கோலாலம்பூர் : நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளான மசீசவும், மஇகாவும் பெரிக்காத்தானை ஆதரிக்க வேண்டும் – அதுவே அவர்களுக்கு நல்லது – என பெரிக்காத்தான் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் வேண்டுகோள் விடுத்தார்.
பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கு எதிராக மக்களின் உணர்வுகள் வளர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மசீசவும் மஇகாவும் கோலகுபு பாரு தேர்தலை புறக்கணித்தால் – பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியை ஆதரிக்காவிட்டால் – எங்களை ஆதரிப்பது நல்லது என்றும் முஹிடின் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) கோலகுபு பாருவில் நடைபெற்ற பெரிக்காத்தான் கூட்டணியின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசும்போது இவ்வாறு தெரிவித்தார்.
கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் 46 விழுக்காடு மலாய் வாக்காளர்களும் 30 விழுக்காடு சீனர்களும் 18 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் இருக்கின்றனர். 5 விழுக்காட்டினர் பூர்வ குடியினர் உள்ளிட்ட மற்ற சமூகங்களைச் சார்ந்தவர்கள்.
பக்காத்தான் ஹாரப்பானுக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்திருப்பதால், மக்கள் எவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராக எண்ணம் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கும் களமாக கோலகுபு பாரு இடைத் தேர்தல் அமையும் என்றும் முஹிடின் சுட்டிக் காட்டினார்.