Home நாடு நஜிப் – அவரின் மகன் வருமானவரி பாக்கி செலுத்த வேண்டும் – கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம்...

நஜிப் – அவரின் மகன் வருமானவரி பாக்கி செலுத்த வேண்டும் – கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

633
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 1.69 பில்லியன் ரிங்கிட் வருமானவரி பாக்கியை நஜிப் செலுத்த வேண்டுமென மலேசியாவின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் (பெடரல் கோர்ட்) நேற்று திங்கட்கிழமை (அக்டோபர் 16) தீர்ப்பளித்தது.

அவரின் மகன் முகமட் நசிபுடினும் 36.7 மில்லியன் ரிங்கிட் வருமான வரி பாக்கியைச் செலுத்த வேண்டுமென கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம் தலைமையிலான ஐவர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

#TamilSchoolmychoice

தீர்ப்பின் முழு விவரத்தை, அமர்வின் நீதிபதிகளில் ஒருவரான பி.நளினி வாசித்தார்.

எனினும் நஜிப்புக்கும் அவரின் மகனுக்கும் தங்களின் விவகாரத்தை வருமான வரி இலாகாவின் சிறப்பு ஆணையர்கள் வாரியத்திடம் சமர்ப்பிக்க இன்னொரு வாய்ப்பு இருப்பதாகவும் நளினி குறிப்பிட்டார்.

வழக்கின் விவரம் என்ன?

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கியான 1.69 பில்லியன் ரிங்கிட்டை அவர் இன்னும் செலுத்தாத காரணத்தால் அவர் மீது வருமானவரி இலாகா திவால் வழக்கொன்றைத் தொடுத்திருந்தது.

நஜிப் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகைக்கான அந்த வழக்கின் தீர்ப்பையும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே பெற்று விட்டது வருமான வரி இலாகா. சம்மரி ஜட்ஜ்மெண்ட் என்ற நடைமுறையின் கீழ் அந்த வழக்கின் தீர்ப்பு பெறப்பட்டது.

சம்மரி ஜட்ஜ்மெண்ட் (Summary Judgment) என்பது எப்படிப்பட்ட தீர்ப்பு என்றால், முழுமையான விசாரணையுடன் கூடிய தீர்ப்புக்கு முன்னரே ஆவணங்களின் அடிப்படையில், வழக்கு நடத்தும் நேரத்தைச் சுருக்கி, சீக்கிரமாகப் பெறப்படும் தீர்ப்பு.

நீங்கள் பணம் செலுத்த வேண்டியதற்கான ஆதாரங்களுடன் கூடிய ஆவணங்கள் முழுமையாக இருக்கின்றன. அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம். இந்த ஆவணங்களுக்கு எதிரான ஆணித்தரமான எதிர்வாதம் எதுவும் கடனாளி வசம் இல்லை. எனவே நீதிமன்றம் எனக்கு சாதகமாகத் தீர்ப்பு கொடுக்க வேண்டும் என கடன்கொடுத்தவர் தனது மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்.

பொதுவாக வங்கிக் கடன்களுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படும். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கி, சுங்கவரி, தீர்வைகள் போன்றவற்றிற்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அந்த ஆவணங்களின் அடிப்படையில் கடனாளிக்கு எதிர்வாதம் செய்வதற்கான முகாந்திரங்கள் இல்லை என நீதிமன்றம் முடிவு செய்தால் கடனைச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கடனாளிக்கு உத்தரவிடும்.

நஜிப் வழக்கில் அதைத்தான் கடந்தாண்டு ஜூலை மாதத்தில் செய்திருக்கிறது நீதிமன்றம்.

இதன் மூலம் நஜிப் உள்நாட்டு வருமானவரி வாரியத்திற்கு பணம் செலுத்த வேண்டிய கடனாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து 4 பிப்ரவரி 2021-ஆம் தேதியன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அவர் செலுத்த வேண்டிய பணத்திற்காக முன்அறிவிக்கையை (நோட்டீசை) வருமான வரி வாரியம் அனுப்பியிருக்கிறது.

1.69 பில்லியன் ரிங்கிட்டையும் அதற்கான வட்டியையும் செலுத்தப்படாத வரையில் வட்டியால் அதன் மொத்தத் தொகை மேலும் கூடிக் கொண்டே போகும்.

2011-ஆம் ஆண்டிலிருந்து 2017 வரை நஜிப் தனது வருமான வரித் தொகை செலுத்தாத காரணத்தால் இந்தப் பிரச்சனையை அவர் எதிர்நோக்கியிருக்கிறார்.

வருமான வரி பாக்கியை செலுத்தாததால் திவால் வழக்கு

கடந்தாண்டே நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அந்த வருமான வரி பாக்கியை செலுத்துவதற்கு இன்னும் எந்த முயற்சியையும் எடுக்காத காரணத்தால், அவரை திவாலாக்கும் நடவடிக்கையை வருமானவரி இலாகா எடுத்துள்ளது.