Home Photo News டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி வாரியத்தின் 50 ஆண்டுகால சேவைகள் – விவரிக்கிறார்...

டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி வாரியத்தின் 50 ஆண்டுகால சேவைகள் – விவரிக்கிறார் திருமதி கிரிஜா பாலகிருஷ்ணன்

575
0
SHARE
Ad

(டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி வாரியம் நீண்ட காலமாக இந்திய மாணவர்களுக்கு கல்வித் துறையில் உதவுவதற்காக இயங்கி வரும் அமைப்பு. இதன் நடப்பு தலைவராக டத்தோ வி.எல்.காந்தன் செயல்பட்டு வருகிறார். எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி (2024) “Dr Rama Subbiah Scholarship Fund : Commemorating Five Decades of Community Service”- என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டர் மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இந்த நூலை உருவாக்கிய ஆசிரியர் குழுவுக்கு தலைமை தாங்கி இந்த நூல் படைப்பாக்கத்தில் முக்கியப் பங்கை ஆற்றியிருப்பவர் திருமதி கிரிஜா பாலகிருஷ்ணன். இந்த நூல் வெளியீட்டு விழா குறித்தும், டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி வாரியம் தோன்றிய பின்னணி சம்பவங்களையும் இரா.முத்தரசனுக்கு வழங்கிய நேர்காணலில் விவரிக்கிறார் கிரிஜா பாலகிருஷ்ணன்.)

டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி என்ற பெயரை ஊடகங்களில் பலமுறை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த கல்வி நிதியை பெற்றுத் தங்களின் கல்வியைத் தொடர்ந்த – நிறைவு செய்த – நூற்றுக்கணக்கான மாணவர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்றிருக்கிறது இந்த உபகாரச் சம்பள நிதி வாரியம்.

அதிகமான விளம்பரமின்றி, கடந்த 50 ஆண்டு காலமாக கல்விச் சேவையாற்றி வரும் இந்த உபகார சம்பள நிதி எவ்வாறு தோன்றியது? அதன் பின்னணி என்ன? ஏன் இந்த நிதி வாரியம் டாக்டர் இராம சுப்பையா அவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது? என உங்களில் பலருக்கு அவ்வப்போது கேள்விகள் எழுந்திருக்கலாம்.

திருமதி கிரிஜா பாலகிருஷ்ணன்

அதனையெல்லாம் விளக்கும் வண்ணம் நூல் ஒன்று ஆங்கிலத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. “Dr Rama Subbiah Scholarship Fund : Commemorating Five Decades of Community Service” –  “டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி : 50 ஆண்டுகால சமூக சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுதல்” – என்ற தலைப்பிலான அந்த நூலை உருவாக்கிய ஆசிரியர் குழுவுக்கு தலைமையேற்று அந்த நூலை எழுதும் பணியை சிறப்பாக நிறைவு செய்திருக்கிறார் திருமதி கிரிஜா பாலகிருஷ்ணன்.

#TamilSchoolmychoice

இராமசுப்பையா உபகார சம்பள நிதியின் இரண்டாவது தலைவராகப் பணியாற்றியவரும் மலேசிய வானொலி தமிழ்ப் பிரிவின் முன்னாள் தலைவருமான இரா.பாலகிருஷ்ணனின் துணைவியார்தான் கிரிஜா பாலகிருஷ்ணன்.

இரா.பாலகிருஷ்ணனின் மறைவுக்குப் பின்னர் இந்த நிதிவாரியத்தின் தலைவராகச் செயல்பட்டு வருபவர் வழக்கறிஞர் டத்தோ வி.எல்.காந்தன். சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர்.

டாக்டர் இராம சுப்பையா குறித்த நூலின் வெளியீட்டு விழா

டாக்டர் இராம சுப்பையா

எதிர்வரும் சனிக்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி (2024) பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சிவிக் ஆடிட்டோரியம் மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த நூல் வெளியீட்டு விழா விழா குறித்தும், இந்த நூல் ஏன் எழுதப்பட்டது என்பது குறித்தும் இராமசுப்பையா அவர்களின் வாழ்க்கை பின்னணி குறித்தும் மக்கள் ஓசைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் விவரித்தார் கிரிஜா பாலகிருஷ்ணன்.

“டாக்டர் இராமசுப்பையா மலாயாப் பல்கலைக்கழகத்தில் தோற்றுவிக்கப்பட்ட இந்திய ஆய்வியல் துறையின் முதல் மலேசியத் தலைவராவார். அவருக்கு முன்பு மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய அறிவியல் துறையின் தலைவராக இருந்தவர் தனிநாயகம் அடிகளார். அவர்தான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முதன் முதலில் கோலாலம்பூரில் நடத்திய பெருமைக்குரியவர். அவருக்கு பின்னர் 1968 ஆம் ஆண்டு இந்திய ஆய்வில் துறையின் தலைமை பொறுப்பை ஏற்றவர் இராம சுப்பையா” என்ற முன் அறிமுகத்தை வழங்கினார் கிரிஜா.

மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ் படித்த
பாலா, பத்மா, சிங்காரவேலு, இராம சுப்பையா

இரா.பாலகிருஷ்ணன்

டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி உருவான பின்னணியை மேலும் விரிவாக விளக்கத் தொடங்கினார் கிரிஜா.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறை முதன் முதலில் தொடங்கப்பட்ட ஆண்டில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களில்  இராம சுப்பையா, இரா பாலகிருஷ்ணன் (ரேடியோ பாலா), டத்தோ கு.பத்மநாபன் (பிற்காலத்தில் துணையமைச்சர்) பேராசிரியர் சிங்காரவேலு (பிற்காலத்தில் இந்திய ஆய்வியல் துறையின் தலைவர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்கள் அனைவரும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று (1st Class Honours) பல்கலைக்கழகப் பட்டதாரிகளானார்கள். படிப்பு முடிந்த பின்னரும் இவர்களுக்கு இடையிலான நட்பு தொடர்ந்தது.

தொடர்ந்து இலண்டனில் முதுகலை, முனைவர் பட்டங்கள் பெற்ற இராமசுப்பையா மலாயாப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.

அப்போது தோட்டப்புறங்களில் இருந்தும், ஏழ்மை நிலையில் இருந்தும் இந்திய மாணவர்கள் பலர் மலாயாப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பலருக்கு உகந்த தங்குமிடம் இல்லை. கைச்செலவுகளுக்கு பணமில்லாமல், ஏன் உணவுக்கான பணம் கூட இல்லாமல் சிரமப் பட்டவர்கள் பலர். மேலும் சிலர் பல்கலைக்கழக கட்டணங்கள் செலுத்துவதற்கான பணமில்லாமல் பிரச்சனைகளை எதிர்நோக்கினார்கள்.

இந்தியர் உபகாரச் சம்பள நிதி உருவானது…

அமரர் டத்தோ கு.பத்மநாபன்

ஏழை இந்திய மாணவர்களின் சிரமங்களைக் கண்ணுற்ற இராம சுப்பையா அவர்களுக்கு உதவ முன்வந்தார். சிறிய அளவிலாவது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர் தன்னுடன் ஒன்றாகப் படித்த பல்கலைக்கழக நண்பர்களையும் மற்ற நெருங்கிய நண்பர்களையும் அழைத்து, அவர்களிடமிருந்து ஆளுக்கு மாதம் 5 ரிங்கிட்  வீதம் என ஆண்டுக்கு 60 ரிங்கிட் வசூலித்து அந்த பணத்தைக் கொண்டு இந்திய மாணவர்களுக்கு உதவத் தொடங்கினார். இராம சுப்பையாவின் நண்பர்களும் இந்திய மாணவர்களுக்கு உதவும் இந்த நல்ல நோக்கத்திற்காக கைகொடுக்க முன்வந்தனர்.

மாதந்தோறும் தங்களின் சம்பளத்தில் இருந்து அந்தப் பணத்தை வழங்கியவர்களில் இராம சுப்பையாவின் பல்கலைக் கழக நண்பர்கள் இரா.பாலகிருஷ்ணன், கு.பத்மநாபன், சிங்காரவேலு, ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இராம சுப்பையாவுடன் ஒன்றாகப் பல்கலைக் கழகத்தில் படிக்கவில்லை என்றாலும் அவரின் நண்பன் என்ற முறையில் அவரின் நல்ல நோக்கத்திற்கு உதவும் பொருட்டு தானும் அந்தத் திட்டத்தில் இணைந்து நிதிவழங்கியதாக நினைவுகூர்கிறார் இராம சுப்பையா வாரியத்தின் இன்றைய நடப்புத் தலைவர் டத்தோ காந்தன்.

இவ்வாறு திரட்டப்பட்ட நிதிக்கு ‘இந்திய மாணவர்கள் உபகாரச் சம்பள நிதி’ என பெயர் சூட்டப்பட்டது. சிறிய அளவில் நிர்வகிக்கப்பட்ட இந்த நிதியை கொண்டு பல இந்திய மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். அந்த நிதியின் முதல் தலைவராக இராம சுப்பையா பொறுப்பேற்றுக் கொண்டார்.

அகால மரணமடைந்த இராம சுப்பையா

இந்த சமயத்தில்தான் விபரீதம் ஒன்று நிகழ்ந்தது.  இந்திய ஆய்வியல் துறையின் தலைவராக இருந்து, நண்பர்களிடம் இருந்து சிறிய அளவிலான நிதி திரட்டி, இந்திய மாணவர்களுக்கு உதவிக் கொண்டிருந்த இராம சுப்பையா யாரும் எதிர்பாராமல் 1969-இல் கார் விபத்தொன்றில் காலமானார்.

மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையின் முதல் மலேசியராகப் பதவியேற்ற ஓராண்டிலேயே இராம சுப்பையா காலமானதால் அவரின் நண்பர்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். பல நல்ல நோக்கங்களோடு இந்திய மாணவர்களுக்கு உதவுவதற்காக இராம சுப்பையா தொடக்கிய உபகாரச் சம்பள நிதியின் நல்ல நோக்கங்களைத் தொடரவும், அவரின் நினைவாக அவரின் பெயரையே அந்த நிதிக்கு சூட்டுவதற்கும் அந்த நண்பர்கள் முன் வந்தனர்.

அப்படித்தான் இராம சுப்பையா பெயரிலான உபகாரச் சம்பள நிதி உருவானது எனத் தெரிவித்தார் கிரிஜா.

அந்த நிதிக்கு தலைவராக இரா.பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். கு.பத்மநாபன் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தார். வாரியக் குழுவில் மஇகாவின் துணைத் தலைவராக இருந்த (டான்ஸ்ரீ) சி.சுப்பிரமணியம் இடம்  பெற்று இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி நடத்திய பல நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

பாலகிருஷ்ணன் தலைவராக பணியாற்றிய காலத்தில் பல சிறந்த இசைக் கலைஞர்களையும் நடனக் கலைஞர்களை மலேசியாவுக்கு கொண்டு வந்து நிகழ்ச்சிகளைப் படைத்தார். அதன் மூலம் திரட்டப்பட்ட நிதி இராம சுப்பையா உபகரச் சம்பள நிதியில் சேர்க்கப்பட்டது.

ரஜினிகாந்த் கலைநிகழ்ச்சியை நடத்திய
இராம சுப்பையா நிதி வாரியம்

1995 ஆம் ஆண்டு, பாட்ஷா பட வெளியீட்டு சமயத்தில்  நடிகர் ரஜினிகாந்த் மலேசியா வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தியபோது –  அமரர் ஆதி குமணன் தலைவராக இருந்த மலேசியா எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து – அந்த நிகழ்ச்சிகளை ஏற்று நடத்தியது இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி வாரியம்.

கடந்த 50 ஆண்டுகளாக கல்வி, சமூக சேவைகளை வழங்கி வந்திருக்கும் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி வாரியத்தின் சேவைகள், சமூகப் பங்களிப்புகள் குறித்த பதிவுகளோடு, இந்த நிதிவாரியம் உருவாகக் காரணமாக இருந்த இராம சுப்பையாவின் வாழ்க்கைச் சம்பவங்களையும் விவரிக்கும் நோக்கத்தோடு உருவானதுதான் ஜனவரி 6-ஆம் தேதி வெளியீடு காணவிருக்கும் நூல் எனக் குறிப்பிடுகிறார் கிரிஜா.

இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதியின் மூலம் வழங்கப்படும் பெரும்பாலான நிதி உதவிகள் கடன்களாக வழங்கப்படுகின்றன. இதன் மூலம் படித்து முடித்தவர்கள் அந்த பணத்தை திருப்பி செலுத்துவதோடு அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் திரும்ப செலுத்தப்படும் அந்த பணத்தைக் கொண்டு உதவி நிதி வழங்கலாம் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறது இந்த வாரியம்.

இந்த நாட்டில் இந்தியர்களுக்காக தொடங்கப்பட்ட முதல் கல்வி உபகாரச் சம்பள நிதியாக இந்த நிதி கருதப்படுகிறது. நாட்டின் தனியார் உபகாரச் சம்பள நிதி என்ற அளவில் இரண்டாவது உபகார சம்பள நிதி இது எனவும் கருதப்படுகிறது

மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையும்
இணையும் நூல் வெளியீட்டு விழா

சிவபாலன் கோவிந்தசாமி

இந்த நூல் வெளியீட்டு விழாவில் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து பங்கெடுத்துள்ளது. தற்போது அதன் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிவபாலன் கோவிந்தசாமி இந்த நூல் வெளியிட்டு விழாவுக்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு நல்கியிருக்கிறார் எனவும் தெரிவித்தார் கிரிஜா.

இந்திய ஆய்வியல் துறையின் முதல் மலேசியத் தலைவரை கௌரவிக்கும் முறையில் நடத்தப்படும் இந்த நூல் வெளியீட்டு விழாவின் மூலம் திரட்டப்படும் பணம் அனைத்தும் இராம சுப்பையா உபகாரச்சம்பள நிதியில் சேர்க்கப்படும்.

இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதியின் மூலம் உதவிகள் பெற்ற முன்னாள் பல்கலைக் கழக மாணவர்களும், பொதுமக்களும் டாக்டர் இராம சுப்பையா குறித்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் திரளாகக் கலந்து கொண்டு ஆதரவு தருவார்கள் என நம்புவதாகவும் கிரிஜா மேலும் தெரிவித்தார்.

-இரா.முத்தரசன்