Home இந்தியா விடை பெற்றார் விஜய்காந்த் – நுரையீரல் அழற்சி காரணமாக காலமானார்

விடை பெற்றார் விஜய்காந்த் – நுரையீரல் அழற்சி காரணமாக காலமானார்

383
0
SHARE
Ad

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலை நடிகரும் அரசியல் தலைவருமான விஜய்காந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் அறிக்கை ஒன்று வெளியானது. அதைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் காலமானார் என்னும் அதிர்ச்சி தரும் செய்தி வெளியானது. நுரையீரல் அழற்சி காரணமாக அவர் இன்று காலை 6.10 மணிக்கு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

71 வயதான விஜய்காந்த் கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தார். இயக்குநர்களுக்கு மரியாதை தருவது – சக கலைஞர்களுடன் எப்போதும் நட்பு பாராட்டியது – படப்பிடிப்பு அரங்கில் சாதாரண தொழிலாளர்களையும் சரி சமமாக நடத்தி, அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு பரிமாறுவது – தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகி, மலேசியாவிலும் இந்தியாவிலும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டி, சங்கத்தின் கடனை அடைத்தது – இவ்வாறு பல சிறந்த குணாதிசயங்களுக்காகவும் நடவடிக்கைகளுக்காகவும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றவர் விஜய்காந்த்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தான் தோற்றுவித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) கட்சியின் வழி அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டினார். எனினும் கடந்த சில ஆண்டுகளாக அவரின் உடல் நலம் குன்றியதாலும், அவரின் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டதாலும் அவரால் தீவிர அரசியலில் களமிறங்கி போராட இயலவில்லை.

#TamilSchoolmychoice

எனினும் கட்சிப் பணிகளை விஜய்காந்த்தின் மனைவி பிரேமலதா கவனித்து வந்தார். சில நாட்களுக்கு முன்னர்தான் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா அறிவிக்கப்பட்டார்.