ஷா ஆலம், மே 9 – கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற தொகுதியில் பிகேஆர் சார்பாகப் போட்டியிட்டு மீண்டும் வெற்றிபெற்றுள்ள டாக்டர் சேவியர் ஜெயக்குமார், தனது தொகுதி மக்களுக்கு நன்றி கூறியதோடு, தேர்தலில் பல முறைகேடுகள் செய்து மக்களின் முழு வெற்றியை தேசிய முன்னணி பறித்துக்கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில் சேவியர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:-
“இந்த 13 வது பொதுத்தேர்தலில் எனது வெற்றிக்கும் பக்காத்தான் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களித்த எல்லா வாக்காளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தலில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வேட்கையுடன் எங்கள் வெற்றிக்குப் பாடுபட்ட அனைத்துப் பொது இயக்கங்களின் உறுப்பினர்களுக்கும், பூஜைகள் நடத்திய எல்லா ஆலயங்களுக்கும், வாழ்த்து விளம்பரங்கள் வழங்கிய பிரமுகர்களுக்கும், செய்திகள் வெளியிட்டு உதவிய மின்னியல் ஊடகங்கள், பத்திரிக்கையாளர்களுக்கும், சமூக வலைதளங்களின் வழி தேசிய அளவில் புதியதொரு மலேசியாவை உருவாக்கும் இலட்சியங்களுடன் பிரச்சாரம் செய்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்கள் வெற்றியல்ல உங்கள் வெற்றி.”
“இத்தேர்தலில் ஒன்றுபட்ட ஒரு மலேசியாவின் வழி எல்லா மக்களின் மேன்மைக்கான பல திட்டங்களை முன் வைத்தோம். ஒன்றுபட்ட ஒரு தேசத்தை உருவாக்குவதற்கு இனவாத அரசியல் கட்சிகளால் ஒருபோதும் முடியாது என்பதனைக் கடந்த 56 ஆண்டுகால ஆட்சி நமக்கு உணர்த்தியிருக்கும்.
ஆகையால் பல இன மலேசியர்களை உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளும் அரசியல் இயக்கங்களின் கூட்டணியான பக்காத்தான், அதன் திட்டங்களை மக்களின் தேவைகளை முன்கூட்டியே எடுத்துரைக்கும் வண்ணம் அதன் தேர்தல் அறிக்கையை முன்கூட்டியே வெளியிட்டது. ஆனால் இனபேதம் பேசும் சுல்கிப்ளி நோர்டின் போன்றவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியும், இன்று கடுமையான தோல்வியைத் தழுவியுள்ள வேளையிலும், அதன் தோல்விகளுக்கு இன அடிப்படையில் காரணம் கற்பிப்பது, இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பதனையே உணர்த்துகிறது.”
“நாங்கள் எதிர்பார்த்தது போல் எங்கள் தேர்தல் அறிக்கையில் பலவற்றை மாற்றணி திருடி கொண்டது. பிறகு அதை, தனது அறிக்கையாக வெளியிட்டதில் மகிழ்ச்சியே! ஆனால் நம் சமுதாயத்தின் உயர்வுக்கு மிக முக்கியமான, இலவச உயர்கல்வியை ஏற்றுக் கொள்ள வில்லை, அரசாங்கச் செயல் பாடுகளில் இனவாதம், ஏமாற்றுத்தனம் ஓங்கி நிற்கிறது. தேர்தலைக்கூட நியாயமாக நடத்தாதவர்கள் மக்களுக்கு எப்படி நீதி வழங்குவார்கள்?”
“அதற்கான ஆதாரம், எல்லா வாக்காளர்கள் கைகளிலும் இருக்கிறது. அழியா மை இரண்டு வாரங்களுக்கு விரல்களில் இருக்கும் என்று வாக்குறுதிகள் என்ன ஆனது? பல அந்நியர்கள் வாக்கு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதனை பல முறை புகார் செய்தும், அவர்கள் வாக்களிக்க வந்ததும், சிலரை மக்கள் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்காதது எல்லாம் நல்ல எடுத்துக்காட்டு.”
“மக்கள் இன்று எதிர்த்து ஓட்டுப் போடக் காரணம், இன வாதமில்லை மாறாக அநீதியை எதிர்க்க அவர்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தியுள்ளனர் என்பதனைப் மறைத்து அவர்களின் தவறான நடத்தைக்கு மீண்டும் இன வர்ணம் பூசுவது மிக மடமையான செயல், ஆபத்தான கலாச்சாரம். இவர்களை திருத்த தொடர்ந்து நமது போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. தவறானவர்களிடம் அதிகாரமுள்ளதால் உங்கள் வெற்றியை மீண்டும் களவாடி விட்டனர். இதை நாம் கண்டுகொள்ளாவிட்டால் நமது சந்ததி கடுமையான பல சவால்களை எதிர் நோக்கும் என்பதனை அனைத்து மலேசியர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
.