Home நாடு “நாட்டிற்கு மாற்றம் தேவை; பக்காத்தானுக்கு வாக்களிப்பதென்றாலும் அச்சமின்றி வாக்களியுங்கள்” – மூத்த ம.இ.கா தலைவர் டத்தோ...

“நாட்டிற்கு மாற்றம் தேவை; பக்காத்தானுக்கு வாக்களிப்பதென்றாலும் அச்சமின்றி வாக்களியுங்கள்” – மூத்த ம.இ.கா தலைவர் டத்தோ காந்தன் அறைகூவல்

638
0
SHARE
Ad

Kandan-Featureமே 3 – சரித்திரப் பிரசித்தி பெற்ற 13வது பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரே நாள் இடையில் இருக்கின்ற தருணத்தில் ம.இ.கா.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான டத்தோ வி.எல்.காந்தன் மலேசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் தங்களின் ஜனநாயக உரிமையை துணிச்சலோடு நிலைநாட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

நாட்டிற்கு மாற்றம் தேவை. மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். இந்தியர்கள் திரண்டு வந்து அஞ்சாமல் வாக்களித்து தங்களின் உரிமையா நிலைநாட்ட வேண்டிய தருணம் இது. பக்காத்தான் ராயாட் என்ற மக்கள் கூட்டணிக்கு வாக்களிப்பதென்றாலும் அஞ்சாமல் வாக்களியுங்கள். நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை” என்றும் காந்தன் கூறினார்.

இன்று கோலாலம்பூரில் தான் கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் பேசிய முன்னாள் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினரும், ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ வி.எல்.காந்தன், “பிரதமர் நஜிப் நல்லவர்தான். நல்ல விஷயங்களை அமுல்படுத்தத்தான் நினைக்கின்றார். ஆனால் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மறுக்கும் நிலைமைதான் இன்றைக்கு தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு இருக்கின்றது” என்று வருத்தமுடன் கூறினார்.

நோர்டினுக்கும் – இப்ராகிம் அலிக்கும் பதவிகள்

“என்றைக்கு நஜிப், சுல்கிப்ளி நோர்டினுக்கும் இப்ராகிம் அலிக்கும் இடமளித்தாரோ, அப்போதே கட்சியின் ஆதிக்கமும் அதிகாரமும் அவர் வசம் இல்லை என்பதும் அம்னோ-தேசிய முன்னணியின் பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருப்பது டாக்டர் மகாதீர்தான் என்பதும் தெளிவாகிவிட்டது.  எனவே, இனியும் தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைமைத்துவம் மீதுள்ள நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன்” என்று காந்தன் கூறினார்.

“அம்பிகா ஒருமுறை நடத்திய கருத்தரங்கில் ஒரு கூட்டத்தினரோடு வந்து கலாட்டா செய்து வன்முறையில் இறங்கிய சுல்கிப்ளி நோர்டினுக்கு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியர்களை தரக் குறைவாக பேசிய இப்ராகிம் அலிக்கும் தொகுதி மறைமுகமாக வழங்கப்பட்டுள்ளது. இந்துக்களை அவமதிக்கும் நோக்கில் மாட்டுத் தலைகளை இழுத்துக் கொண்டு சென்ற சிலரை சட்டமன்ற வேட்பாளர்களாகவும் அம்னோ நிறுத்தியுள்ளது என்பதைக் காணும்போது வேதனையாக இருக்கின்றது” என்றும் ம.இ.காவின் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவரும், முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினருமான காந்தன் சுட்டிக் காட்டினார்.

அதே நேரத்தில் மீண்டும் தேசிய முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதுவும் உங்களின் உரிமை” என்றும் காந்தன் வலியுறுத்தினார்.

“இந்த விவகாரத்தில் பெர்சே இணைத் தலைவர் டத்தோ அம்பிகாவின் நிலைப்பாட்டை நான் பின்பற்ற விரும்புகின்றேன். சுதந்திரமான, நியாயமான பொதுத்தேர்தலை நிலைநிறுத்த விரும்பும் அதே நேரத்தில் தான் சொல்ல வேண்டிய கருத்துக்களை சொல்ல வேண்டிய  நேரத்தில் அவர் சொல்லத் தயங்கியதே இல்லை. இருப்பினும் யாருக்கு வாக்களியுங்கள் என்பதை சொல்லாமல் வாக்களிப்பின் முக்கியத்துவத்தையும், சுதந்திரமான, ஜனநாயக முறையிலான தேர்தல் நடைமுறைகளையும் வலியுறுத்தும் அவரது பாணியை நானும் பின்பற்ற விரும்புகின்றேன்” என்றும் காந்தன் தெரிவித்தார்.

வேதமூர்த்தி ஹிண்ட்ராப்பின் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு அரசியல் பேரத்தில் ஈடுபட்டதும் இந்தியர்களின் மனங்களில் பெருமளவில் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டதாகவும் காந்தன் தெரிவித்தார்.

டத்தோ வி.எல்.காந்தன் அவர்களின் செய்தியை கீழ்க்காணும் காணொளியில் (வீடியோ) காணலாம்.

please install flash