தாப்பா, மே 9 – தாப்பா நாடாளுமன்ற தொகுதி பிகேஆர் வேட்பாளரான வசந்தகுமாரின் மெய்க்காப்பாளர் கே. முருகன் (வயது 36).
இவர் கடந்த மே 1 ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு பத்துகாஜாவுக்கு அருகே உள்ள ஒரு குட்டையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததோடு, முகமும் கோரமாக சிதைக்கப்பட்டிருந்தது.
அதோடு கைகள் கம்பியால் கட்டப்பட்டு, சுமார் 52 கிலோ எடையுள்ள இரும்புப் பொருட்களோடு சேர்த்து குட்டையில் வீசப்பட்டுள்ளது.
கட்சியின் மீது மிகுந்த விசுவாசம் கொண்ட முருகன், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி வசந்தகுமாரின் மெய்க்காப்பாளராகச் சேர்ந்தார்.
இது குறித்து வசந்தகுமார் (படம்) கூறுகையில், “எனது உதவியாளர் இப்படி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்க்கும் போது என் மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகிறது. இது ஒரு அரசியல் கொலை என்றே நான் நம்புகிறேன்.
காரணம் பிரச்சாரத்தின் போது எங்களைப் பின் வாங்கச்சொல்லி பல மிரட்டல்கள் வந்தன. முருகனுக்கும் தனிப்பட்ட முறையில் அது போன்ற பல மிரட்டல்கள் வருவதாக என்னிடம் தொடர்ந்து கூறி வந்தார்.
இருப்பினும் அவர் தாப்பா மக்களின் நலனுக்காக என்னுடன் தொடர்ந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டுவந்தார்.
ஆனால் கடைசியில் இப்படி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பார் என்று எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கைப்பேசி அழைப்புக்குப் பின் இரவில் வெளியே சென்ற முருகன்
முருகன் காணாமல் போன தினமான மே 1 ஆம் தேதி இரவு, தாப்பாவிலுள்ள தாமான் ஸ்ரீ பீடோரில் அவரது வசிப்பிடத்திற்கு அருகே, பிகேஆர் சார்பாகப் பிரச்சாரக்கூட்டம் ஒன்று நடந்துள்ளது. சுமார் 500 பேர் கலந்து கொண்ட அந்த பிரச்சாரக் கூட்டத்தில் வசந்தகுமார் உரையாற்றியுள்ளார்.
அன்று இரவு 1 மணியளவில் முருகனின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதன் பின்னர் அவர் தனது மோட்டாரில் உடனடியாக வெளியே சென்றதாகவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும் முருகனின் சகோதரி வாசுகி தெரிவித்துள்ளார்.
முருகன் காணாதது குறித்து அவரது சகோதரி பிகேஆர் அலுவலகத்தில் வந்து தன்னிடம் முறையிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளித்ததாகவும் நேற்று முருகனின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட வசந்தகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பத்துகாஜா குட்டையில் பிணம் ஒன்று மிதப்பதாக பொதுமக்களிடமிருந்து வந்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். முகம் முழுவதும் சிதைக்கப்பட்டிருந்ததால் இறந்தது முருகன் தான் என்று அடையாளம் காணப்பட இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.