கோலாலம்பூர் : சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மாறாக, துன் மகாதீர் முகமட் நலமுடன் உள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய 20 பிப்ரவரி தேதியிட்ட ஸ்டார் ஆங்கிலப் பத்திரிகையை மகாதீர் படித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருக்கவில்லை என்றும், சுய நினைவுடன் செயல்படுகிறார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி மகாதீர் தொற்று தொடர்பான சிகிச்சைக்காக தேசிய இருதய மருத்துவக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து பிப்ரவரி 13 முதல் அவர் தொடர்ந்து ஓய்வில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
98 வயதான மகாதீரின் உடல்நலம் அண்மையில் ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டது. துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடிக்கு எதிராக மகாதீர் தொடுத்திருந்த அவதூறு வழக்கில், மகாதீர் கலந்து கொள்ள இயலாத நிலையில் இருக்கிறார் என்ற தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மகாதீரின் வழக்கறிஞரான மியோர் நூர் ஹாய்டிர் சுஹாய்மி அந்த நீதிமன்ற வழக்கை ஒத்திவைக்கும்படி மகாதீரின் உடல்நலத்தைக் காரணம் காட்டி நீதிபதிக்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தார். மகாதீர் தேசிய இருதய மருத்துவக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலையும் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து மகாதீரின் உடல்நலம் குறித்த ஆரூடங்கள் பரவத் தொடங்கின.