புத்ரா ஜெயா : துன் டாயிம் சைனுடினுக்கு எதிரான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை வளையம் விரிவடைந்ததைத் தொடர்ந்து டாயிம் துணைவியாரும் அவரின் இரு புதல்வர்களும் இன்று ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்து தங்களின் வாக்குமூலத்தை வழங்கினர்.
கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) டாயிம் மீதான விசாரணை தொடர்பில் நான்கு நபர்களை புத்ராஜெயாவில் உள்ள அதன் தலைமையகத்திற்கு விசாரணைக்காக வரவழைத்தது.
டாயிம் சைனுடின் மனைவி தோபுவான் நைமா அப்துல் காலிட், அவரின் இரண்டு புதல்வர்கள் முகமட் அமின் சைனுடின் டாயிம் மற்றும் முகமட் அமிர் சைனுடின் டாயிம் ஆகியோர் இன்று புதன்கிழமை (ஜனவரி 10) புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வருகை தந்து வாக்குமூலம் வழங்கியதை ஆணையமும் உறுதிப்படுத்தியது.
இணையம் வழி வெளியிடப்பட்ட பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணங்களின் அடிப்படையில் டாயிம் சைனுடின் மீதான விசாரணையை முடுக்கி விட்டுள்ள ஊழல் தடுப்பு ஆணையம் டாயிம் குடும்பத்துக்கு சொந்தமான இல்ஹாம் அடுக்குமாடிக் கட்டடத்தை கைப்பற்றியிருக்கிறது.
டாயிம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார். இந்த நடவடிக்கை தன் மீதான பழிவாங்கும் செயல் என டாயிம் சாடியிருக்கிறார்.
டிசம்பர் 30-ஆம் தேதி வெளியிட்ட ஓர் அறிக்கையில், தற்போதுள்ள சட்டம் மற்றும் பண்டோரா ஆவணங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் டாயிம் மீதான விசாரணை நடத்தப்படுகிறது என ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.