கோலாலம்பூர் : துபாய் நகர்வு என்னும் பெயரில் நாட்டில் ஆட்சி மாற்றம் என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கும் நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) மாமன்னரைச் சந்தித்தார். நாளை புதன்கிழமை வழக்கமாக நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பாக, பிரதமர் மாமன்னரைச் சந்தித்து அமைச்சரவை முடிவுகள் குறித்து தகவல் தெரிவிப்பது நடைமுறையாகும்.
அந்த வகையில் அன்வார் இப்ராகிமின் கூற்றுப்படி, அரண்மனை எந்த அரசியல் நகர்வுகளிலும் ஈடுபடாது என்று மாமன்னர் இன்றைய சந்திப்பின்போது உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.
“பிரதமராக நானும் மதானி ஒற்றுமை அரசாங்கமும் நாட்டை நிர்வகிப்பதில் எங்களின் பணியைத் தொடர வேண்டும் என்று மாமன்னர் உத்தரவிட்டுள்ளார். அரண்மனை எந்த அரசியல் நகர்வுகளிலும் சம்பந்தப்படுத்திக் கொள்ளாது என்றும் மாமன்னர் தெரிவித்தார்” என்று அன்வார் இன்று தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நடப்பு மாமன்னரான பகாங் ஆட்சியாளரின் பதவிக் காலம் இந்த மாதம் இறுதியோடு நிறைவுக்கு வருகிறது. அவருக்குப் பதிலாக புதிய மாமன்னராக ஜோகூர் ஆட்சியாளர் அரியணை அமரவிருக்கிறார். தான் மாமன்னராகப் பதவியேற்கும் வரை யாரையும் சந்திக்க அனுமதிக்கப் போவதில்லை என்றும் ஏற்கனவே தான் சந்திக்க நேரம் ஒதுக்கியவர்களை மட்டுமே சந்திப்பேன் என்றும் ஜோகூர் சுல்தான் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஆட்சி மாற்றத்திற்கு சத்தியப் பிரமாணக் கடிதங்கள் மூலம் 123 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருப்பதாக கெடா மாநில மந்திரி பெசாரும் பாஸ் தேர்தல் இயக்குநருமான முகமட் சனுசி முகமட் நோர் தெரிவித்திருக்கிறார்.