Home 13வது பொதுத் தேர்தல் வித்தியாசமான பதாகைகள் # 5 : பத்தடி துணியில் தமிழைக் காப்பாற்றாத தேசிய முன்னணி தமிழ்ப்...

வித்தியாசமான பதாகைகள் # 5 : பத்தடி துணியில் தமிழைக் காப்பாற்றாத தேசிய முன்னணி தமிழ்ப் பள்ளிகளையா காப்பாற்றப் போகிறது?

891
0
SHARE
Ad

BN-Tamil-wrong-words-2ஏப்ரல் 30 – நாடு முழுவதும் தொங்கவிடப்பட்டுள்ள தேசிய முன்னணி தேர்தல் பதாகைகளில் தமிழ் மொழி தப்பும் தவறுமாக கொலை செய்யப்பட்டிருக்கிறது என நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு வந்தாலும் தேசிய முன்னணி அதைப் பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

தமிழ்க் கொலையோடு காணப்படும் இந்த பதாகைகளை மாற்றும் முயற்சிகளும் இல்லை – அகற்றும் முயற்சிகளும் இல்லை. மாறாக, மேலும் புதிய பதாகைகள் அதே வாசகங்களுடன் கட்டப்பட்டு வருகின்றன.

இரவு நேரங்களில் கோலாலம்பூரில் தேசிய முன்னணிக்காக பதாகைகள், கொடிகளைக் கட்டும் பணியாளர் ஒருவர் இதுபற்றிக் குறிப்பிடும்போது, சம்பந்தப்பட்ட எழுத்துப் பிழைகளை பலர் சுட்டிக் காட்டியிருந்தாலும், “பரவாயில்லை கட்டுங்கள் என்றுதான் சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றார்கள்” என்று மனம் நொந்து கூறினார்.

#TamilSchoolmychoice

இணையத் தளங்களில் எதிர்ப்பு

மேலும் தேசிய முன்னணியின் கவனமின்மை, தமிழ் மொழியின் மீது அவர்கள் அக்கறை காட்டாதது இணையத் தளங்களிலும் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு விஷயமாகிவிட்டது,

முகநூல் பக்கங்களிலும், இணையத் தளங்களிலும் நிறைய அன்பர்கள் தேசிய முன்னணி தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காதது குறித்து தங்களின் கடுமையான விமர்சனங்களைப் பதிவு செய்திருக்கின்றார்கள்.

பத்தடி துணியில் தமிழைக் காப்பாற்றாத தேசிய முன்னணி அரசாங்கமா நாளைக்கு தமிழ்ப் பள்ளிகளுக்கு காவலனாக விளங்கப் போகின்றது என்ற ஆதங்கம் இணையத் தளங்கள் எங்கும் எதிரொலித்து வருகின்றது.

மக்களின் கண்ணை உறுத்தும் இந்த பதாகைகளை தேசிய முன்னணியினர் தமிழுக்கு மதிப்பு கொடுத்து குறைந்த பட்சம் அகற்றியிருக்கலாம்.

ஆனால் அதையும் அவர்கள் செய்யவில்லை. ஆயிரக்கணக்கில் பணம் செலவழிப்பதாலும், ஆலயங்கள், அமைப்புக்கள் என இலட்சக்கணக்கில் மான்யங்களைக் கொட்டிக் கொடுப்பதாலும், தமிழ் மக்கள் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள் என்பது தேசிய முன்னணியின் எண்ணமாக இருக்கலாம்.

ஆனால் தமிழ் உணர்வாளர்கள், பற்றாளர்கள் “தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடமாட்டேன்” என்ற முழக்கத்திற்கேற்ப இந்த பதாகைகளில் தமிழைக் கொலை செய்த ஒரு காரணத்துக்காகவே  தேசிய முன்னணிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என நம்பலாம்.

இது குறித்து முகநூல் பக்கத்தில் மதிவாணன் என்ற அன்பர் இவ்வாறு மனம் நொந்து கருத்துரைத்துள்ளார்:-

“இப்பதாகைகளில் பார்த்தீர்களா தமிழ் படும் பாட்டை? ஏன் இந்த நிலை; இந்தியர்களின் வாக்கு வேண்டும் ஆனால் அவர்களின் மொழியில் கவலை இல்லை; இதை எழுதிய தமிழா உன் நிலை என்ன; இதுதான் நீ தமிழ் கற்ற இலட்சணமா? தமிழ்ப்பள்ளிகளின் காவலர்களே! நீங்கள் நம் மொழிக்கு காவலர்கள் இல்லையா? நாடு முழுதும் இப்பதாகைகள் கட்டப்பட்டுள்ளதே; இருமுறை மலேசிய நண்பனில் செய்தியாக வந்ததே; நடவடிக்கை எடுக்க இயலாமையா அல்லது வேட்பாளர்களுக்கு அவை பிழையெனத் தெரியவில்லையா? பாவம் தமிழ்.”