Home கலை உலகம் அமெரிக்க அரசு விருந்தினராக வருமாறு ரஜினிக்கு அழைப்பு

அமெரிக்க அரசு விருந்தினராக வருமாறு ரஜினிக்கு அழைப்பு

796
0
SHARE
Ad

Rajni-USA-Sliderடெல்லி,ஜன.28 – அமெரிக்க அரசின் விருந்தினராக வருமாறு ரஜினிகாந்துக்கு அமரிக்க மேரிலான்ட் மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் (அமைச்சர் ) டாக்டர் ராஜன் நடராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று ரஜினியின் இல்லத்திற்குச் சென்று ரஜினியை நேரில் சந்தித்து டாக்டர் ராஜன் நடராஜன், இந்த அழைப்பினை வழங்கினார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் நூற்றாண்டுக்கொரு முறை வரும் 12.12.12 என்ற அபூர்வ தேதியில் அமைந்துள்ளதற்கு, மேரிலான்ட் மாகாண கவர்னர் திரு மார்ட்டின் ஓமாலி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை, டாக்டர் ராஜன் வாசித்து அளித்தார். அதனை ரஜினிகாந்த் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

மேரிலாண்ட் அரசின் பிரதிநிதி டாக்டர் ராஜனின் வாழ்த்தையும் அழைப்பையும் ஏற் ரஜினிகாந்த், நிச்சயம் அமெரிக்காவுக்கு வருவதாகத் தெரிவித்தார்.

சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, ரஜினிகாந்திடம் பல கருத்துக்களையும் தகவல்களையும் டாக்டர் ராஜன் பரிமாறிக் கொண்டார்.

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களுக்கு நிகராக சூப்பர் ஸ்டாரின் படங்கள் எப்படி அமெரிக்கா மற்றும் உலக மக்களால் பாராட்டப்படுகின்றன, ரசிக்கப்படுகின்றன என்பதை டாக்டர் ராஜன் விளக்கியபோது, ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அமெரிக்க வாழ் தமிழர்கள் குறித்து மிகுந்த அக்கறையுடன் டாக்டர் ராஜனிடம் சூப்பர் ஸ்டார் விசாரித்தார். அமெரிக்க அரசியலில் இத்தனை உயரிய பதவியில் இருக்கும் முதல் இந்தியர் – தமிழர் அதுவும் நம்ம புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் ராஜன்தான் என்பதை அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தார்.

ரஜினிகாந்திடம் பேசிய டாக்டர் ராஜன், “தமிழர்களின் பெருமை நீங்கள்.. உங்கள் ப்ளட்ஸ்டோன் படத்தை அமெரிக்கர்கள் பார்த்து ரசித்தனர். ஹாலிவுட்டிலேயே கோலோச்சும் அளவுக்கு உங்களுக்கு வாய்ப்புகள் இருந்தும், அவற்றை ஏற்காமல் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தமிழையும் தமிழர் நலன் காக்கவும் மிகுந்த கவனம் செலுத்தி வருவதை உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாது, பிற நாட்டினரும் கூட மிகுந்த ஆர்வத்துடன் உங்கள் படங்களைப் பார்க்கின்றனர்,” என்றார்.

மேரிலான்ட் அரசின் அழைப்பு மற்றும் வாழ்த்துக்கு டாக்டர் ராஜனிடம் நன்றி தெரிவித்த ரஜினிகாந்த், சந்திப்பு முடிந்ததும் டாக்டர் ராஜனை அன்புடன் வழியனுப்பி வைத்தார்.

இந்த சந்திப்பு குறித்து டாக்டர் ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினியின் அன்பும் உபசரிப்பும் என்னை வரவேற்ற விதமும் நெகிழ வைத்துவிட்டன. அவர் பெரும் கலைஞர் மட்டுமல்ல, மாபெரும் மனிதர். எளிமையின் சிகரம். உன்னதமானவர். அவரைப் போன்ற பண்பாளரைச் சந்தித்தது மிகுந்த நிறைவாக உள்ளது. தமிழர்களின் பெருமை நமது சூப்பர் ஸ்டார் என்று கூறுவதில் நான் பெருமை அடைகிறேன். அவரை அமெரிக்க அரசு விருந்தினராக வரவேற்பதை நானும் எங்கள் அரசும் கவுரவமாகக் கருதுகிறோம். அமெரிக்கா அவருக்கு மிகப் பெரிய மரியாதையைச் செய்யக் காத்திருக்கிறது,” என்றார்.

இந்த சந்திப்பின்போது நடிகர் சார்லியும் உடன் இருந்தார்.