Home நாடு கோலகுபு பாரு, பக்காத்தான் வேட்பாளர் ஏப்ரல் 7-ஆம் தேதி முடிவு!

கோலகுபு பாரு, பக்காத்தான் வேட்பாளர் ஏப்ரல் 7-ஆம் தேதி முடிவு!

367
0
SHARE
Ad
கோபிந்த் சிங்

கோலகுபுபாரு : ஜசெக தேசிய துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி முடிவு செய்யும் எனத் தெரிவித்தார்.

“போட்டியிடும் கட்சி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. ஜசெகதான் அங்கு போட்டியிடும்” என்றும் சிலாங்கூர் ஜசெக தலைவருமான அவர் கூறினார்.

கோபிந்த் சிங் இலக்கவியல் அமைச்சருமாவார்.

#TamilSchoolmychoice

கடந்த வியாழன் (ஏப்ரல் 4) அன்று, தேர்தல் ஆணையம் கோலகுபுபாரு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் மே 11 என நிர்ணயித்தது. முறையே ஏப்ரல் 27 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் மற்றும் முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறும்.

2013-ஆம் ஆண்டு முதல் உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள கோலகுபுபாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த 58 வயதான லீ, பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடினார். கடந்த மார்ச் 21-ஆம் தேதி அவர் காலமானதைத் தொடர்ந்து இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

2022 இல் நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் ஏழாவது இடைத் தேர்தல் இதுவாகும்.

கோலகுபுபாரு வாக்காளர் பட்டியலில் 39,362 வழக்கமான வாக்காளர்கள், 625 காவலர்கள், 238 ராணுவ வீரர்கள் மற்றும் மனைவிகள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள் என 40,226 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

லீ கீ ஹியோங்

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியின் பெண் சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் (படம்) வியாழக்கிழமை (21 மார்ச்) காலமானார். அவர் புற்று நோய் பாதிப்பால் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது.

கடந்த 3 தவணைகளாக கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியை ஜசெக சார்பில் லீ தற்காத்து வந்தார். கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் அவர் அந்தத் தொகுதியில் 4,119 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

2023 கணக்கெடுப்பின்படி, 46.4 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும், 30.7 விழுக்காடு சீன வாக்காளர்களையும் 18 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் கொண்டது கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதி.