Home அரசியல் சுப்ராவுக்கு எதிரான போராட்டம் அரசியல் உள்நோக்கம் அல்ல! நியாயமானது! – வங்கி தொழிலாளர் சங்கம் கருத்து

சுப்ராவுக்கு எதிரான போராட்டம் அரசியல் உள்நோக்கம் அல்ல! நியாயமானது! – வங்கி தொழிலாளர் சங்கம் கருத்து

574
0
SHARE
Ad

Subramaniamமே 3 – மனித வள அமைச்சர் டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்திற்கு எதிரான தங்களின் போராட்டத்திற்கு அரசியல் தூண்டுதலோ அல்லது உள்நோக்கமோ காரணமல்ல என்று வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜே.சாலமன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தமக்கும் மூன்று வங்கிகளுக்கும் எதிரான வங்கி ஊழியர் சங்கத்தின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற அமைச்சர் டத்தோ சுப்பிரமணியத்தின் குற்றச்சாட்டை சாலமன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. டத்தோ சுப்பிரமணியத்தின் தேசிய முன்னணி ஆதரவாளர்கள் நடத்திய சட்டவிரோதமான ஆர்ப்பாட்டம்தான் அரசியல் உள்நோக்கம் கொண்டது.  தன்னை ஆதரிக்கும் வங்கி ஊழியர் சங்கங்கள் என்று பெருமிதத்துடன் ஒரு பட்டியலை அறிவித்த டத்தோ சுப்பிரமணியமே, நாங்கள் அவருக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு அரசியல் தூண்டுதல் காரணம் என்று சொல்வது விந்தையாக உள்ளது,” என்று தாம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் சாலமன்.

இம்முறை செகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மஇகாவின் தேசிய துணைத் தலைவரான சுப்பிரமணியம், வங்கி ஊழியர் சங்கம் பக்காத்தானுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக அண்மையில் குற்றம்சாட்டி இருந்தார்.

காவல்துறை ஐஜி இஸ்மாயில் ஓமாரும், வங்கி ஊழியர் சங்கம் அரசியல் சார்புடன் செயல்படுவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுவா ஜூய் மெங் ஆதரவு

டத்தோஸ்ரீ சுப்பிரமணியத்திற்கு எதிராக ஊழியர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அவரை எதிர்த்துப் போட்டியிடும் பி.கே.ஆர். வேட்பாளர் சுவா ஜுய் மெங் அங்கிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் சுவா ஜூய் மெங் இருந்தார் என்பதாலேயே அவரை வங்கி ஊழியர் சங்கம் தேர்தலில் ஆதரிப்பதாகக் கருதிவிட முடியாது என்று சாலமன் தெரிவித்துள்ளார்.

சுவா அங்கு வந்தார், எங்களுடன் கைகுலுக்கினார், புறப்பட்டுச் சென்றார், அவ்வளவுதான்,” என்று ஃப்ரீ மலேசியா டுடே இணையதளத்திடம் தெரிவித்தார் சாலமன்.

தொழிலாளர் தினமான மே 1ம் தேதி முதல் சுப்பிரமணியத்திற்கு எதிராக தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்திருந்தது என்று குறிப்பிட்ட சாலமன், ம.இ.கா.  ஆதரவாளர்களின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டதாகத் தெரிவித்தார்.

கடந்த 1ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுப்பிரமணியத்தின் சகோதரரும் வேறு இரு இந்திய ஆடவர்களும் எங்களை மிரட்டினர். நேற்று எங்கள் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் ஏ.கருணா தாக்கப்பட்டுள்ளார்,” என்றார் சாலமன்.

முதல் நாள் ஆர்ப்பாட்டத்தின் போது டத்தோ சுப்பிரமணியத்தின் ஆதரவாளர்கள் சுமார் 70 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

வங்கி தொழிலாளர் சங்கம் 3 போலீஸ் புகார்கள் செய்தது

“செகாமாட் போலீஸ் தலைவர் நடத்திய விசாரணையின் போது எங்களது தொடர் போராட்டத்தை உடனடியாக முடித்துக் கொள்ளுமாறு கூறினார். நாங்கள் போராட்டத்தைக் கைவிடாவிட்டால், போலீஸ் பலத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறினார்,” என்று குறிப்பிட்ட சாலமன், தான் காவல்துறையில் மூன்று புகார்கள் அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

டத்தோ சுப்பிரமணியம் மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக முதல் புகாரும், பராமரிப்பு அமைச்சர் தன்னை ஆதரிப்பதாகக் கூறிய வங்கி ஊழியர் சங்கங்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பதாகை குறித்து இரண்டாவது புகாரும் அளித்திருப்பதாகத் தெரிவித்த அவர், போலிசாரின் அச்சுறுத்தல் குறித்து மூன்றாவது புகாரை அளித்ததாகக் குறிப்பிட்டார்.

47,115 வாக்காளர்களைக் கொண்ட செகாமாட் தொகுதியில் டாக்டர் சுப்பிரமணியம், சுவா இருவரிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் 46 விழுக்காடு சீனர்களும், 44 விழுக்காடு மலாய்க்காரர்களும், 10 விழுக்காடு இந்தியர்களும் வாக்காளர்களாக உள்ளனர்.