Home நாடு டத்தோ ரமணன் தலைமையில் கஜேந்திர பாண்டா குழுவினரின் “சுவர்ண சமரோஹா” நடன நிகழ்ச்சிகள்

டத்தோ ரமணன் தலைமையில் கஜேந்திர பாண்டா குழுவினரின் “சுவர்ண சமரோஹா” நடன நிகழ்ச்சிகள்

220
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்ட கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம்,  மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையம் ஆகியவை இணைந்து ‘சுவர்ண சமரோஹா’ என்னும் பெயரில் – இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குரு டாக்டர் கஜேந்திர பாண்டா மற்றும் அவரது நடனக் குழுவினரால் சிறப்பு ஒடிசி நிகழ்ச்சியை 2024 ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று பிரிக்ஃபீல்ட்சில் உள்ள டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்சின் சாந்தானந்த அரங்கத்தில் ஏற்பாடு செய்தன.

தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இந்தியத் தூதர் பி.என். ரெட்டி மற்றும் அவரது துணைவியார், சூத்ரா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ ரம்லி இப்ராஹிம், சூத்ரா அறக்கட்டளையின் அறங்காவலர் தான்ஸ்ரீ மஸ்லான் ஒத்மான், கனேந்திரா அஹமது அண்ட் அசோசியேட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ரோசலிண்ட் கனேந்திரா, மலேசியப் சிறப்பு பணி அதிகாரி திரு. சண்முகம் மூக்கன், கோலாலம்பூரில் உள்ள பல தூதரக அலுவலகங்களின் தூதர்கள்/உயர் ஆணையர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், மலேசியாவில் உள்ள இந்திய கலாச்சார மற்றும் சமூக அமைப்புகள் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட 350க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி

இந்த நிகழ்ச்சியின்போது, இந்திய கலாச்சார உறவுகளுக்கான மன்றம் நிதியுதவி அளித்த இசைக் கருவிகள் (தபலா, மிருதங்கம், சிதார், வீணை, தம்புரா, ஹார்மோனியம், பக்வாஜ், வயலின் போன்றவை) மலேசியாவில் உள்ள முக்கிய இந்திய கலாச்சார சங்கங்கள் மற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த சங்கங்களின் பிரதிநிதிகள்/மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

குரு டாக்டர் கஜேந்திர பாண்டா மற்றும் அவரது சீடர்கள் ஒடிசி நடன நிகழ்ச்சியான ‘பிரஹலாத்’ – ஒரு சிறப்பு தயாரிப்பாக அரங்கேறியது.

ஒடிசி நடனம் மற்றும் ஒடிசாவின் நாட்டுப்புற நடனங்களுடனான அதன் ஆழமான தொடர்புகள் குறித்த குரு டாக்டர் கஜேந்திர பாண்டாவின் வாழ்நாள் ஆராய்ச்சியின் விளைவாக ஒரு மயக்கும் நிகழ்ச்சியை அவரின் குழுவினர் அளித்தனர்.

ஆகஸ்ட் 12-ஆம் தேதி இந்தக் குழு பேராக் சுங்கை சிப்புட்டில் உள்ள துன் சாமிவேலு கன்வென்ஷன் சென்டரில் இதே நிகழ்ச்சியை படைத்து வழங்கியது.

இந்த நிகழ்ச்சியை கிரீன்டவுன் இந்திய கலாச்சார சங்கம் மஜ்லிஸ் கெபுடயான் நெகிரி பேராக்குடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்ரமணியம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியும் பார்வையாளர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது.