பெய்ஜிங் : ஒரு நாட்டின் அமைச்சர் அதுவும் – இராணுவ, பாதுகாப்பு அமைச்சர் – காணாமல் போனால் கண்டிப்பாக அனைத்துலக அளவில் பரபரப்பான செய்தியாகும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபு இரண்டு வாரங்களாக பொதுவெளியில் தோன்றாததால் அவர் எங்கே என அதிபர் ஜி ஜின்பிங்கை (படம்) நோக்கி கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதன் தொடர்பில் தி பெனான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிகை கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
லீ ஷாங்ஃபு கடைசியாக ஆகஸ்ட் 29ஆம் தேதி பெய்ஜிங்கில், மூன்றாவது சீனா – ஆப்பிரிக்கா அமைதி மற்றும் பாதுகாப்பு மன்றத்தில் பொதுவெளியில் காணப்பட்டார்.
லீ ஷாங்ஃபு, மாஸ்கோ மற்றும் மின்ஸ்க் பயணத்திற்குப் பிறகு சீனாவை விட்டு வெளியேறவில்லை. இவ்விவகாரத்தில் பெய்ஜிங் மௌனம் சாதிப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், வாஷிங்டனில் அதிகாரிகள் சிலர் லீ ஷாங்ஃபு ஊழல் விசாரணையில் சிக்கி இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
அதிபர் ஜி ஜின்பிங்கினால் நியமிக்கப்பட்ட 6 மாதங்களுக்குப் பிறகு, பாதுகாப்பு அமைச்சருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.