Home Photo News ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ நூல் வெளியீடு கண்டது

‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ நூல் வெளியீடு கண்டது

628
0
SHARE
Ad

கோலாலம்பூர் : செல்லியல் நிருவாக ஆசிரியரும் எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான இரா.முத்தரசன் எழுதிய ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ என்ற நூலின் வெளியீட்டு விழாவும் அறிமுகமும் – நேற்று  வியாழக்கிழமை பிப்ரவரி 15-ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்கா சதுக்கம், ஜாலான் ராஜாவில் அமைந்துள்ள ராயல் சிலாங்கூர் கிளப் மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது.

நூலாசிரியர் இரா.முத்தரசன்

நமது 10-வது மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இளமைக் காலம் முதற்கொண்ட  நீண்ட சமூக, அரசியல் போராட்டப் பயணத்தை – அவரின் முக்கிய வாழ்க்கைச் சம்பவங்களை – பொதுத் தேர்தல் களங்களில் அவர் வகுத்த வியூகங்களின் பின்னணிகளை– ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான இரா.முத்தரசன்.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நூலை வெளியிட்டு சிறப்பு செய்ததோடு, உரையாற்றிய மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், அன்வார் கைது செய்யப்பட்ட இரவு அந்த இடத்தில் இருந்ததை நினைவு கூர்ந்தார். “அந்த சமயத்தில் அங்கிருந்த ஒரே மஇகா தலைவர் நான்தான். அப்போது துடிப்புடன் செயல்பட்ட காரணத்தால் அங்கு சென்றேன். மஇகா தலைவர்கள் அன்வாருக்கு ஆதரவாக திரண்டிருக்கிறார்கள் என்ற தகவலும் அப்போது பகிரப்பட்டது” என்றும் சரவணன் கூறினார்.

#TamilSchoolmychoice

அன்வாரின் போராட்ட வாழ்க்கையும், தன்னம்பிக்கையோடு இறுதிவரை தளராமல் போராடும் குணமும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்கள் என்றும் சரவணன் குறிப்பிட்டார்.

எம்.குலசேகரன் உரை

பிரதமர் அன்வாரின் அரசியல் அணுகுமுறை என்பது இனம் சார்ந்து இல்லாமல், தேவை சார்ந்து இருக்கிறது நாம் புரிந்து கொள்ள வேண்டும் அதற்கேற்ப அவரின் முயற்சிகளுக்கு ஆதரவு தர வேண்டும் என குலசேகரன் குறிப்பிட்டார். தெலுக் இந்தான் இடைத் தேர்தலில் தான் முதன் முதலாகப் போட்டியிட்ட போது பிரச்சாரத்தின்போது அன்வாரைச் சந்தித்ததையும் நினைவுகூர்ந்தார் குலசேகரன்.

அரசாங்க அமைப்புகளின் மறுசீரமைப்பு, சட்டத்துறை துணை அமைச்சரான மாண்புமிகு எம்.குலசேகரன் தனது வாழ்த்துரையில் நூலை ஓராண்டு கால உழைப்பைத் தந்து உருவாக்கியிருக்கும் இரா.முத்தரசனின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.

பி.பிரபாகரன் உரை

மித்ராவின் தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு பி.பிரபாகரன் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

மற்ற கட்சி தலைவர்களும் குறிப்பாக மஇகா துணைத் தலைவர் சரவணனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது முன்கூட்டியே தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட பிரபாகரன் சமுதாய நலனுக்காக யாரிடமும் இணைந்து பணியாற்றத் தயார் என்றும் அறிவித்தா.

கணினித் துறை நிபுணர், முத்து நெடுமாறன் இந்த நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். கணித் தமிழ் 24 மாநாடு குறித்த விவரங்களையும் செய்யறிவு அல்லது செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில் நுட்பங்களின் வருகையால் தமிழ் மொழி எதிர்நோக்கவிருக்கும் சவால்களை முத்து நெடுமாறன் விளக்கினார்.

நூல் அறிமுகம் வழங்கிய இளங்குமரன்

தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் (UPSI) உயர்நிலை விரிவுரையாளரான முனைவர் இளங்குமரன் சிவநாதன் ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ நூல் குறித்த அறிமுக உரையை நூல் வெளியீட்டு விழாவில் வழங்கினார்.

திரளாகக் கலந்து கொண்ட பிரமுகர்கள்

இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் தம்புன் நாடாளுமன்றத் தொகுதிக்கான சிறப்பு அதிகாரி ஆர்.சுரேஷ் குமார், முன்னாள் துணையமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ வி.எல்.காந்தன். நாடாளுமன்ற அவையின் முன்னாள் சபாநாயகரும் வழக்கறிஞருமான டி.பி.விஜேந்திரன், மலேசியாவுக்கான இந்தியத் துணைத் தூதர் மேன்மைமிகு சுபாஷிணி நாராயணன், ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

மனஹரனின் அன்வார் குறித்த கவிதைகள் வாசிப்பு

கவிதை வாசித்த அண்ணாதுரை

1999-இல் அன்வார் கைது செய்யப்பட்டபோது ஆயர்தாவார், பேராக்கைச் சேர்ந்த கவிஞர் மனஹரன் தன் மனக் குமுறலை வெளிப்படுத்தி எழுதிய கவிதை மேடையில் டாக்டர் அண்ணாதுரை அவர்களால் வாசிக்கப்பட்டது.

அன்வார் பிரதமரானபோது மனஹரன் எழுதிய மற்றொரு கவிதையும் நிகழ்ச்சி நெறியாளராகச் செயல்பட்ட ராமேஸ்வரி ராஜா அவர்களால் வாசிக்கப்பட்டது.

இலண்டன் வீரா வாழ்த்துரை

இலண்டன் வீரா உரையாற்றுகிறார்

முத்தரசனின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரின் குடும்ப நண்பர் இலண்டனைச் சேர்ந்த திரு வீரா வாழ்த்துரை வழங்கினார்.

இரா.முத்தரசன் ஏற்புரை

மலேசியாவுக்கான இந்தியாவின் துணைத் தூதருக்கு சிறப்பு

விறுவிறுப்பான நடையில், பரபரப்பான அரசியல் சம்பவங்களை நாவல் பாணியில் விவரிக்கும் அணுகுமுறையில் இந்த நூலை வித்தியாசமாக உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார் முத்தரசன். இந்த நூலை தமிழ் நாட்டுப் பதிப்பகம் ஒன்று வெளியிட முன்வந்திருப்பதையும் அதன் மூலம் இந்நூல் அனைத்துலக அளவில் தமிழ் வாசகர்களை சென்றடையும் என எதிர்பார்ப்பதாகவும் முத்தரசன் தெரிவித்தார்.

தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும், அனைத்துலக அளவிலும் நமது 10-வது பிரதமர் அன்வார் இப்ராகிம் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டு, ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ நூல், சென்னையிலுள்ள பதிப்பகத்தால் பதிப்பிக்கப்படுகிறது என முத்தரசன் குறிப்பிட்டார்.

இன்றைய காலகட்டத்தில் அன்வாரின் அரசியல் வாழ்க்கை குறித்த ஒரே தமிழ் நூல் இதுதான் என தன் ஏற்புரையில் முத்தரசன் குறிப்பிட்டார்.

‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ நூலைப் பெற விரும்புபவர்கள் கீழ்க்காணும் கைப்பேசியிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

கைப்பேசி: 012-2326967

மின்னஞ்சல் : mutharasan5643@gmail.com