கோலாலம்பூர் – இந்திய சமுதாயத்தின் ஏழ்மை நிலை மக்களுக்கும், தனித்து வாழும் தாயார்களுக்கும், அனாதைக் குழந்தைகளுக்கும் ஆதரவு தரும் புகலிடமாக நீண்ட காலமாக அமரர் அன்னை மங்களத்தின் தலைமையில் பூச்சோங்கில் செயல்பட்டு வந்திருக்கும் இயக்கம் சுத்த சமாஜம்.
அந்த மையத்தில் தற்போது 60-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். மேலும் இங்கு தங்கியிருக்கும் தனித்தும் வாழும் பெண்களுக்கும் சமாஜம் ஆதரவு தந்து வருகிறது.
சுத்த சமாஜம் சங்கத்தின் மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய தலைவராக வலம் வந்த டத்தின் படுக்கா டாக்டர் அன்னை மங்களம் அவர்கள் (Yang Bahagia Datin Paduka (Dr) Mother A Mangalam, (Pure Life Society) கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பள்ளியையும் ஆசிரமத்தையும் வெற்றிகரமாக வழி நடத்தி வந்தார். கடந்த ஜூன் 10 ஆம் தேதி அன்னை மங்களம் தன் 97-வது வயதில் காலமானார்.
அன்னை மங்களம் மறைவுக்குப் பின்னர் சுத்த சமாஜத்தின் தலைவராக மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவரும் ஒரு சமூகப் போராளியுமான டத்தோ அம்பிகா சீனிவாசன் பதவி ஏற்றுக் கொண்டார். சிலாங்கூர் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ வி.எல்.காந்தன் சமாஜத்தின் உதவித் தலைவராக செயல்படுகிறார்.
டத்தோ அம்பிகா சீனிவாசன் தலைமையில் இப்போது சுத்த சமாஜம் சிறந்த முறையில் இயங்கி வருவதாக தெரிவித்த டத்தோ வி.எல். காந்தன் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 17) மனித வள அமைச்சர் மாண்புமிகு வ.சிவகுமாரை மரியாதை நிமித்தம் அவரின் நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து சமாஜத்தின் பணிகள், செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
முழுக்க, முழுக்க நல்ல உள்ளங்களின் உதவியோடு செயல்படும் சுத்த சமாஜத்தில் எதிர்காலம் சிறப்பாக அமைய நிதியுதவிகளும் அரசாங்க ஆதரவும் தேவைப்படுவதாக காந்தன் சிவகுமாரிடம் விளக்கினார்.
சுத்த சமாஜ இல்லத்திற்கு சிறப்பு வருகை புரியும் படியும் அமைச்சர் சிவகுமாருக்கு டத்தோ வி.எல். காந்தன் அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர் சிவகுமார் விரைவில் சுத்த சமாஜத்திற்கு வருகை தருவதாகவும், இதுபோன்ற நல்ல சமூகப் பணிகளைச் செய்துவரும் சுத்த சன்மார்க்க சமாஜத்திற்கு உதவிக் கரம் நீட்டுவேன் என்று உறுதியளித்தார்.