Home இந்தியா கன்னியாகுமரியில் மோடி! அலறும் எதிர்க்கட்சிகள்!

கன்னியாகுமரியில் மோடி! அலறும் எதிர்க்கட்சிகள்!

236
0
SHARE
Ad

கன்னியாகுமரி : ஆரஞ்சு வண்ணத்தில் ஆன்மீக சுவாமிகள் அணியும் உடையில் – வேட்டி சட்டையில் – கன்னியாகுமரியில் ஆலயங்களில் வழிபாடுகள் நடத்துவதோடு, விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானத்திலும் ஈடுபட்டு வருகிறார் மோடி!

எதிர்க்கட்சிகளோ அலறித் துடிக்கின்றன. கேமராவுடன் சென்று தியானம் செய்கிறார் எனக் கிண்டல்கள் செய்கின்றன. அவர் தியானம் செய்யும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பக் கூடாது எனத் தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு நெருக்குதல்களையும் அளிக்கின்றன எதிர்க்கட்சிகள்!

மோடியின் வாழ்க்கையில் சிறப்பிடம் வகிக்கும் விவேகானந்தர்

பிரதமர் மோடியின் முழுப்பெயர்  நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்பதாகும். அந்தப் பெயரில் வரும் ‘நரேந்திர’ என்ற பெயர்தான் சுவாமி விவேகானந்தரின் இயற்பெயருமாகும். அதனால்தானோ என்னவோ, மோடிக்கும் விவேகானந்தர் மீது மிகுந்த அபிமானம். மலேசியாவுக்கு வருகை தந்தபோதுகூட விவேகானந்தரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார்.

#TamilSchoolmychoice

மீண்டும் 3-வது முறையாகப் பிரதமராவாரா என்ற விவாதங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வியாழக்கிழமை (மே 30) தனி விமானத்தில் கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் வந்தடைந்தார் மோடி.  அங்கிருந்து இலங்கூர்தி (ஹெலிகாப்டர்) மூலம் கன்னியாகுமரி சென்றார். அங்கு 2 நாட்கள் இருப்பார் – வழிபாடுகள் நடத்துவார் – விவேகானந்தர் பாறை மண்டபத்தில் தியானம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

3 நாட்களுக்கு கன்னியாகுமரியே ஸ்தம்பித்துக் கிடக்கிறது. கடல்புறம் என்பதால், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள். வட்டாரம் முழுவதும் பிரதமர் அலுவலகத்தின் பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில்!

தேர்தல் முடிவடைந்து விட்டதால் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. எதிர்பார்த்தது போலவே, கன்னியாகுமரியில் உள்ள  விவேகானந்தர் பாறை அமைந்துள்ள மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார் மோடி.

எல்லாத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் அந்தக் காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி வருகின்றன. எதிர்க்கட்சிகளோ கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கான வாக்களிப்பு நடைபெறவிருப்பதுதான் காரணம்! வாக்காளர்கள் இதனால் மோடிக்கு ஆதரவாக மனம் மாறுவார்கள் என்பதும் – நேற்றுடன் பிரச்சாரங்கள் நிறைவடைந்து விட்டதால் – மோடியின் தியானக் காட்சிகள் மறைமுகப் பிரச்சாரம் என்பதும் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள்!

விவேகானந்தர் பாறையின் முக்கியத்துவம்

சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் சுற்றிவரும்போது கன்னியாகுமரியை அடைந்து குமரி முனையில் இருந்து தூரத்தில் கடல் நடுவே அமைந்திருக்கும் பாறையைப் பார்க்கிறார். அங்கு செல்ல விரும்பினார். அப்போதெல்லாம் இப்போது போல் படகு வசதிகள் இல்லை (விவேகானந்தர் கன்னியாகுமரி சென்றது  டிசம்பர் 1892-இல்). சில படகுக்காரர்கள் அவரை ஏற்றிச் செல்ல முன்வந்தார்கள் என்றாலும், அவர்களுக்குக் கொடுப்பதற்கான கட்டணம் விவேகானந்தர் கைசமில்லை என்கிறது ஒரு குறிப்பு. நல்ல உடல் வலிமை கொண்ட விவேகானந்தர் கடலில் குதித்து நீச்சலடித்து பாறையை அடைந்தார். அங்கிருந்து தியானம் செய்தார். அவர் ஞானோதயம் பெற்றது அந்த தியானத்தின் மூலம்தான் என்பது வரலாறு.

கடந்த 2019 பொதுத் தேர்தல் முடிவின்போதும் மோடி இதே போல் கேதார்நாத் சென்று தியானம் செய்தார். இந்த முறை அவர் தேர்ந்தெடுத்தது கன்னியாகுமரி!

ஜூன் 1-ஆம் தேதி மோடி போட்டியிடும் வாரணாசியில் வாக்களிப்பு நடைபெறுகிறது.

மோடி செய்வது சரியா? தேர்தல் விதிமுறைகளுக்கு முரண்பட்டதா? என்ற விவாதங்கள் நடத்தலாம்! தவறில்லை!

ஆனால், ஒரு கட்சித் தலைவர் – ஒரு பிரதமர் – ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்யும் காட்சிகளை மட்டும் பார்த்து அவருக்கே வாக்களிப்பார்கள் என வாதிடுவது இந்திய வாக்காளர்களை முட்டாளாக்கும் – இந்திய ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கும் – வாதம்!

-இரா.முத்தரசன்