Home Photo News இரா.முத்தரசன் எழுதிய ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ தமிழ் நூல் வெளியீட்டு...

இரா.முத்தரசன் எழுதிய ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ தமிழ் நூல் வெளியீட்டு விழா

533
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நமது 10-வது மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இளமைக் காலம் முதற்கொண்ட  நீண்ட சமூக, அரசியல் போராட்டப் பயணத்தை – அவரின் முக்கிய வாழ்க்கைச் சம்பவங்களை – பொதுத் தேர்தல் களங்களில் அவர் வகுத்த வியூகங்களின் பின்னணிகளை– ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான இரா.முத்தரசன்.

அந்நூலின் அறிமுகமும் – வெளியீட்டு விழாவும் வியாழக்கிழமை பிப்ரவரி 15-ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்கா சதுக்கம், ஜாலான் ராஜாவில் அமைந்துள்ள ராயல் சிலாங்கூர் கிளப் மண்டபத்தில் நடைபெறுகிறது.

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நூலை வெளியிட்டு சிறப்பு செய்கிறார்.

டத்தோஸ்ரீ எம்.சரவணன்
#TamilSchoolmychoice

பிரதமர் குறித்து தமிழில் வெளிவந்திருக்கும் ஒரே நூல் என்ற அடிப்படையில் ஒற்றுமை அரசாங்கத்தின் மற்ற கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் கலந்து கொண்டு இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை சிறப்பிக்கின்றனர்.

எம்.குலசேகரன்

அரசாங்க அமைப்புகளின் மறுசீரமைப்பு, சட்டத்துறை துணை அமைச்சரான மாண்புமிகு எம்.குலசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

பி.பிரபாகரன்

மித்ராவின் தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு பி.பிரபாகரன் சிறப்புரையாற்றுகிறார்.

மலேசியாவில் மட்டுமின்றி பன்னாட்டு அளவிலும் கணினி, கையடக்கக் கருவிகளில் மொழிகளை உள்ளீடு செய்வதில் முத்திரை பதித்து வரும் முத்து நெடுமாறன் இந்த நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்.

முத்து நெடுமாறன்

தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (UPSI) மூத்த விரிவுரையாளரான முனைவர் இளங்குமரன் சிவநாதன் ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ நூல் குறித்த அறிமுக உரையை வழங்குவார்.

முனைவர் இளங்குமரன் சிவநாதன்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் தம்புன் நாடாளுமன்றத் தொகுதிக்கான சிறப்பு அதிகாரி ஆர்.சுரேஷ் குமார் சிறப்பு வருகையாளராக இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவருமான சிவராசா ராசையாவும் சிறப்பு விருந்தினராக இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பிப்பார்.

ஆர்.சுரேஷ் குமார்
சிவராசா ராசையா

மேலும் பல சிறப்பு பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

அன்வாரின் வாழ்க்கையை முழுமையாகப் பதிவு செய்திருக்கும் நூல்

அன்வார் பல்கலைக் கழக மாணவர் தலைவராக – அபிம் என்னும் இஸ்லாமிய இளைஞர் இயக்கத் தலைவராக – மேற்கொண்ட சமூகப் போராட்டங்கள், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைவாசம், அம்னோவில் அரசியல் நுழைவு, பிகேஆர் கட்சியின் மூலமான நகர்வுகள், ஓரின உறவு குற்றச்சாட்டுகளின் நீதிமன்ற வழக்குகள், அரச மன்னிப்புடன் கூடிய விடுதலை, ஷெராட்டன் நகர்வினால் இழைக்கப்பட்ட துரோகம், 15-வது பொதுத் தேர்தலின் மூலமாக பிரதமரான பரபரப்பு நிமிடங்கள், அவரின் ஓராண்டு ஆட்சியில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள், அவரின் எதிர்கால சவால்கள், – என அன்வார் இப்ராகிம் பற்றிய முழுமையான ஒரு வரலாற்றுப் பதிவாக இந்த நூல் உருவாகியிருக்கிறது.

இரா.முத்தரசன்

விறுவிறுப்பான நடையில், பரபரப்பான அரசியல் சம்பவங்களை நாவல் பாணியில் விவரிக்கும் அணுகுமுறையில் இந்த நூல் வித்தியாசமாகப் படைக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் அன்வாரின் அரசியல் வாழ்க்கை குறித்த ஒரே தமிழ் நூல் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரா.முத்தரசன் தன் எழுத்துலகப் பயணத்தில் 6-வது நூலாகப் படைத்திருப்பதுதான் ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ என்ற இந்த புதிய நூல்.

2009-இல் அன்வார் இப்ராகிம் குறித்து இரா.முத்தரசன் எழுதி வெளியிட்ட நூல்கள்

தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும், அனைத்துலக அளவிலும் நமது 10-வது பிரதமர் அன்வார் இப்ராகிம் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டு, ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ நூல், சென்னையிலுள்ள பதிப்பகத்தால் பதிப்பிக்கப்படுகிறது என்பதும் இந்த நூலின் இன்னொரு சிறப்பம்சமாகும்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பிக்கும்படி அனைவரும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நூல் வெளியீட்டு விழா குறித்த மேல்விவரங்களுக்கு :

கைப்பேசி: 012-2326967

மின்னஞ்சல் : mutharasan5643@gmail.com