செல்லியல் இணைய ஊடகம் 2012 டிசம்பர் 12ஆம் நாள் தொடங்கப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வந்தது. மலேசியாவில் திறன்கருவிகளில் தமிழ் செய்திகளுக்காக உருவாக்கப்பட்ட முதல் குறுஞ்செயலி (Mobile App) என்ற பெருமையையும் செல்லியல் பெற்றது.
மலேசிய இந்தியர்களை மையமாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான செய்திகளையும், கட்டுரைகளையும், அரிய புகைப்படங்களையும் பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களையும் செல்லியல் இணையத் தளம் ஓர் வரலாற்று ஆவணப் பெட்டகமாக அமைத்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியா, உலக நாடுகள், தொழில்நுட்பம், தமிழ் இலக்கியம் சார்ந்த செய்திகளையும் செல்லியல் பதிப்பித்ததோடு, அதன் சமூக ஊடக ஓடைகளான முகநூல், எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளங்களிலும் உடனுக்குடன் அவற்றை பகிர்ந்து வந்துள்ளது.
விரைவாக மாறிவரும் தொழில்நுட்ப உலகம் – செயற்கை நுண்ணறிவின் நுழைவு, அதன் மூலம் ஏற்பட்டு வரும் தாக்கம் ஊடகத் துறையை ஒவ்வொரு நாளும் மாற்றிக்கொண்டே வருகிறது. செய்திகளை மிகச் சுருக்கமாகவும் விரைவாகவும் காணொலி வடிவில் கண்டுசெல்லவே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆழமாக அலசி ஆராயும் கட்டுரைகள் அதிகம் கவனத்தைப் பெறுவதில்லை.
இந்த மாற்றங்களுக்கு நடுவில், செல்லியல் தளத்தின் இயக்கத்தை எவ்வாறு நடத்திச் செல்வது என்பதை கடந்த சில மாதங்களாக பல கோணங்களில் ஆழ்ந்து ஆராய்ந்து வந்தோம். நடப்பு கட்டமைப்பில் இருந்து புதிய எதிர்ப்பார்ப்புக்கு மாற்றுவது என்பது முற்றிலும் புதிய ஊடகத்தளத்தை தோற்றுவிப்பதற்கான அத்தனை சவால்களையும் கொண்டுள்ளதை உணர்ந்தோம். எனவே, செல்லியல் ஊடகத்தின் இயக்கத்தை 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாளோடு நிறுத்திவிட முடிவெடுத்துள்ளோம் என்பதை செல்லியல் வாசகர்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்விகிறோம்.
எனினும் செல்லியல் தளம் தொடர்ந்து இணையத்தில் ஆவணமாக வைக்கப்பட்டிருக்கும். கடந்த 13 ஆண்டுகளாக வெளியிடப்பட்ட அனைத்து செய்திகளும் வாசகர்களின் பயன்பாட்டுக்காகவும் ஆய்வுப் பணிகளுக்காகவும் இணையத்தில் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வரும். அனைவரும் தற்போதைய இணைய முகவரியின் மூலம் (Selliyal.com) அந்தச் செய்திகளைப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுநாள்வரை செல்லியல் இயக்கத்திற்கு உறுதுணையாக நின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இவ்வேளையில் எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.





