புதுடில்லி : டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வியாழக்கிழமை (மார்ச் 21) மாலையில் அவரின் இல்லத்தில், டில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பில் அமுலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். நேற்றிரவு முழுவதும் அவர் அமுலாக்கத் துறை அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 22) காலை அவர் சிறப்பு நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படுவார்.
கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றத்திற்கு வரும்படி இதுவரை 9 அறிவிக்கைகள் (summonses) அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றைப் புறக்கணித்த அவர் விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து நீதிமன்ற ஆணையைப் பெற்ற அமுலாக்கப் பிரிவு கெஜ்ரிவால் இல்லத்தைச் சோதனையிட்டு அவரையும் விசாரித்தனர்.
அவரின் கைப்பேசிகளும், குடும்பத்தினரின் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக அவரின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய வரலாற்றில் பதவி வகிக்கும் முதலமைச்சர் ஒரு கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.
கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021–2022-ஆம் ஆண்டுகளில் டில்லி அரசாங்கம் மதுபானங்களுக்கான தீர்வை கொள்கையை அமுல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் மதுபான வியாபாரிகள் தங்களுக்குள் ஆதிக்கக் குழுக்களை ஏற்படுத்த வழியமைத்துத் தந்ததாகவும், இதன் தொடர்பில் கள்ளப் பணப் பரிமாற்றம், இலஞ்சம் வழங்குதல் ஆகியவை நிகழ்ந்ததாகவும் அமுலாக்கத் துறை குற்றம் சாட்டியிருக்கிறது. பின்னர் இந்த மதுபானக் கொள்கை இரத்து செய்யப்பட்டது.
இந்தக் கொள்கை தொடர்பில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை – இலஞ்சப் பணம் எதவும் பரிமாறப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.