Home நாடு நரேந்திர மோடி அன்வார் இப்ராகிமுக்கு ஹஜ்ஜூ பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்

நரேந்திர மோடி அன்வார் இப்ராகிமுக்கு ஹஜ்ஜூ பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்

313
0
SHARE
Ad

அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் மீண்டும் மூன்றாவது தவணைக்கு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று கொண்டாடப்பட்ட  முஸ்லிம்களின் புனித பெருநாளான ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு அன்வாருக்கு மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அன்வாருக்கு அனுப்பிய தனது கடிதத்தில் ஹஜ் பெருநாள் என்பது தியாகத்தின் மதிப்பினை உணர்த்துவதாகவும் பரஸ்பர அன்பு, சகோதரத்துவம் ஆகிய அம்சங்களை வலியுறுத்துவதாகவும் மோடி தெரிவித்தார்.

அனைவரையும் உள்ளடக்கிய அமைதியான ஓர் உலகத்தை உருவாக்குவதற்கு இந்த அம்சங்கள் எல்லாம் மிக முக்கியமானவை எனவும் மோடி தனது செய்தியில் குறிப்பிட்டார். நமது பல இன கலாச்சார பாரம்பரியத்தின் ஓர் அங்கம்தான் ஹஜ் பெருநாள் என்பதையும் சுட்டிக்காட்டிய நரேந்திர மோடி இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றும் மில்லியன் கணக்கான இந்தியர்கள் இந்த பெருநாளை கொண்டாடுவதையும் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அன்வாரின் உடல்நலத்திற்கும் வாழ்த்து தெரிவித்த மோடி மலேசியர்கள் நலமுடனும் சிறப்புடனும் மேலும் மேம்பாடு அடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தையும் தனது செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.

மோடியின் அன்வாருக்கான வாழ்த்து செய்தி கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது

இதற்கிடையில் மோடி தனக்கு அனுப்பிய செய்தி குறித்து அன்வாரும் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

“எனக்கும் மலேசியர்களுக்கும் இந்தியப் பிரதமர் ஹஜ்ஜூப் பெருநாளுக்காகத் தெரிவித்த வாழ்த்துகளைக் கொண்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். உலக அமைதி என்பது நாம் ஒருவரோடு ஒருவர் ஒன்றுபட்டு இருப்பதையும் மனிதநேயம், ஒருவருக்கொருவர் கொண்டுள்ள மரியாதை, தியாகங்கள் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. இவற்றின் மூலம்தான் மேம்பாடடைந்த நாட்டை நாம் உருவாக்க முடியும். பிரதமர் மோடி குறிப்பிட்டபடி, நமது கலாச்சார, பாரம்பரிய அம்சங்கள் மதிக்கப்பட வேண்டும், உலக அளவில் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்துடனும். ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படும் இந்நன்னாளில் நான் உடன்படுகிறேன்” என அன்வார் தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

மோடியின் உடல் நலம் தொடர்ந்து சிறப்புடன் அமைய தான் இறைவனை இறைஞ்சுவதாகவும், இந்திய – மலேசிய நல்லுறவுகள் இருநாடுகளுக்கும் பயன் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து வலிமை பெற வேண்டும் என்றும் அன்வார் தனது முகநூல் பதிவில் மேலும் தெரிவித்தார்.