Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : தேஜாவு 375 – தொடரின் கலைஞர்களுடன் சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ : தேஜாவு 375 – தொடரின் கலைஞர்களுடன் சிறப்பு நேர்காணல்

462
0
SHARE
Ad

கோவிந்த் சிங், இயக்குநர்:

கே: தேஜாவு 375 தொடரை இயக்குவதற்கான உங்களின் உத்வேகம் என்ன?

ப: இந்தத் தொடரை இயக்க ரீச் புரொக்‌ஷன்ஸ் உரிமையாளர்களான யுகேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் என்னை முதலில் அணுகினர். தொடரின் வகை சைக்கோ-த்ரில்லர் என அவர்கள் கூறிய தருணத்தில் நான் உற்சாகமடைந்தேன். ஏனெனில், அது எனக்கு மிகவும் பிடித்தக் கதை வகையாகும். இயக்குநராக என்னுடைய முதல் திரைப்படமானச் ‘செந்தோழன் செங்கதிர்வாணன்’ ஒரு சைக்கோ த்ரில்லரின் சாயல்களைக் கொண்டிருந்ததால், இத்தொடரின் திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதற்கு எனக்கு எளிதாக இருந்தது.

கோவிந்த் சிங்
#TamilSchoolmychoice

இந்தத் தொடரின் மூலம் அனைத்துப் பெற்றோருக்கும், குறிப்பாகப் பெண் குழந்தைகளைக் கொண்டவர்களுக்கு, தங்கள் பெண் பிள்ளைகளின் செயல்பாடுகளை எப்போதும் கண்காணிக்க வேண்டும் என்ற வலுவானச் செய்தியை வழங்க விரும்பினேன். எனக்கும் ஒரு மகள் இருப்பதால், இந்தக் கதையுடன் என்னால் எளிதாக தொடர்புப்படுத்த முடிந்தது. வலுவாக விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி, ஒரு புத்திசாலியானக் கொலையாளி மற்றும் விவேகமான வழக்கறிஞர் ஆகியோரைத் தொடர்புப்படுத்தும் ஒரு முப்பரிமாணத் திரைக்கதையை நான் உருவாக்க விரும்பினேன். தேஜாவு 375 தொடரின் திரைக்கதையை எழுதுவதில் அதுவே மிகப்பெரியச் சவாலாக இருந்தது.

அந்தச் செயல்பாட்டின் போது, ​​குவாண்டைன் டரான்டினோ மற்றும் ஜேம்ஸ் வான் ஆகியோரின் யுத்திகளுடன் கமல் சாரின் பணியிலிருந்து நான் நிறைய உத்வேகத்தைப் பெற்றேன். நான் யோசனைகளை மட்டுமே பெறுவதை உறுதி செய்தேன். எனதுச் சுயப் பாணியில் கதைக் கூறலை உருவாக்கினேன். இது இரசிகர்களுடன் பொருந்தியதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

கே: தேஜாவு 375 தொடரை இயக்கி நடித்த உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகளைப் பகிர்ந்துக்கொள்ளுங்கள்?

தயாரிப்பாளர்களுடனான ஆரம்ப சந்திப்பிலிருந்து, திரைக்கதை கலந்துரையாடல், திரைக்கதை எழுதுவது, இயக்குவது, பிந்தையத் தயாரிப்பு, இசையமைப்பு வரை படப்பிடிப்பில் ஒவ்வொரு தருணத்தையும் நான் இரசித்தேன். இரட்டை வேடங்களில் நடிக்கும் மூன் நிலாவின் படப்பிடிப்பு சற்றுச் சவாலான பகுதியாக இருந்தது. ஆனால் நான் ஏற்கனவே ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் இதைச் செய்திருப்பதாலும், எனது தொழில்நுட்பக் குழுவின் பெரும் ஆதரவாலும், நாங்கள் இதைக் குறைபாடற்ற முறையில் வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடிந்தது. அதுமட்டுமல்லாமல், 80களின் தமிழ் திரைப்பட நீதிமன்ற நாடகத்திற்கும் நிஜ வாழ்க்கை நீதிமன்றச் சூழ்நிலைக்கும் இடையில் ஏதாவதுச் செய்ய விரும்பினேன். எனவே, நீதிமன்றக் காட்சிகளை மிகவும் சுவாரசியமாக்கச் சில விதிகளை மீற வேண்டியிருந்தது.

மூன் நிலா & சூர்ய பிரகாஷ், நடிகர்கள்:

கே: தேஜாவு 375 தொடரில் நீங்கள் நடித்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றி கூறுங்கள்?

மூன் நிலா

மூன் நிலா: இந்தத் தொடரில் நான் இரட்டை வேடத்தில் நடித்தேன். பேசுவதற்குச் சைகை மொழியைப் பயன்படுத்தும் பேச இயலாத ஒரு அப்பாவி பெண்ணான பவானி, முதல் கதாப்பாத்திரம். எப்போதும் தன் மனதில் பட்டதை பேசும் துணிச்சலான வழக்கறிஞரான பவானியின் மூத்த சகோதரி, இரண்டாவது கதாப்பாத்திரம். என் சகோதரியுடனானப் பிணைப்பு மற்றும் எனதுத் தைரியம் உட்பட, தேஜாவு 375-இல் எனதுப் பாத்திரங்கள் எனது நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. இந்த பாத்திரங்களில் சித்திரிக்கப்பட்ட உணர்ச்சிகள் என் சொந்த அனுபவங்களுடன் ஆழமாகத் தொடர்புள்ளன.

சூர்ய பிரகாஷ்

சூர்ய பிரகாஷ்: ஒரு காவல்துறை அதிகாரியாக நடிப்பது இதுவே எனது முதல் முறை. எனவே இந்தச் சவாலானப் பாத்திரத்திற்கு இயக்குநருடன் பல கலந்துரையாடலில் ஈடுபடுவதும், முழுமையானத் தயார்நிலையில் இருத்தலும் முக்கியமானதாக இருந்தது. உண்மையானக் காவல்துறை அதிகாரிகளுடன் உரையாடும் வாய்ப்பைப் பயன்படுத்தி, அக்கதாப்பாத்திரத்தைச் சிறப்பாகச் சித்திரிப்பதற்க்கான நுண்ணறிவுகளைப் பெற்றுக் கொண்டேன்.

கே:தேஜாவு 375 தொடரில் நடித்த அனுபவம் எவ்வாறு இருந்தது?

மூன் நிலா: அப்பாவிகளைப் பாதுகாப்பது தனிப்பட்டப் பண்பாக இருக்கையில் தேஜாவு 375-இல் ‘குற்றவாளியை’ ஆதரிக்கும் ஒரு வழக்கறிஞராக நடித்தது உண்மையில் ஒரு சவாலான அனுபவமாக இருந்தது. ஒரு நடிகராக, எனது கதாபாத்திரத்தின் கூறுகளையும் என்னுடையத் தனிப்பட்டப் பண்புகளிலிருந்து பிரிப்பதன் முக்கியத்துவத்தை நான் புரிந்துக்கொண்டேன். நிஜ வாழ்க்கையில், சட்ட அமைப்பிற்குள் நியாயம் மற்றும் உண்மைக்காக வாதிட நான் முயற்சிப்பேன், நீதி வெற்றிப் பெறுவதை உறுதிச்செய்வேன்.

பவானியாக நான் நடிப்பதற்குச், சைகை மொழியைக் கற்றுக்கொண்டது கடினமாக இருந்தாலும் பலனளிக்கும் பயணமாக இருந்தது. 8 மாதங்களில் YMCA-இல் வகுப்புகளுக்குச் சென்றுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றது குறிப்பிடத்தக்க சாதனையாக இருந்தது. எனது ஆசிரியர்களின் ஆதரவிற்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். ஏனெனில், அவர்கள் படப்பிடிப்பு இடத்திற்குக் கூட வந்துச் சைகை மொழியைச் சரியாக நான் பயன்படுத்துவதை உறுதிச் செய்தனர். அமைதியானத் தருணங்களைப் பாராட்டவும், பொறுமையைக் கண்டறியவும், மக்களுடன் சிறந்தத் தொடர்புகளை வளர்க்கவும், மற்றும் இந்த அனுபவங்களை எனது மறக்கமுடியாத நினைவுகளாக மாற்றவும் சைகை மொழியைக் கற்றுக்கொண்ட அனுபவம் அனுமதித்தது.

சூர்ய பிரகாஷ்: தேஜாவு 375 தொடரில் முண்ணனி நடிகராக மட்டுமல்லாமல், இணை இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் பலனளிப்பதாக இருந்தது. இரண்டு பொறுப்புகளும் சவாலாக இருந்தாலும் திரைப்படத் தயாரிப்பில் என் ஆர்வத்தின் அடிப்படையில் இது ஒரு நிறைவான முயற்சியாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்து, திரைப்படத் தயாரிப்பில் மேலும் வளர இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருக்கு இவ்வேளையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.