Home அரசியல் தேர்தலில் வெற்றி பெற காருக்கு தீ இடுபவர்கள் நல்ல இளைஞர்களையா உருவாக்குவார்கள்? – சேவியர் ஜெயக்குமார்...

தேர்தலில் வெற்றி பெற காருக்கு தீ இடுபவர்கள் நல்ல இளைஞர்களையா உருவாக்குவார்கள்? – சேவியர் ஜெயக்குமார் கேள்வி

543
0
SHARE
Ad

Untitled-4

கோலாலம்பூர், ஏப்ரல் 27 – சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் மகள் சங்கீதா ஜெயக்குமாரின் வீட்டில்,  கடந்த வியாழக்கிழமை இரவு சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக அறிக்கை ஒன்றை சேவியர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்.

தனது பத்திரிக்கை அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது;

#TamilSchoolmychoice

“கடந்த வியாழக்கிழமை இரவு என் மகள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தீ மூட்டியது, நம் இன இளைஞர்கள் தவறான முறையில் வழி நடத்தப் படுகிறார்கள் என்பதற்குச்  சரியான சான்றாகும். இப்படி நம் இளைஞர்களுக்குத் தவறான வழி காட்டுபவர்கள் தனிமனிதரோ, அரசியல்  இயக்கமோ  அல்லது  அரசாங்கமாகவே கூட இருந்தாலும்  அவர்களை ஜனநாயக ரீதியாகவே மக்கள் தண்டிக்க வேண்டும்.”

“இந்தத் தாக்குதல்  அவசியமற்றது. குறிப்பாக என் தேர்தல் வேலைகளை சீர்குலைக்கும் ஒரு நடவடிக்கையாகும், தேர்தல் வேலைக்கான பல முக்கிய ஆவணங்கள், ஆவி வாக்காளர்கள் மற்றும் அஞ்சல்  வாக்காளர்கள்  குறித்த பல ஆவணங்கள் இருந்த வாகனத்திற்குத் தீ வைத்ததன் வாயிலாக, இது முழு அரசியல் கீழறுப்பு வேலை என்பது உறுதியாகிறது. இதன்வழி எனது தேர்தல் பணிகளை சீரழித்து விட்டனர். இருப்பினும் இவர்களுக்கு தண்டனை அளிக்கும்  பொறுப்பை மக்களிடமே விட்டுவிடுகிறேன்.”

“மலேசியா ஒரு பல இன மக்கள் வாழும் நாடு, இப்பொழுது நடப்பது 13 வது பொதுத் தேர்தல், ஆக நம் நாட்டு மக்கள் ஜனநாயகக்  கலாச்சாரத்தில் கைத்தேர்ந்தவர்களாக  இருக்க வேண்டும். நமது முன்னோர்கள் காந்தி பிறந்த தேசத்தின் கலாச்சார  மரபுகளைக் கொண்டவர்கள். அங்கு இருந்து வந்த இனம், ஜனநாயக முறைகளுக்கு மதிப்பளித்து நடக்கும் ஒரு சமுதாயமாக நம்மை  மற்றவர்கள் எண்ண வேண்டும். ஆனால் நம் இளைஞர்களின் இன்றைய செயல், இந்திய சமுதாயத்திற்குப் பெரிய தலை குனிவையே ஏற்படுத்தி விட்டது.”

“இந்த 13 வது பொதுத்தேர்தலில் இப்படிப்பட்டவர்கள் வெற்றி பெற்றால் நம் சமுதாயத்தின் பயணம் எதை நோக்கிப் போகும்? எப்படிப்பட்ட இளைஞர் சமுதாயத்தை உருவாக்கப் போகிறார்கள் என்பதற்கு முன்னோடியாக இது  அமைகிறது. ஒரு பெண்ணிடம் வீரத்தைக் காட்டும் வழிமுறையா இது? கத்திக்கு- கத்தி, இரத்தத்திற்கு ரத்தம் என்ற கலாச்சாரத்தை வளரவிட்டால், எந்தக் குடும்பதில் நிம்மதியிருக்கும்? என்பதனை இந்தியர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.”

“இந்தச் சம்பவத்தை காரணம் காட்டி இந்திய இளைஞர்கள்  ஜனநாயகப்  போராட்டங்களுக்கு இன்னும் தயாராகாத கூட்டம் என எதிர் காலத்தில் மற்றவர்கள் இடித்துரைக்கும் நிலைக்கு நம்மவர்களை தள்ளக்கூடாது. தேர்தலில் வெற்றி தோல்விகள் சகஜம், ஆனால் போட்டி வேட்பாளர்களின் குடும்பங்களைஅதிலும் குறிப்பாக பெண்களை குறிவைத்து  அராஜகத்தில் இறங்கலாமா?”

“தேர்தல்  வேலைகளைக் கீழறுப்பு செய்வதும், அவதூறு உரைப்பதும் , அடியாட்களை பயன்படுத்துவதும், பணம் தந்து  ஓட்டு வாங்குவதும் ஜனநாயகத்துக்கு எதிரான செயல்கள்.இப்படிப்பட்ட அநாகரிகங்கள், ஜனநாயகத்தின் ஆணி வேரையே  அழித்துவிடும் என்பதால் நம் இளைஞர்கள் மிக கவனமாக செயல்பட வேண்டும். இப்படிப்பட்ட ஜனநாயக விரோத செயல்களை நம் இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் வேட்பாளரோ, கட்சியோ எதுவானாலும் அதனை  அடையாளங்கண்டு, அவர்களின் வைப்புத் தொகையையே  இழக்கச் செய்ய வேண்டும்.”

“கத்திக்கு- கத்தி, இரத்ததிற்கு ரத்தம் என்பதல்ல ஜனநாயகம் என்பதனை  சமூக விரோத சக்திகளுக்கு  உணர்த்த ஒவ்வொரு மலேசியரும் இந்த 13 வது தேர்தலில் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்த வேண்டும். அப்படிப் பட்டவர்களுக்கு  பாடம் புகட்ட வேண்டும் என்று அன்புடன்  கேட்டுக் கொள்கிறேன் ” என்று தனது அறிக்கையில் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.