இந்திய சமுதாயத்திற்கென, தான் கொண்டு வந்த பல திட்டங்களை அவர் விவரித்ததோடு, இதனால் இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தான் எதுவும் செய்யவில்லை எனக் கூறுவது அபத்தம் என்றார் அன்வார்.
ஆனால் அன்வாரின் கருத்துகளுக்கு சமூக ஊடகங்களில் இந்திய சமூகத்தினரிடமிருந்து எதிர்ப்புகள் – மறுப்புகள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. இவையெல்லாம் வெறும் கடன் உதவிகள்தான் என்றும் இந்திய சமுதாயத்திற்கென நேரடியாக அன்வார் இதுவரையில் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நான் இந்திய சமுதாயத்திற்கு எதுவும் செய்யவில்லை என நீங்கள் கருதினால் என்னை நீங்கள் ‘குத்தலாம்’ எனவும் அன்வார் வலியுறுத்தினார். அதாவது ஆங்கிலத்தில் ‘you can stab me’ என்ற வார்த்தையை அன்வார் பயன்படுத்தினார். ஷா ஆலாம் ஐடிசிசி மாநாட்டு மண்டபத்தில் அம்பேத்கார் பிறந்த நாள் நிகழ்ச்சியில் அன்வார் உரையாற்றினார்.
“நான் யாரையும் மலாய்காரர், சீனர், இந்தியப் பணக்காரர் என்று பார்ப்பதில்லை. அவர்கள். வெற்றி அடைந்தவர்களா என்பதையும் பார்ப்பதில்லை. மாறாக வாய்ப்பு குறைந்தவர்கள் வறுமையில் வாடுபவர்களை குறித்துத்தான் நான் சிந்திக்கிறேன். நடவடிக்கை எடுக்கிறேன்” என அன்வார் மேலும் தனது உரையில் தெரிவித்தார்.
அம்பேத்காரின் பெருமைகள் – அன்வார் விவரித்தார்
“அடக்கு முறைக்கு ஆளான சமூகத்தில் இருந்து பிறந்த அவர் கல்வியால் மேன்மைக்கு வந்து இந்தியாவின் முதல் சட்ட- நீதித்துறை அமைச்சராக பணியாற்றினார். இந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கிய குழுவுக்கு அவர் தலைமையேற்றார். இந்தியா முழுமையிலுமுள்ள – அடக்குமுறைகளால் அவதிப்பட்ட சமூகங்களுக்காக அவர் போராடினார். அவர்களின் அரசியல் உரிமைகளுக்காக சமூக சுதந்திரத்திற்காக அவர் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். பெண்களுக்கான உரிமைகளுக்காகவும் அவர் அயராது உழைத்தார். இந்தியாவில் சட்டரீதியாக பெண்களுக்கும் சம உரிமைகள் சமரீதியான சலுகைகள் கிடைப்பதற்கு அவர் போராடினார். அத்தகைய உரிமைகளை சட்டபூர்வமாக்குவதற்கும் அவர் முயற்சிகள் செய்தார். விவாகரத்து செய்வதற்கு பெண்கள் உரிமை பெறுவதற்கும் பாரம்பரிய வம்சாவளி சொத்துக்கள் தங்களுக்கு வந்து சேர்வதற்கும் பெண்களுக்கு சட்ட அமைப்பை ஏற்படுத்தித் தந்தார்” என்றும் அன்வார் அம்பேத்காருக்கு புகழாரம் சூட்டினார்.