒரு சட்ட சிக்கலையும் கேள்வியையும் எழுப்பி இருக்கிறது. இந்த முடிவு கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வருமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

மூவார் தொகுதியில் அவர் வெற்றி பெற்றது பக்காத்தான்  ஹரப்பான் சின்னத்தில்! அவரின் தலைமையில் இயங்கும் மூடா கட்சி கூட்டணியாக பக்கத்தானுடன் இணைந்து போட்டியிட்டது. தற்போது பக்கத்தானுக்கு ஆதரவு தருவதில்லை என அவர் அறிவித்திருப்பதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் வருமா என்ற சட்டக் கேள்வியும் எழுந்துள்ளது.

சைட் சாதிக் சொந்த ஆதரவு பலத்தில் மூவார் தொகுதியில் வெற்றி பெறவில்லை – மாறாக பக்காத்தான் ஹாரப்பான் ஆதரவால்தான் வெற்றி பெற்றார் – எனவே பக்காத்தானை ஆதரிக்க வேண்டிய தார்மீக ஆதரவு அவருக்கு உண்டு என ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் காட்டமாகக் கூறியுள்ளார்.

சைட் சாதிக் பக்காத்தானை ஆதரிக்காததால் அந்த கூட்டணியின் பலம் 147 ஆக குறைந்து நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அந்தக் கூட்டணி இழந்துள்ளது.

எனினும் மக்களுக்கு நன்மை தரும் – நலன் பயக்கும் சட்டங்கள் – திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால் – மூடா கட்சியும் நாடாளுமன்றத்தில் அதனை ஆதரிப்போம் என சைட் சாதிக் கூறியிருக்கிறார்.