Home நாடு நேரடிப் பார்வை: கிளானா ஜெயா அன்வார் கூட்டம் – அரங்கினுள் 1 லட்சம் பேர்; வீதிகளில்...

நேரடிப் பார்வை: கிளானா ஜெயா அன்வார் கூட்டம் – அரங்கினுள் 1 லட்சம் பேர்; வீதிகளில் 50,000 பேர்!

628
0
SHARE
Ad

Kelana-Jaya-2---Featureகிளானா ஜெயா, மே 9 – நேற்றிரவு மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் மாநிலத்தின் கிளானா ஜெயா அரங்கில் நடத்திய மாபெரும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் கறுப்பு நிற ஆடைகளில் திரண்டு வந்து தங்களின் ஆதரவைப் புலப்படுத்தினர்.

வரலாறு காணாத கூட்டமாக திகழ்ந்த இந்த பேரணியில் அரங்கிற்கு உள்ளே ஒரு லட்சம் பேர் திரண்டிருக்க அரங்கத்தின் வெளியே சாலைகளிலும் சுற்று வட்டாரங்களிலும் சுமார் 50,000 பேர் திரண்டிருந்தனர்.

அரங்கத்தின் வெளியே செல்லும் எல்டிபி நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு கார்கள்நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அந்த நெடுஞ்சாலையில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

அந்த இடத்தில் நிலைமையைச் சரி செய்ய ஒரு போலீஸ்காரர் கூட காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வந்திருந்த கூட்டத்தினரில் கணிசமான எண்ணிக்கையில் சீன இளைஞர்களும், யுவதிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஆங்காங்கே குழுவினராக வலம் வந்து “நாங்கள் சீனர்கள் அல்ல! மலேசியர்கள்” என்ற சுலோகங்கள் தாங்கிய அட்டைகளை அனைவருக்கும் காண்பித்துக் கொண்டிருந்தனர்.

நடந்து பொதுத் தேர்தல் முடிவுகளை ஜனநாயக ரீதியான தேர்வு மற்றும் கண்ணோட்டத்தில் பார்க்காமல் இன அடிப்படையில் தேசிய முன்னணி தலைவர்கள் விமர்சித்து வருவதைக் கண்டிக்கும் வகையிலேயே இந்த பேரணியில் பல சுலோகங்கள் ஏந்திச் செல்லப்பட்டன.

ஒரு குழுவினர் “1Malaysia Bangla” (அதாவது ஒரே மலேசியா பங்க்ளா)என்ற சுலோக அட்டையை ஏந்திச் சென்று அனைவரையும் சிரிக்க வைத்தனர். இந்த பொதுத் தேர்தலில் மலேசியக் குடியுரிமை இல்லாத பல வங்காளதேச நாட்டினர் திருட்டுத்தனமாக வாக்களித்தனர் என்ற குற்றச்சாட்டு பல இடங்களில் எழுந்ததைக் குறிக்கும் விதமாகவே இந்த சுலோக அட்டைகள் ஏந்திச் செல்லப்பட்டன.

அன்வார் – லிம் கிட் சியாங் மோட்டார் சைக்கிளில் வருகை

அரங்கை நோக்கிச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்ததால், கூட்டத்திற்கு வருகை தந்த அன்வார் இப்ராகிமும், லிம் கிட் சியாங்கும் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமரவைக்கப்பட்டு மேடைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மண்டபத்தினுள், ஊதுகுழல் போன்ற சப்தம் எழுப்பும் கருவியை வைத்துக் கொண்டு அனைவரும் சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்ததால், தலைவர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் தொலை தூரத்தில் இருந்தவர்களுக்கு அறவே கேட்கவே இல்லை.

ஆனாலும், வந்திருந்தவர்கள் யாரும், உரைகளைக் கேட்க வந்தவர்கள் போல் தெரியவில்லை. தங்களின் ஆதரவை மக்கள் கூட்டணிக்கு காட்டவேண்டும், தங்களின் எதிர்ப்பை தேசிய முன்னணிக்கு காட்ட வேண்டும் என்ற உணர்விலேயே வந்திருந்தவர்கள் செயல்பட்டனர்.

அரங்கத்தைச் சுற்றி ஏராளமான தற்காலிக உணவகங்கள், சுவை பான கடைகள் எழும்பியிருந்தன.

மழைத் தூறல் விடாமல் அவ்வப்போது பெய்து கொண்டிருந்தாலும் யாரும் அதனைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

கூட்டம் முடிவதற்கு சற்று முன்பாகவே வெளியேறியபோது ஏறத்தாழ 11 மணி இருக்கும். அப்போது கூட ஆயிரக்கணக்கானோர் கறுப்பு நிற சட்டைகளில் அரங்கத்தை நோக்கி தூரத்தில் எங்கேயோ காரை நிறுத்தி விட்டு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

எங்கே செல்லும் இனி மலேசிய அரசியல்?

கிளானா ஜெயா கூட்டம் மொத்தத்தில் மக்கள் கூட்டணியின் பலத்தை மறு உறுதி செய்வது போலவும், மக்களின் பிரதமராக – தலைவராக அன்வார்தான் இன்னும் திகழ்கின்றார் என்பதைக் காட்டும் விதமாகவும் தெளிவாகத் தெரிந்தது.

வந்திருந்த கூட்டத்தினரும் நாங்கள் மலேசியர்கள் என்ற உணர்வைக் காட்டுவதிலேயே குறியாக இருந்தனர். யாரும் கட்சி அடையாளத்தையோ தங்களின் இன அடையாளத்தையோ காட்ட முற்படவில்லை.

அதே போன்று இந்த கூட்டம் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட கூட்டம் போல் தெரியவில்லை. அவர்களாகவே, தங்களின் உணர்வுகளை, உணர்ச்சி வேகத்தை வெளிப்படுத்துவதற்காக திரண்ட கூட்டம் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

பொதுத் தேர்தல் முடிந்து இரண்டு நாட்களுக்குள்ளாகவே இவ்வாறு பிரம்மாண்டமாகத் திரண்ட இந்த கூட்டம் – அதனைக் கொண்டு மக்கள் கூட்டணி தலைவர்கள் எத்தகைய வியூகங்களை வகுக்கப் போகின்றனர் – தங்களின் அடுத்த கட்ட அரசியலை எப்படி கொண்டு செல்லப் போகின்றார்கள் – மக்களின் ஆதரவு வெள்ளத்தை தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டில் எவ்வாறு வைத்திருக்கப் போகின்றார்கள்- என பலப் பல கேள்விகளையும் கூட்டத்திலிருந்து வெளியேறும்போது நமக்குள் விதைத்தது, இந்த மாபெரும் மக்கள் பேரணி!

-இரா.முத்தரசன்