Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ‘இரவு வண்ணங்கள்’ கலைஞர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ : ‘இரவு வண்ணங்கள்’ கலைஞர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்

338
0
SHARE
Ad

“இரவு வண்ணங்கள்” – தொடரின் நடிகர்கள் மற்றும்
குழுவினருடன் ஒரு சிறப்பு நேர்காணல்

ரவீன்தாஸ் அரிதாஸ், இயக்குநர்:

கேள்வி : இரவு வண்ணங்கள் தொடரை இயக்கியதற்கான உங்களின் உத்வேகம் என்ன?

#TamilSchoolmychoice

பதில் : ராமேஸ்வரம் சென்று தங்களின் கடந்த கால வாழ்க்கையை ‘ஓலைச்சுவடி’ மூலம் அறிந்து கொண்டு அவ்வனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்ட எனது குடும்பத்தினர்தான் நான் சாபத்தின் அடிப்படையில் கதை எழுதுவதற்கும் இரவு வண்ணங்கள் தொடரை இயக்குவதற்கும் முக்கியத் தூண்டுகோலாக அமைந்தனர்.

ரவீன்தாஸ் ஹரிதாஸ்

இரவு வண்ணங்கள் தொடரை இயக்கிய உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

ஒரு பூனையுடன் வேலை செய்தது எனக்கு ஒரு புதிய – குறிப்பிடத்தக்க அனுபவமாக இருந்தது. நான் பல மதிப்புமிக்கப் பாடங்களையும் கற்றுக்கொண்டேன்.

யுவராஜ் கிருஷ்ணசாமி & நிவாஷினி, நடிகர்கள்:

இரவு வண்ணங்கள் தொடரில் நீங்கள் வகிக்கும் கதாப்பாத்திரத்தைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

யுவராஜ்: குடும்பத்தில் உள்ளப் பெரியவர்களின் திருமண உறவைப் பாதித்த பரம்பரைச் சாபத்தில் இருந்து விடுபட 5 ஜோடிகள் ஒன்றிணைவதை உறுதி செய்ய வேண்டியக் கர்ணன் என்ற முக்கியக் கதாப்பாத்திரத்தில் நான் நடித்தேன். தொடர் முழுவதும் விசித்திரமான உணர்வுகளை உள்ளடக்கியிருக்கும் ஒரு கதாப்பாத்திரத்தில் நான் நடிப்பது இதுவே முதல் முறை.

யுவராஜ் கிருஷ்ணசாமி

கதைக்காக வடிவமைக்கப்பட்டக் கதைக்களம் காரணமாக இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்தது சற்றுச் சவாலாகத்தான் இருந்தது. இருப்பினும், இந்தத் தொடரின் மிக முக்கியமானக் கதாப்பாத்திரங்களில் ஒன்றானப் “பூனை” உடனானத் தொடர்பு காரணமாக இந்தக் கதாபாத்திரம் எனக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. இக்கதாபாத்திரத்தை எனது நிஜ வாழ்க்கையுடன் தொடர்புபடுத்த இயலாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் சூழ்நிலைகளைக் கையாளும் பல யுத்திகளைக் கற்றுக் கொடுத்தது.

நிவா: கர்ணனின் பால்யத் தோழி ரேணுகாவாக நடித்தேன். தொடரின் ஆரம்பத்தில் எதிரிகளிலிருந்து சிறந்த நண்பர்களாக இருவரின் நட்பு வலுப்பெற்றது. ரேணுகா ஒரு வானொலி அறிவிப்பாளராக வேலை செய்வதால் இயல்பாகவேச் சகஜமாகப்பழகும் தன்மையைக் கொண்டிருந்தார். அவர் அனுதாபம் குணம் கொண்டவராக இருந்தாலும் நடைமுறைக்கேற்ப சிந்திப்பவர். கர்ணன் மற்றும் ரேணுகாவின் பந்தம் ரேணுகா எடுக்கும் பல முடிவுகளுக்கு அடித்தளம். ரேணுகா ‘காதலை’ விரும்புபவர், கர்ணன் ‘காதலை’ வெறுப்பவர் – காதலின் மீதான அவர்களின் வெவ்வேறு அபிப்ராயம் யின் மற்றும் யாங்கிற்க்கு இணையானது. வேறுபாடுகள் இருந்தப்போதிலும், கர்ணனும் ரேணுகாவும் ஒருவரையொருவர் முற்றிலும் வேறுபட்டப் பரிமாணத்தில் புரிந்துக்கொள்வார்கள். நிஜ வாழ்க்கையில், நான் ஓர் உள்முகச் சிந்தனையாளர் என்பதால் வானொலி அறிவிப்பாளராக வேண்டும் என்ற எனது ஆசையை நான் தொடரவில்லை. ரேணுகாவுக்கும் எனக்கும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவென்றால், நாங்கள் இருவரும் அனுதாபக் குணம் கொண்டவர்கள். பிறர் ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல் என்னால் அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துக்கொள்ள முடியும். ஒரு நடிகராக இது எனக்கு ஓர் ஆசீர்வாதம் என்றுதான் கூறுவேன். ஏனெனில், மிகவும் நம்பிக்கையுடன் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க இது அனுமதிக்கிறது.

கேள்வி : இரவு வண்ணங்கள் தொடரில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

யுவராஜ்: கர்ணன் பாத்திரத்தின் ஆழம் மற்றும் கதையில் அதன் தாக்கம் ஆகியவற்றை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்னிடம் கூறிய போது, ​​கர்ணனாக நடிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தது. நிவாஷினி, நவின் ஹோ, பிஜிடபிள்யூ, சுபாஷினி, புனிதா சண்முகம், ஷாமினி, கோவிந்த் சிங், தர்ஷாமினி போன்ற அற்புதமான நடிகர்களுடன் இந்தத் தொடரில் நடிப்பது மட்டுமல்லாமல், பூனையுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு என்னை மேலும் உற்சாகமூட்டியது. சுருக்கமாகக் கூறினால், பல சுவாரசியமான இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டது, படப்பிடிப்பு இடங்களில் பூனையைக் கையாண்டக் கடினமான நேரம், இயக்குநர் ரவீன்தாஸ் உருவாக்கியப் பயமுறுத்தும் தருணங்கள் என முழு படப்பிடிப்பு அனுபவமும் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது.}

நிவாஷினி

நிவா: மலேசியத் தமிழ் தொடரில் நான் நடிப்பது இதுவே முதல் முறையாகும், இரவு வண்ணங்கள் குழுவுடன் இது ஒரு மகிழ்ச்சியானப் பயணம். ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோலாலம்பூருக்கு நான் சென்றிருந்தபோது, ​​கதை விவரிப்பிற்காக ரவீன்தாஸ் சார் மற்றும் ஜேசு சார் முதன்முறையாக என்னைச் சந்திக்க வந்தது எனக்கு மிகவும் மறக்கமுடியாத தருணம். பெர்ஜயா டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள ஒரு காபி கடையில் நாங்கள் மிகவும் தீவிரமானக் கலந்துரையாடலை மேற்கொண்டோம்.

ரவீன்தாஸ் சார் அவருடைய நோக்கத்தில் உறுதியாக இருந்தார். முழு கதையையும் என்னிடம் விரிவாகவும் தெளிவாகவும் கூறினார். இருப்பினும் எனது கதாபாத்திரத்தைப் பற்றிய விபரம் அப்போது எனக்கு வழங்கப்படவில்லை. ஆனால் கதையைக் கேட்கும்போதே மிகவும் சுவாரசியமாக இருந்தது. அது என்னை இருக்கையின் விளிம்பிற்கும் அழைத்துச் சென்றது. நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன், நேர்முகத்தேர்வு ஸ்கிரிப்டை என்னிடம் கொடுக்கச் சொன்னேன். ரவீன்தாஸ் சார் ஒரு மோனோலாக் ஸ்கிரிப்டை என்னிடம் வழங்கி அதை உரக்கமாகப் படிக்கச் சொன்னார். வானொலி அறிவிப்பாளர் காட்சிகளில் ஒன்று அது. தமிழில் எண்கள் இருந்ததால் தெரியாமல் சற்றுத் தடுமாறினேன். அவர்கள் எதுவும் கூறாமல் விடைபெற்றனர். நான் அரிய வாய்ப்பை இழந்துவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால், மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு, ரேணுகா கதாபாத்திரத்திற்கு ஆடிஷன் செய்யச் சொன்னார்கள்! அதை நான் செய்தேன், மற்றவை எல்லாம் வரலாறு என்றுதான் கூறுவேன்.
ரவீன்தாஸ் சார் ஒரு தொலைநோக்குச் சிந்தனையாளர் மற்றும் தனது நோக்கத்திற்குத் தேவையான நடிப்புத் திறனைத் தனது கற்பனை மனதில் பதிய வைத்திருக்கும் ஓர் இயக்குநர். அவருடன் பணிபுரிந்தது மிகவும் அருமையான தருணமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், யுவராஜுடன் பணிபுரிந்தது வேடிக்கையாக இருந்தது. அவர் ஒரு விருது வென்ற நடிகர், இயக்குநர் மற்றும் ஸ்கிரிப்ட் எழுத்தாளர் என்பதை அறிந்தபின் கொஞ்சம் பதற்றமானேன்.

ஆனால் அவர் படப்பிடிப்பின் போது மிகவும் அன்பாகவும் என் சிறந்த நடிப்பை வெளிக்கொணர உதவியும் புரிந்தார். நான் வேலைச் செய்ய எனக்குப் போதுமான ஒத்துழைப்புக் கிடைத்தது. எங்களின் இரு கதாப்பாத்திரங்களும் நன்றாகப் பொருந்தின. அவர் பல அவதாரங்களைக் கொண்டிருந்தார். சில சமயங்களில் அவர் ‘இயக்குநர்’ அவதாரத்தில் ரவீன்தாஸ் சாருக்கு உதவியாகவும் பணிபுரிந்தார். எல்லோரும் சிறப்பாக ஒத்துழைப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அதுமட்டுமல்லாமல், நவீன் ஹோவை நான் முதன்முதலில் சந்தித்தப் போது யுவராஜுக்கும் அவருக்கும் ஏற்கனவே உள்ள வலுவான உறவை அறிந்தேன். நாங்கள் 3 பேரும் மிக நெருக்கமானக் கதாபாத்திரங்களில் நடிப்பதால் அவர்கள் இருவரோடு இணைந்து மூவரின் பிணைப்பை வலுப்படுத்தச் சற்றுச் சவாலாக இருந்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் செவ்வெனவே நடந்தது. நவீன் ஓர் உண்மையானத் திறமையான நடிகர். ரேணுகா வேடத்தில் நடிக்க இந்த வாய்ப்பைப் பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன். மனதிற்கு நெருக்கமான இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மலேசியப் பார்வையாளர்கள் இந்தத் தொடரைக் கண்டு இரசிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தத் தொடரின் குழு எண்ணற்ற உழைப்பை வழங்கியுள்ளனர். உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்தத் தொடரைக் கண்டு மகிழ்வீர்கள் என்று நம்புகிறோம்.