ஜோகூர் பாரு, ஏப்ரல் 29 – அண்மை காலங்களில் 13ஆவது பொது தேர்தல் பிரச்சாரங்களின் போது வன்முறைகளை கருத்தில் கொண்டு மக்கள் கூட்டணி, பாதுகாப்பு ஆலோசனை மன்றம் ஒன்றை அமைத்துள்ளது.
அந்த ஆலோசகர்கள் மன்றத்தின் உறுப்பினர்களில் ஒருவராக முன்னாள் காவல்துறை தலைவர் (ஐஜிபி) மூசா ஹசான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை ஒரு கூட்டுப் பத்திரிக்கை அறிக்கையின் வழி முன்னாள் ராணுவ தலைவரும், ஜோகூர்பாரு நாடாளுமன்ற (பிகேஆர்) வேட்பாளருமான ஹாசின் பின் உசேன் (படம்) தெரிவித்தார்.
“நாங்கள் இருவரும் எங்களின் வாழ்நாளின் பெரும்பகுதியை நாட்டின் பாதுகாப்புக்காகவும் மலேசியர்களின் பாதுகாப்புக்காகவும் செலவழித்துள்ளோம். எங்களை பொறுத்தவரையில் ஜனநாயக நடைமுறையில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை என்று உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
மக்கள் கூட்டணி பாதுகாப்பு மன்றம், பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணி வென்றால் மத்திய அரசாங்கத்தின் அதிகார மன்றம் முறையாகவும் சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும்.
இதன் மூலம் எதிர்வரும் பொது தேர்தலில் மத்திய அரசாங்கத்தை கைப்பற்றுவோம் என்று முழக்கமிட்டுவரும் மக்கள் கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே தனது அரசியல் கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டுவரும் மூசா ஹசான், உள்துறை அமைச்சர் இஷா முடின் உசேனுக்கு எதிராகவும் கருதுக்களை வெளியிட்டு வந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
மேலும் இந்த கூட்டறிக்கையில் பொது தேர்தலில் மக்கள் கூட்டணி வென்றால் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுவரும் போலீஸ் மற்றும் ராணுவம் சார்ந்த பணியாளர்களின் சம்பளம் மற்றும் பணியிட சலுகைகளையும் தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறிவுள்ளார்.