சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தொல்.திருமாவளவன் வந்தார்.
தேமுதிக நிர்வாகிகள் அவரை வரவேற்று விஜயகாந்திடம் அழைத்துச் சென்றனர்.
இருவரும் சுமார் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
தருமபுரி விவகாரம் மற்றும் மரக்காணம் விவகாரம் தொடர்பாக விஜயகாந்திடம் விளக்கி கூறிய திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ் ஜாதி கலவரத்தைத் தூண்டி வருவதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மே 4-ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மரக்காணம் விவகாரம் தொடர்பாக கண்டனக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க தேமுதிகவுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். அதனை விஜயகாந்தும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக சமுதாயத் தலைவர்களை ஒருங்கிணைந்து பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
அதைப்போல பாமகவுக்கு எதிராக அரசியல் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் திருமாவளவன் ஈடுபட்டு வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை சனிக்கிழமை சந்தித்து திருமாவளவன் ஆதரவு திரட்டினார்.
திங்கள்கிழமை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைச் சந்தித்தும் திருமாவளவன் ஆதரவு திரட்ட உள்ளார்.
விஜயகாந்துடனான சந்திப்பின்போது, தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், இளைஞரணிச் செயலாளர் எல்.சுதீஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைச்செல்வன், பொருளாளர் முகமது யூசுப், செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு ஆகியோர் உடனிருந்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்: மரக்காணம் கலவரத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மே 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.