Home 13வது பொதுத் தேர்தல் “தாப்பாவில் 100 ரிங்கிட்டுக்கான பற்றுச்சீட்டுக்கள்” – வசந்தகுமார் புகார்

“தாப்பாவில் 100 ரிங்கிட்டுக்கான பற்றுச்சீட்டுக்கள்” – வசந்தகுமார் புகார்

461
0
SHARE
Ad

tapah1பெட்டாலிங் ஜெயா, மே 29 – தேர்தல் பிரச்சாரங்களின் போது தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கு 100 ரிங்கிட்டுக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக வசந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுத்தேர்தலில் தாப்பா தொகுதியில் பிகேஆர் சார்பாகப் போட்டியிட்ட வசந்தகுமார், தனக்கு எதிராகப் போட்டியிட்ட ம.இ.கா வேட்பாளர் சரவணன் பல்வேறு முறைகேடுகளை நடத்தி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாகக் கூறி, கடந்த மே 26 ஆம் தேதி தாப்பா காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது அத்தொகுதி மக்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களின் போது வழங்கப்பட்ட 100 ரிங்கிட் பற்றுச்சீட்டுகளை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“சுமார் 600 பற்றுச்சீட்டுக்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அப்பற்றுச் சீட்டுக்களில் தாப்பா தொகுதியைச் சேர்ந்த ம.இ.கா தலைவர் டாக்டர் எம்.மாலாசிங்கத்தின் கையெழுத்து இடப்பட்டுள்ளது. மக்களுக்கு இது போன்ற பற்றுச்சீட்டுக்களை வழங்குவது லஞ்சம் கொடுப்பதற்கு சமம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றும் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது குறித்து தாப்பா தொகுதியில் மஇகா சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.சரவணன் கூறுகையில், “தேர்தல் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட கட்சி உறுப்பினர்களுக்கு ஊதியமாக அப்பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டன. தாப்பா தொகுதியில் எனக்கு எதிராக வசந்தகுமார் மட்டும் போட்டியிடவில்லை, அவரோடு சேர்த்து இரண்டு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். ஆனால் அவர்கள் இதுவரை என் மீது  எந்த விதமான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தவில்லை. கட்சி உறுப்பினர்களுக்கு தான் அப்பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டன என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.