Home நடந்த நிகழ்ச்சிகள் “கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர்.

“கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர்.

691
0
SHARE
Ad

Anwar-Batu-Kawan-12-May---2மே 12 – கிளானா ஜெயாவில் கடந்த மே 8ஆம் தேதி பொதுத் தேர்தல் முறைகேடுகளை எதிர்த்து நடைபெற்ற மாபெரும் பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டதை அடுத்து, நேற்று பினாங்கில் பத்து கவான் நகரில் நடைபெற்ற எதிர்ப்பு பேரணியிலும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் திரண்டனர்.

#TamilSchoolmychoice

பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதற்கு தேசிய முன்னணியும், தேர்தல் ஆணையமும் துணை போனதாகவும் கூறி அன்வார் இப்ராகிமும் மக்கள் கூட்டணியும் நாடு முழுமையிலும் நடத்திவரும் எதிர்ப்புப் பேரணிகளுக்கு கறுப்பு 505 எனப் பெயர் வைத்திருக்கின்றனர்.

நேற்று பினாங்கின் பத்து கவான் நகரில் நடைபெற்ற பேரணியில் பக்கத்து மாநிலங்களான கெடா, பேராக் மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். வந்திருந்தவர்களில் அதிகமானோர் இளைஞர்களும் யுவதிகளும் ஆவர்.

வழக்கம்போல் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் இருபுறமும் உள்ள நெடுஞ்சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பினாங்கு முதல்வர் லிம் குவான், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு போன்ற முக்கியமான தலைவர்கள் கூட போக்குவரத்து நெரிசலால் சிக்கி, சுமார் 5 கிலோ மீட்டர் தள்ளி கார்களை நிறுத்தி வைத்து விட்டு கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர வேண்டிய நிலைமைக்கு ஆளாயினர்.

அன்வார் இப்ராகிம் இரவு 9 மணியளவில் மேடைக்கு வந்து சேர்ந்தபோது பலத்த கரகோஷத்தோடும், காதைப் பிளக்கும் ஊதுகுழல்களின் சத்தத்தோடும் வரவேற்கப்பட்டார்.

ஏறத்தாழ 4 மணி நேரம் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் “நாங்கள் மலேசியர்கள்” – “இது மக்களின் சுனாமி” – “இனத் துவேஷத்தை விட்டொழிப்போம்” என்ற பொருள்படும் வாசகங்களை ஏந்தி வலம் வந்தனர்.

நள்ளிரவைத் தாண்டியும் கலையாமல் நின்ற கூட்டத்தினர் முழுமையாகக் கலைந்து செல்லும்போது ஏறத்தாழ பின்னிரவு 3 மணி ஆகிவிட்டிருந்தது.