Home 13வது பொதுத் தேர்தல் தேர்தலில் திருப்தி இல்லாதவர்கள் புகார் கொடுக்கலாம்- தேர்தல் ஆணையம்

தேர்தலில் திருப்தி இல்லாதவர்கள் புகார் கொடுக்கலாம்- தேர்தல் ஆணையம்

591
0
SHARE
Ad

Wan Ahmad Omarகோலாலம்பூர், மே 8- நடந்து முடிந்த நாட்டின் பதின்மூன்றாவது பொதுத் தேர்தல் முடிவில் திருப்தி கொள்ளாதவர்கள்  புகார் மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையத்தின் துணை தலைவர் டத்தோ வான் அகமட் வான் ஓமார் (படம்) நேற்று கூறினார்.

தேர்தல் முடிவுகள் அரசாங்க பதிவேட்டில் சேர்க்கப்பட்ட 21 நாட்களுக்குப் பின்னர் பொதுமக்கள் அதுகுறித்து தங்களது புகார் மனுவைத் தாக்கல் செய்யலாம் என்று அவர் சொன்னார்.

இன்னும் இரண்டு வாரங்களில் தேர்தல் முடிவுகள் அரசாங்க பதிவேட்டில் சேர்க்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மாநிலங்களிலுள்ள உயர்நீதிமன்றங்களில் அவர்கள் தங்களது புகார் மனுவைத் தாக்கல் செய்யலாம் என்ற அவர், அப்புகார்களுக்கு 6 மாதங்களுக்குள் தீர்வு காணப்படும் எனவும் சொன்னார்.

‘ஒருவேளை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் அவர்களுக்கு திருப்தி இல்லை என்றால், இறுதி முடிவுக்காக கூட்டரசு  நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்யலாம்’ என்று அவர் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் இரவு ‘ஹலோ மலேசியா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு சொன்னார்.

கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது 30 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

ஆனால், 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது அதிகமான அதாவது 40 புகார் மனுக்கள் பெறப்பட்டன என்றார் அவர்.

மேலும் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தேர்தல் முடிவுகள் தேசிய முன்னணிக்கு சாதகமாக இல்லாததால் 26 புகார் மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

ஊழல், முறைகேடுகள், சட்டவிதிகளை மீறுதல் போன்ற காரணங்களை முன்வைத்து புகார் மனு கொடுக்கலாம் என்றார் அவர்.

தொடர்ந்து கூறுகையில், தேர்தல் முடிவுகள் குறித்து எதிர்ப்புத் தெரிவிக்க நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால், அதனை முறையான வழிகளில் தெரிவிக்க வேண்டும்.

மாறாக, வீதிகளில் போராட்டங்களை நடத்தி, தேர்தலை புறக்கணிக்கிறோம் என உலக மக்களுக்குத் தெரிவிக்கக்கூடாது என்று அவர் சொன்னார்.