Home உலகம் வெனிசுலா அதிபரின் விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்தது !

வெனிசுலா அதிபரின் விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்தது !

230
0
SHARE
Ad
வெனிசூலா அதிபர் – நிக்கோலாஸ் மதுரோ

வாஷிங்டன் – வெனிசூலா நாட்டுக்கு எதிரான தடைச் சட்டங்களைக் காரணம் காட்டி வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் விமானத்தை டொமினிகன் குடியரசில் அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் இதனை அறிவித்தது. பின்னர் அந்த விமானம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

“நீதித்துறை ஒரு விமானத்தைப் பறிமுதல் செய்தது. இது சட்டவிரோதமாக 13 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒரு போலி நிறுவனம் மூலம் வாங்கப்பட்டு, நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது கூட்டாளிகளின் பயன்பாட்டிற்காக அமெரிக்காவிலிருந்து கடத்தப்பட்டது” என்று அமெரிக்க சட்டத்துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) மெர்ரிக் பி. கார்லாந்த் கூறினார்.

“அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை சீர்குலைக்க அமெரிக்க வளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, எங்கள் தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மதுரோ மீண்டும் வெனிசூலா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்கும் சற்று மேலான காலகட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையேயான நீண்டகால பதற்றமான உறவை இந்த சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.

வெனிசூலா எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஆதரவாக மதுரோ அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் மற்றும் தூதரக ரீதியாக தனிமைப்படுத்தல் கொள்கையை அமெரிக்கா பின்பற்றி வருகிறது.

இதற்கிடையே, மதுரோவைக் கைது செய்ய அல்லது அவர் தண்டனை பெற வழிவகுக்கும் தகவல்களுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வெகுமதி வழங்குவதாக அமெரிக்க மாநிலத் துறை அறிவித்திருக்கிறது.