Home 13வது பொதுத் தேர்தல் தாப்பா தேர்தல் வெற்றியை எதிர்த்து வசந்தகுமார் வழக்கு?

தாப்பா தேர்தல் வெற்றியை எதிர்த்து வசந்தகுமார் வழக்கு?

866
0
SHARE
Ad

Vasanthakumar-Feature---2மே 27 – 13வது பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் ம.இ.கா. சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்ட டத்தோ எம்.சரவணனிடம் தோல்வி கண்ட பிகேஆர் கட்சி வேட்பாளர் கே.வசந்தகுமார், அங்கு பல முறைகேடுகள் நடந்ததாக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஃபிரி மலேசியா டுடே இணைய செய்தித் தளத்திடம் பேசிய வசந்தகுமார், தாப்பா நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ரத்து செய்து அங்கு மறுதேர்தல் நடத்தும் அளவுக்கு போதுமான காரணங்கள் இருப்பதாக பிகேஆர் கட்சி நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே இந்த தொகுதியில்தான் அதிகமான அரசியல் வன்முறையும் தேர்தல் முறைகேடுகளும் நடந்ததாகவும் வசந்தகுமார் வர்ணித்துள்ளார்.

இதுவரை 10 புகார்கள்

இதுவரை, மே 5ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாள்முதல், தான் 10 புகார்களை காவல் துறையிடம் பதிவு செய்திருப்பதாகவும் வசந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச் சீட்டுகள் வாக்குப் பெட்டிகளுக்கு வெளியே காணப்பட்டது, சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் தனித்தனியே இல்லாமல் ஒரே பெட்டியில் காணப்பட்டது போன்றவற்றை முக்கிய முறைகேடுகளாக வசந்தகுமார் சுட்டிக் காட்டியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தருணத்தில் ஏழு வாக்குப் பெட்டிகள் காணப்படவில்லை என்றும், தேர்தல் முடிவுகளுக்கான “பாரம் 14” முறையாக பூர்த்தி செய்யப்படாமலும், குறைவாகவும் இருந்ததாகவும் வசந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

“இதுபோன்ற மேலும் பல முறைகேடுகள் நடந்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, வாக்குகள் சரிபார்க்கப்படும் மையத்தில் நான் அங்கிருந்த காவல் துறையினரால் வெளியே துரத்தப்பட்டேன். ஆனால் என்னோடு போட்டியிட்ட சரவணன் அந்த மையத்துக்குள் மற்ற தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் அனுமதிக்கப்பட்டார்” என்றும் வசந்தகுமார் கூறியுள்ளார்.

வாக்குகள் சரிபார்க்கப்படும் மையத்திலிருந்து தான் வெளியே துரத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில், சரவணன் வெற்றி பெற்றார் என தேர்தல்முடிவுகள் அறிவிக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்ட வசந்தகுமார், இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் அங்கு மறுதேர்தல் நடத்தப்படுவதற்கு எல்லா சாத்தியங்களும் இருப்பதாகவும் கூறினார்.

பிரச்சாரம் செய்வதற்கும் தடை

அதுமட்டுமல்லாமல், பிரச்சாரம் நடந்த கால கட்டத்தில், செண்டரியாங் பகுதியில் ரேலா பாதுகாப்பு படையினர், பூர்வகுடியினரின் குடியிருப்புக்களின் நுழைவாயில்களில் அமர்த்தப்பட்டு, அங்கு எதிர் கட்சி வேட்பாளர்கள் யாரும் பிரச்சாரத்திற்காக உள்ளே நுழையாமல் இருப்பதை உறுதி செய்தனர் என்றும் வசந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக, இந்த தேர்தல் முறைகேடுகளினால் தாப்பா வேட்பாளர் சரவணனின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடுக்கும் முடிவை தான் கட்சியின் தலைமைத்துவத்திடமே விட்டு விட்டதாகவும், மற்ற அரசியல் வன்முறை புகார்கள் குறித்து காவல் துறையின் உதவியை தான் நாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிகேஆர் கட்சி சார்பாக போட்டியிட்ட வசந்தகுமார் 7,927 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி வேட்பாளர் சரவணனிடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் வெற்றி பெற முடியுமா?

இருப்பினும் தாப்பா தேர்தல் முடிவுகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகமே!

காரணம், இத்தகைய தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது, நீதிபதிகள் கவனிக்கும் முக்கிய அம்சம் என்னவென்றால் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட்டது என்பதைத்தான்.

7,000 வாக்குகளுக்கும் மேற்பட்ட வித்தியாசத்தில் வசந்தகுமார் தோல்வியடைந்திருப்பதால், அவருக்கு சாதகமாக இந்த வழக்கை நீதிமன்றம் அணுகுவதற்கு வாய்ப்புகள் குறைவே.

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஒருவர் தோல்வி அடைந்தால், முறைகேடுகள் நடக்காமல் இருந்தால், தான் வென்றிருக்க முடியும் என அவர் வழக்கு தொடுக்கலாம். நீதிமன்றமும் அதனை சாதகமாகவே கவனிக்கும்.

மக்கள் கூட்டணியும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தாங்கள் தோல்வியுற்ற தொகுதிகளில் மறுதேர்தல் கோரி வழக்கு தொடுக்கப் போவதாக கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தாப்பா தொகுதிக்கு மறு தேர்தல் கோரி பிகேஆர் கட்சி வழக்கு தொடுக்குமா என்பது இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.