Home கருத்தாய்வு தேர்தல் களம் நேரடிப்பார்வை: ஸ்ரீ அண்டலாசில் சேவியர் ஜெயக்குமாரின் பிரச்சாரம் – கார் எரிப்பு சம்பவம்...

தேர்தல் களம் நேரடிப்பார்வை: ஸ்ரீ அண்டலாசில் சேவியர் ஜெயக்குமாரின் பிரச்சாரம் – கார் எரிப்பு சம்பவம் முக்கிய அங்கம்

630
0
SHARE
Ad

IMG_4306ஏப்ரல் 29 – தனது மகளின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்குப் பிறகு, ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் தேர்தல் பிரச்சாரங்களில் முன்பை விட இப்போது அனல் கூடுதலாகப் பறக்கிறது என்று தான் கூற வேண்டும்.

காரணம் கடந்த சனிக்கிழமை (27-04-13) இரவு ஸ்ரீ அண்டலாஸ் தொகுதியில் உள்ள பிகேஆர் அலுவலகத்திற்கு முன் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள, தனது மகளுடன் வந்திறங்கிய டாக்டர் சேவியர் ஜெயக்குமார், தேசிய முன்னணிக்கு எதிராக சாட்டையடி கேள்விகளோடு, அங்கு கூடியிருந்த மக்கள் முன் உரையாற்றினார்.

பெரும்பாலான இந்தியர்கள் கலந்துகொண்ட அக்கூட்டத்தில், ஆங்கிலம், தமிழ், மலாய் என மூன்று மொழிகளிலும் சேவியர் உரையாற்றினார். அவரது ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் கைதட்டல்களை எழுப்பிய கூட்டத்தினர், அவருக்கு ஆதரவாகத் தாங்கள் இருப்பதாக கூறி அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

குறிப்பாக சுல்கிப்ளியின் நியமனம் குறித்தும், தேசிய முன்னணியுடனான ஹிண்ட்ராப்பின் ஒப்பந்தம் குறித்தும் அவர் பேசும் பொழுது, கூட்டத்திலிருந்து தேசிய முன்னணிக்கும் ஹிண்ட்ராப் வேதமூர்த்திக்கும் எதிர்ப்பான பெருங்குரல்கள் கேட்டன.

அதை கவனித்த சேவியர் ஜெயக்குமார், “இந்த கோபத்தையெல்லாம் மக்கள் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் காட்ட வேண்டும். அப்போது தான் தேசிய முன்னணியை ஒழித்துக் கட்ட முடியும்” என்று கூட்டத்தினரைப் பார்த்து கேட்டுக்கொண்டார்.

பிரச்சாரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் முக்கிய அங்கம்Untitled-2

கடந்த வியாழக்கிழமை இரவு தாமான் கிள்ளான் ஜெயாவில் உள்ள சேவியர் ஜெயக்குமாரின் மகள் சங்கீதாவின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசிய தோடு, இரு கார்களையும் எரித்தனர்.

இந்த சம்பவம் பற்றிய காணொளியும் (வீடியோ) கூட்டத்தினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

அந்த காணொளியில் எரிந்த நிலையில் கார்களும், வீட்டின் முகப்பில் பெட்ரோல் குண்டு வீசியதற்கான அடையாளங்களும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு 20 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்கலாம் என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர் என்றும் சேவியர் அந்த சம்பவம் குறித்து விவரித்தார்.

இருப்பினும் இச்சமபவத்தை நினைத்து சிறிதும் கலங்காத சேவியர் ஜெயக்குமார், தொடர்ந்து தனது தொகுதியில் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதோடு, அரசியலில் வன்முறை வேண்டாம், கத்திக்கு கத்தி, இரத்தத்திற்கு இரத்தம் என்ற பழிவாங்கும் உணர்வுகள் வேண்டாம் என்றும் கூறிவருகிறார்.

மேலும் நமது நாட்டில் இளைஞர்களின் நிலை மிகவும் அபாயகரமான சூழலை நோக்கிப் போய் கொண்டிருப்பதாக கூறிய ஜெயக்குமார், அவர்களை நிச்சயம் நல் வழிப்படுத்தும் நடவடிக்கைகளை தான் மேற்கொள்ளவிருப்பதாகவும் உறுதியளித்தார்.

அக்கூட்டத்தில் சுமார் அரை மணி நேரம் பேசிய சேவியர் ஜெயக்குமார், இறுதியாக மக்களிடம் விடை பெறும் முன், வரும் பொதுத்தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? என்று கேட்க, அங்கு கூடியிருந்த ஒட்டுமொத்த மக்களும்  ‘பிகேஆருக்கே எங்களின் வாக்கு’ என்று உரக்கக் கூறியது அவ்விடம் முழுவதும் எதிரொலித்தது.

ஸ்ரீ அண்டலாஸ் தொகுதியில் ஜெயக்குமாருக்கு வெற்றி வாய்ப்புIMG_4318

வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற தொகுதியில் ஐந்து முனைப் போட்டி நடக்கவிருக்கிறது.

அதில் பிகேஆர் சார்பாகப் போட்டியிடும் டாக்டர் சேவியர் ஜெயக்குமாருக்கு எதிராக தேசிய முன்னணியைச் சேர்ந்த டி.மோகன் களமிறங்குகிறார்.

இது தவிர, மனித உரிமை கழகத் தலைவரும், ஹிண்ட்ராப்பின் முன்னோடிகளில் ஒருவருமான பி. உதயகுமார், கோட்டப்பன் மற்றும் ஹனீபா பின் ஹுசைன் ஆகியோர் அத்தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றனர்.

கடந்த தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிராக 10, 203 வாக்குகள் பெரும்பான்மையில் மாபெரும் வெற்றி பெற்ற சேவியர் ஜெயக்குமார், இம்முறையும் அத்தொகுதியை மீண்டும்  தக்க வைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

காரணம் நாடு முழுவதும் உள்ள அநேக இந்திய வாக்குகள், சுல்கிப்ளி நோர்டின் விவகாரத்தால் தேசிய முன்னணிக்கு எதிராகத் திசை திரும்பியுள்ள இந்நேரத்தில், அதன் எதிரொலி ஸ்ரீ அண்டலாஸ் தொகுதியிலும் பிரதிபலிக்கும் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

கடந்த தேர்தலில் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று, அத்தொகுதியில் தனது சேவைகளின் மூலம் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகியுள்ள  சேவியர் ஜெயக்குமார் மீண்டும் வெற்றி பெறுவதில் பிரச்சனை ஏதும் இருக்காது என்றே தெரிகிறது.

அதே நேரத்தில் 35 சதவிகித இந்தியர், 39 சதவிகித மலாய் மற்றும் 24 சதவிகித சீன வாக்குகள்  நிறைந்த ஸ்ரீ அண்டலாஸ் தொகுதியில் தேசிய முன்னணியை ஆதரிப்பவர்கள், ஒரு மாற்று அரசாங்கம் வேண்டுமென்று நினைத்தால், நிச்சயம் மக்கள் கூட்டணியைத் தேர்ந்தெடுப்பார்களே தவிர, சுயேட்சை வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் குறைவு.

காரணம் சுயேட்சை வேட்பாளர்கள் ஒருவேளை வெற்றி பெற்றாலும் கூட, அவர்களால் மத்தியில் ஆட்சி அமைக்கப்போகும் பக்காத்தான் அல்லது தேசிய முன்னணியிடம் போராடி தனது தொகுதி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்ற கருத்து நிலவுகிறது. இதனால் அத்தொகுதியில் போட்டியிடும் பி.உதயகுமார் வெற்றி பெறும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

மக்கள் கூட்டணி இம்முறை மத்திய அரசாங்கத்தை அமைக்கும் என்றும், சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் என்றும்  பரவலாக எதிர்பார்க்கப்படும் இந்த சூழ்நிலையில், பிகேஆர் சார்பாகப் போட்டியிடும் சேவியர் வெற்றி பெற்றால் அத்தொகுதி மக்களுக்கு மேலும் சிறப்பான சேவைகளை வழங்க மக்கள் கூட்டணி வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-பீனிக்ஸ்தாசன்