
(அக்டோபர் 26 – மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் அமரர் டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் அவர்களின் பிறந்த நாள். 1944-ஆம் ஆண்டில் பிறந்த அவர் உயிருடன் இருந்திருந்தால் தனது 80-வது பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார். அவருடன் நெருங்கிப் பழகிய விதத்தில் சுப்ராவின் விருந்தோம்பல் பண்புகளையும், நண்பர்களுடன் எப்போதும் பகிர்ந்துண்ணும் அவரின் வழக்கத்தையும் அவரின் உணவுப் பழக்கங்கள் சிலவற்றையும் விவரிக்கிறார் இரா.முத்தரசன்)
- எப்போதும் எங்கேயும் நண்பர்களுடன் சேர்ந்து விருந்துண்ணும் பழக்கம்!
- இல்லங்களுக்கு விருந்துண்ண அழைத்தால் கூடவே நண்பர்களையும் அழைத்துச் செல்லும் பண்பு!
- விருந்து சந்திப்புகளின் மூலம் ஆதரவு வட்டங்களை விரிவாக்கிக் கொண்டவர்
- டுரியான் பழங்களை விரும்பிச் சாப்பிடுவார்
நாடு முழுக்க டான்ஸ்ரீ சி.சுப்ராவின் நெருக்கமான நண்பர்கள், ஆதரவாளர்கள், விசுவாசிகள் என பலரும் தங்களின் இல்லங்களுக்கு விருந்துண்ண அடிக்கடி அவரை அழைப்பார்கள்.
அவர்களுக்கெல்லாம் எப்போதும் ஒரு முக்கிய நிபந்தனையை விதிப்பார் சுப்ரா. “விருந்துக்கு நான் வருகிறேன். ஆனால், நமக்கு பொதுவான நண்பர்கள் ஒரு பத்துப் பேரையாவது அழையுங்கள். நான் மட்டும் தனியாக அமர்ந்து சாப்பிட மாட்டேன். இல்லாவிட்டால் என் நண்பர்களை நானே அழைத்து வருகிறேன்” என்பார். தனிப்பட்ட முறையிலான சந்திப்பாக இல்லையென்றால், யார் வீட்டுக்கும் தனியாக அவர் சென்று உணவருந்தியதை யாரும் பார்த்திருக்க முடியாது. எப்போதும் நண்பர்கள் குழாமுடன்தான் அவர் தன்னை அழைப்பவர்களின் இல்லங்களுக்கு விருந்துண்ணச் செல்வார்.
அதேபோல எப்போதும் கையுடன் வைத்திருக்கும் குறிப்புப் புத்தகத்தில் விருந்துக்கு அழைக்கும் நண்பருக்கும் தனக்கும் பொதுவான நண்பர்கள் யார் என்பதை அவர் பட்டியலிடுவார். பின்னர் தனது செயலாளரிடம் கூறி அவர்களை அந்த விருந்து தேதியைக் குறிப்பிட்டு வரச் சொல்வார்.
இதையெல்லாம், ஏனோ தானோ என்றில்லாமல் ஒரு பொறுப்புணர்வுடன் அக்கறையாக தானே முன்னின்று செய்வார். இவ்வாறு தனக்கு விடுக்கப்படும் விருந்து அழைப்புகளின் மூலம் தனது நண்பர்கள் வட்டாரத்தை விரிவாக்கிக் கொண்டவர் சுப்ரா.
விருந்துக்கு அழைப்பவர்களை அவர் பணக்காரர்கள், சாதாரணமானவர்கள் என தரம் பிரிப்பதில்லை. தனது ஆதரவாளர்கள் என்றால், அவர்கள் எத்தனை சிறிய வீட்டில் இருந்தாலும், எத்தகைய உணவைப் பரிமாறினாலும், மறுக்காமல் சென்று உணவருந்துவார்.
உதாரணத்திற்கு சுங்கைப்பட்டாணியில் உள்ள ஒருவர் தனது வீட்டுக்கு சுப்ராவை அழைத்தால் – அவ்வாறு விருந்துக்கு அழைப்பவர்களை தனது குறிப்புப் புத்தகத்தின் எங்காவது ஒரு மூலையில் மறக்காமல் பதிவு செய்து வைத்திருப்பார்.
சில வாரங்களோ, ஏன் சில மாதங்களோ கழித்து, சுங்கைப்பட்டாணியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறார் என்றால், உடனே அந்த நண்பரை அழைத்து, “இந்த தேதியில் நான் சுங்கைப்பட்டாணிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகிறேன். நீங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தீர்களே! அன்று இரவு வைத்துக் கொள்ளலாம்” என்பார்.
சுங்கைப்பட்டாணி நண்பரோ அசந்து போவார். நினைவு வைத்திருந்து, சுப்ரா தன்னை மதித்து அவரே வருகிறேன் என்கிறாரே என நெகிழ்ந்து போவார். பதிலுக்கு விருந்தும் தடபுடலாக இருக்கும்.
நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதும் விருந்துபசரிப்புகள்

ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு வெளியூருக்குச் செல்கிறார் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு முன்பான மதிய உணவையோ, அல்லது நிகழ்ச்சிக்குப் பிந்திய இரவு உணவையோ நன்கு திட்டமிடுவார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரையோ, அந்த ஊரில் இருக்கும் தனது நெருங்கிய நண்பரையோ அழைத்து அந்த ஊரில் எந்த உணவகத்தில் சாப்பாடு நன்றாக இருக்கும், குளிர்சாதன வசதியை அந்த உணவகம் கொண்டிருக்கிறதா என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வார். உணவகம் முடிவானதும், என்னென்ன உணவுகள் என்ற பட்டியலை அவரே முன்கூட்டியே பரிந்துரைத்து தயாரிக்கச் சொல்வார்.
அடுத்த கட்டமாக, அந்த வட்டார ஆதரவாளர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் பறக்கும். “சுப்ரா இத்தனை மணிக்கு இந்த உணவகத்தில் சாப்பிட வருகிறார். உங்களையும் வரச் சொன்னார்” என செயலாளர் கூறி குறைந்தது பத்து பேராவது அன்று அவருடன் இணைந்து உணவருந்துவார்கள்.
இதுபோன்று வெளியூர்களில் உணவகங்களில் உணவருந்தும்போது, அந்த வட்டார தமிழ்ப் பத்திரிகையாளர் நண்பர்களையும் அழைத்து இணைந்து கொள்ளச் செய்வார்.

பல அரசியல் தலைவர்கள், பெரும்பாலும் தனியாகவோ குடும்பத்தினருடனோ சென்றுதான் உணவகங்களில் உணவருந்துவார்கள். அல்லது மிக நெருக்கமான பணக்கார நண்பர்களுடன் மட்டும் உயர்ரக உணவகங்களுக்கு சென்று உணவருந்துவார்கள்.
ஆனால் சுப்ரா அப்படியல்ல! எப்போதுமே எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் அவருடன் சாப்பிடுவதற்கு நண்பர்கள் நான்குபேர் வேண்டும். வீட்டிலேயே சாப்பிடும்போதுகூட தனது செயலாளர்களை உடன் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவார். தனக்கான உணவு எதுவோ அதை அவர்களுடன் பகிர்ந்து கொண்டுதான் சாப்பிடுவார்.
அந்த சமயத்தில் நண்பர்கள் யாராவது அழைத்தால், “இன்றைக்கு நான் வீட்டிலேயே சாப்பிடுகிறேன், நீங்கள் இன்னும் சாப்பிடவில்லை என்றால் என்னுடன் வந்து இணைந்து கொள்ளலாம்” என அழைப்பார்.
அதே போல சுப்ரா தன் வீட்டில் விருந்துபசரிப்புகள் வைத்தால், அவரின் சாதாரண, அடிமட்டத் தொண்டர்கள் கூட அவரின் அந்த விருந்துபசரிப்புகளில் கலந்து கொண்டு சரிசமமாக அவருடன் உணவுண்ணும் காட்சிகளை நாம் பார்க்க முடியும்.
டுரியான் பழங்களை விரும்பி உண்பார்!

அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிகாமாட் வட்டாரத்தில் விளையும் டுரியான் பழங்கள் சுவையிலும் தரத்திலும் பிரபலம். அங்கு சென்று விட்டுத் திரும்பும்போது, டுரியான் பருவகாலத்தில் நிறைய பழங்களை காரில் அள்ளி வருவார். சில சமயங்களில் சிகாமாட் நண்பர்கள் அவருக்கு கோலாலம்பூருக்கே அனுப்பி வைப்பார்கள்.
உடனே, தன் நண்பர்கள் வட்டாரத்தில் டுரியான் பழங்களை விரும்பிச் சாப்பிடுபவர்கள் யார் என்பது அவருக்குத் தெரியும். அவர்களை அழைத்து “டுரியான் வந்திருக்கிறது. வேண்டுமானால் இன்றிரவு வாருங்கள். சாப்பிடலாம்” என அழைப்பார். அவர் அவ்வாறு அழைப்பவர்களில் ஒருவர் அவருக்கு நெருக்கமான நண்பரான ரேடியோ பாலா என்னும் இரா. பாலகிருஷ்ணன். மலேசிய வானொலியின் தமிழ்ப் பிரிவின் முன்னாள் தலைவர்.
பாலாவுக்கு வர வசதியில்லை என்றால் அவருக்கு மட்டும் டுரியான்களை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.

சுப்ராவையும், பாலாவையும் நெருக்கமாக அறிந்தவர்களுக்கு – அவர்கள் இருவருமே தேடித் தேடி உணவுகளை நன்கு ரசித்து, சுவைத்து, உண்டு மகிழும் குணம் கொண்டவர்கள் என்பது தெரியும்.
அவர்கள் இருவரும் மறைந்துவிட்டாலும், நாம் ஏதாவது சாப்பிடும்போதோ, எந்த உணவகத்திலாவது அமர்ந்து உண்ணும்போதோ அவர்கள் இருவரின் உணவுப் பழக்கங்களில் ஏதாவது ஒன்று நம் நினைவுகளில் வந்து மறைந்து போகும் என்பதை நண்பர்கள் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.
பாலாவும் சிறந்த விருந்தோம்பல் பண்புகள் கொண்டவர். அடிக்கடி தன் நண்பர்கள் சிலரை ஏதாவது ஓர் உணவகத்திற்கு மதிய உணவுக்கு அழைத்து, அவர்களுடன் கலந்துரையாடும் வழக்கம் கொண்டவர் அவர். அத்தகைய மதிய உணவு சந்திப்புகளில் சுப்ராவையும் எப்போதும் அழைப்பார். வேறு பணிகள் இல்லையென்றால் சுப்ராவும் தவறாமல் கலந்து கொள்வார்.
சில சமயங்களில் சுப்ராவே பாலாவை அழைத்து, தங்கள் இருவருக்கும் இடையிலான பொது நண்பர்கள் சிலரைக் குறிப்பிட்டு “பாலா அவர்களையெல்லாம் பார்த்து நீண்ட நாளாகிவிட்டது. அவர்களை ஒருநாள் உணவுக்கு அழையுங்கள். நான் தேதி தருகிறேன்” என்பார்.
இவ்வாறு தங்களின் நட்பு வட்டாரத்தை எப்போதும் மதித்து வாழ்ந்ததோடு, அந்த நட்பு வட்டத்துடன் ஒன்றாக அமர்ந்து விருந்துண்ணும் கலாச்சாரத்தையும், விருந்தோம்பல் பண்புகளையும் சுப்ராவும் பாலாவும் தங்கள் வாழ்நாளில் இறுதிவரை கொண்டிருந்தனர்.
தவிர்த்த உணவுகள்
கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் எந்த உணவகத்தில் சிக்கன் ரைஸ் நன்றாக இருக்கும், மீ சூப் சிறப்பாகத் தயாரிப்பார்கள் என்பதெல்லாம் சுப்ராவுக்கு அத்துப்படி! சில சமயங்களில் வீட்டில் இருந்தால், நேரடியாக அந்த உணவகங்களுக்கு செல்வார். அல்லது யாரையாவது வாங்கி வரச் சொல்வார்.
சுப்ராவின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய திரு (தைப்பிங்) சிவம் அவர்களுக்கு சுப்ராவுக்கான உணவில் என்ன இருக்க வேண்டும் – என்ன இருக்கக் கூடாது – என்பது மனப்பாடமாகத் தெரியும்.
சுப்ரா இறால் வகை உணவுகளையும், தவுகே என்னும் முளைப் பயிரையும் எப்போது தனது உணவுகளில் தவிர்த்து விடுவார். சுப்ராவுக்கு உணவுகள் வாங்கும்போது இந்த இரண்டு வகை உணவுகளும் இல்லாமல் இருப்பதை சிவம் உறுதி செய்து கொள்வார்.
இளம் வயதில் இறால் (ஊடான்) உணவுகளை சுப்ரா விரும்பி உண்ணுவார். பின்னர் இறால் உணவுகளிலும் பால் கலந்த உணவுகளிலும் அவருக்கு ஒவ்வாமை வந்து விட்டது. தவிர்த்து விட்டார்.
“இறால் இப்போது நான் சாப்பிடுவதில்லை. ஆனால் என் வாழ்நாளில் ஒரு மனிதன் எவ்வளவு இறால் சாப்பிடுவானோ, அவ்வளவையும் நான் இளம் வயதிலேயே சாப்பிட்டு முடித்து விட்டேன். அதனால் பரவாயில்லை” என நகைச்சுவையாக அடிக்கடி கூறுவார் சுப்ரா.
நாட்டாடு இறைச்சி சமைத்துத் தந்த மெய்யப்பன்
இன்று சுப்ராவின் 80-வது பிறந்த நாள். உயிருடன், உடல் நலத்துடன் இருந்திருந்தால் அவரின் பிறந்த நாளைக் கோலாகலமாக வழக்கம்போல் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்திருப்பார். ஆண்டுதோறும் அவரின் பிறந்த நாளை வீட்டில் நண்பர்கள், ஆதரவாளர்களுடன் விருந்துபசரிப்புடன் கொண்டாடுவார். அவர் உடல் நலம் குன்றியிருந்த காலகட்டத்தில்கூட அவரின் ஆதரவாளர்களும் நண்பர்களும் அவரின் இல்லத்தில் அவரின் பிறந்த நாளன்று கூடுவது வழக்கம்.
அவரின் பிறந்த நாளன்று போர்ட் கிள்ளானில் உணவகம் நடத்தி வந்த அமரர் மெய்யப்பன் அவர்கள் மறக்காமல் நாட்டு ஆட்டிறைச்சியையும், அதனுடன் ஈரல், குடல் போன்ற அம்சங்களையும் பக்குவமாக தானே கைப்படச் சமைத்து, சுப்ராவுக்கு ஏற்ற காரம், சுவை, மணத்துடன் ஓரிரு எவர்சில்வர் வாளிகள் நிறையக் கொண்டு வந்து சமையலறையில் வைத்து விடுவார். எங்களுக்கு நினைவு தெரிந்து ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் இதனை, சுப்ரா மீது கொண்ட அன்பால் தானே சமைத்துக் கொண்டு வந்தவர் மெய்யப்பன். சுப்ராவின் பல்கலைக் கழக மாணவப் பருவம் முதலே அவரை நன்கு அறிந்தவரான மெய்யப்பன், சுப்ரா மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்த நண்பர்களில் ஒருவர்.
மெய்யப்பன் இவ்வாறு சுப்ராவுக்கு பிறந்த நாளன்று இறைச்சி கொண்டுவருவதும், அதன் தனிச் சுவையும் நெருக்கமான சில நண்பர்களுக்கு மட்டும் தெரியும். பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றதும் அந்த நெருக்கமான நண்பர்கள் சுப்ராவுடன் சமையலறைப் பக்கம் செல்வார்கள். மெய்யப்பன் சமைத்துக் கொண்டு வந்த இறைச்சி வகையறாக்கள் சுப்ராவுக்கும் நண்பர்களுக்கும் பரிமாறப்படும்.
தன் வாழ்நாள் முழுக்க – நோயுற்று படுத்த இறுதிக் கணங்கள் வரை – நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, நண்பர்களோடு சேர்ந்து விருந்துண்ணுவதையும் – தான் உண்ணும் உணவுகளை அவர்களோடு பகிர்ந்துண்பதையும் – அதற்குரிய விருந்தோம்பல் பண்பைப் பின்பற்றுவதையும் – கைவிடாமல் வாழ்ந்து மறைந்த சிறந்த மனிதர் சுப்ரா!
– இரா.முத்தரசன்