பெட்டாலிங் ஜெயா, மே 8 – திட்டமிட்டபடி இன்று இரவு தேர்தல் முடிவுகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் நடக்கும் என்று பிகேஆர் கட்சியின் வியூக இயக்குனரான ரபிஸி ரம்லி அறிவித்துள்ளார்.
மேலும் தேசிய காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் ஓமர் இப்போராட்டத்தை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவித்திருப்பது தனக்கு தெரியும் என்றும், ஆனால் அதையும் மீறி இன்று இரவு கிளானா ஜெயா அரங்கத்தில் 8.30 மணியளவில் கட்டாயம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இப்போராட்டம் தொடர்பாக பிகேஆரின் தகவல் தொடர்பு இயக்குனர் நிக் நாஸ்மி நிக் அகமட் ஏற்கனவே காவல்துறையிடம் தெரிவித்துவிட்டதாகவும், அமைதிப்போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையிடமிருந்து முறையாக அனுமதி ஏதும் பெறத்தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக நீதி கேட்க விரும்பும் அனைத்து மலேசிய மக்களும் இன்று இரவு கறுப்பு சட்டை அணிந்து கிளானா ஜெயா அரங்கத்திற்கு வருமாறு தான் கேட்டுக்கொள்வதாகவும் ரபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.