Home இந்தியா கன்னியாகுமரியைக் கைப்பற்றுவாரா பாஜகவின் பொன்.இராதாகிருஷ்ணன்?

கன்னியாகுமரியைக் கைப்பற்றுவாரா பாஜகவின் பொன்.இராதாகிருஷ்ணன்?

322
0
SHARE
Ad
பொன்.இராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி : எந்தெந்தத் தொகுதிகளில் தமிழ் நாட்டில் பாஜக வெல்லும் என்ற ஆரூடங்கள் எழும்போதெல்லாம் கைகாட்டப்படும் தொகுதி கன்னியாகுமரி. இந்தியத் திருநாட்டின் தென்முனைத் தொகுதி!

2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாக நரேந்திர மோடி, பாஜக சார்பில் பிரதமராக முன் நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் கூட்டணி இல்லாமல் அதிமுகவை துணிச்சலுடன் தனியாகத் தமிழ்நாட்டில் களம் இறக்கினார்  ஜெயலலிதா.

பிரச்சாரக் கூட்டங்களில் ‘மோடியா லேடியா’ என முழக்கமிட்டார்.  மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.  ஜெயலலிதாவின் அலையை எதிர்த்து கன்னியாகுமரியை பாஜக சார்பில் கைப்பற்றியவர் பொன்.ஆர் என அழைக்கப்படும் பொன்.இராதாகிருஷ்ணன்.  பாஜகவை கன்னியாகுமரியில் வளர்த்தெடுத்ததில் பெரும் பங்காற்றியவர்.  மிகப் பாரம்பரியமான பெரிய  குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த தொகுதியில் அவருக்கு எப்போதும் மரியாதை. கண்ணியமான தோற்றமும் மரியாதையுடன் உரையாடும் தன்மையும் கொண்டவர் இராதாகிருஷ்ணன். பாஜகவில் யாரையும் புண்படுத்தாமல் பேசும் பண்பு கொண்டவர்.

#TamilSchoolmychoice

2019 பொதுத் தேர்தலிலும் இங்கு போட்டியிட்ட இராதாகிருஷ்ணன் அப்போது காங்கிரசின் சார்பில் போட்டியிட்ட  பிரபல வணிகர் வசந்தகுமாரிடம் தோல்வி அடைந்தார்.

அமரர் வசந்த குமார் (கன்னியாகுமரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

2019 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வசந்தகுமார் 2021-இல் அகால மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் அபார வெற்றி பெற்றார். அந்த இடைத் தேர்தலிலும் இராதாகிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மீண்டும் அவர் கன்னியாகுமரியில் போட்டியிடுவதால் பாஜக, இந்த முறை வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய் வசந்த்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த். தினமும் தவறாமல் தொலைக் காட்சி விளம்பரங்களிலும் – தமிழ் நாட்டில் திரும்பிய இடங்களில் எல்லாம் பதாகைகளாகவும் – காட்சி தரும் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர்.

பணபலம், தந்தை இறந்ததால் ஏற்பட்ட அனுதாபம் இவற்றோடு பல தமிழ்ப் படங்களில் நடித்திருந்ததால் கிடைத்த பிரபல்யமும் சேர்ந்து 2021-இல் கன்னியாகுமரி இடைத் தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றார் விஜய் வசந்த். அந்த இடைத் தேர்தலில் விஜய் வசந்தை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி கண்ட பொன்.இராதாகிருஷ்ணன் இப்போது இரண்டாவது சுற்று மோதலில் மீண்டும் ஈடுபட்டுள்ளார்.

2014-இல் சாதித்ததை மீண்டும் சாதிப்பாரா பொன்.ஆர். என்பதைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறது தமிழக அரசியல் களம்!