மே 11 – பொதுத் தேர்தலில் சந்தித்த தோல்விகளைத் தொடர்ந்து கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கோ சூ கூன் அடுத்த வாரம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவரோடு கட்சியின் தலைமைச் செயலாளரும், பினாங்கு தேசிய முன்னணி தலைவருமான டெங் சாங் இயோவும் தனது பதவிகளில் இருந்து விலகுகின்றார்.
மேலும், கெராக்கான் கட்சியும் அமைச்சரவையில் இடம் பெறாது என்றும் மத்திய அரசாங்கத்தில் எந்த பதவிகளையும் பெற்றுக் கொள்ளாது என்றும் கோ சூ கூன் அறிவித்துள்ளார்.
இருப்பினும், மாநில ரீதியிலான அரசாங்கப் பொறுப்புக்களை கட்சி ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
பொதுத் தேர்தலில் கெராக்கான் கட்சி சந்தித்த மோசமான தோல்விகளுக்குப் பொறுப்பேற்று தாங்கள் பதவி விலகுவதாகவும் கோ சூ கூன் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் துணைத் தலைவர் சாங் கே யூன் இடைக்கால தலைவராக, கட்சித் தேர்தல்கள் நடைபெறும் நாளான அக்டோபர் 26ஆம் தேதி வரை நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதியிலும் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே இந்த பொதுத் தேர்தலில் கெராக்கான் கட்சியால் வெல்ல முடிந்தது.
கட்சியில் புதிய தலைவர்கள் இடம் பெற்று அவர்களின் உருமாற்ற சிந்தனைகளை வலுப்படுத்துவதற்கும், இந்த பதவி விலகல்கள் வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் கோ சூ கூன் அறிவித்துள்ளார்.
கெராக்கான் அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்றாலும் அதனால் பாதிப்பில்லை என்றும் எல்லா மலேசியர்களுக்கும் குரல் கொடுக்கும் சிறந்த தலைவர்கள் தேசிய முன்னணியில் இடம் பெற்றிருப்பார்கள் என்றும் கோ சூ கூன் கூறினார்.